நான் காணும் மனிதர்கள்.
அன்று சனிக்கிழமை பெற்றோரியம் (Art of parenting) பற்றி பேசுவதற்கு ஹங்வெல்ல பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
வழியில் செல்லும் போது எதேச்சையாக ஒரு சம்பவத்தை கண்ணுற்றேன்.தாய் ஒருவர் தன் மகனையும் மகளையும் அழைத்துக் கொண்டு கடை வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அவரோடு இன்னொரு சகோதரியும் வந்துக் கொண்டிருந்தார். மகன் சிறிது நேரத்தில் அழத் தொடங்கி விட்டான். அதற்கு காரணம் தாயிடம் எதையோ எதிர்பார்த்து கேட்ட வினாவிற்கு திருப்தியாக பதில் அளிக்காமை ஆகுமென நான் ஊகித்துக் கொண்டேன்.
அவன் தொடர்ந்தும் தன் தேவையை முன்வைக்க தவரவில்லை. கோபமடைந்த தாய் அவனது தலையில் பல முறை குட்டினார்.
இந் நிகழ்வு என்னை கவலையில் ஆழ்தியது. என்னுடைய இறந்த காலத்திற்கு அழைத்துச் சென்றது.
அது 1998 அல்லது 1999 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும். எங்கள் வீட்டுக்கு மின்சார இணைப்பு செய்யப்பட்ட முதல் இரண்டு வருடங்கள். அப்போது எனக்கு 12-13 வயதாக இருக்க வேண்டும். என் மூத்த சகோதரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. தபால் உத்தியோகத்தர் கடிதத்தினை, என் ஆசிரியர் ஒருவரிடம் கொடுத்து எங்களிடம் ஒப்படைத்து விடுமாறு கையளித்திருந்தார்.
மற்றொரு நாள் தபால் உத்தியோகத்தர் தங்களுக்கு கடிதம் கிடைத்ததா? என்று வினவும் வரை எங்கள் கைகளுக்கு அக்கடிதம் கிடைக்கவில்லை. பலமுறை கடிதம் தொடர்பாக ஆசிரியரிடம் வினவினோம். அவர் எங்கள் கையில் சேர்க்க பல நாற்கள் ஆகின.
அன்று வெள்ளிக்கிழமை, என் தாய் பாடசாலை விட்டதும் ஆசிரியரின் வீட்டிற்கு சென்று கடிதத்தை எடுத்து வருவதாக முடிவு செய்தார்.
நானும் உம்மாவும் அங்கு சென்றோம். மதிய வேளை உணவு முடிந்து ஆசிரியர் கடிதத்தைத் தேடத் தொடங்கினார். அவரின் பிள்ளைகள் தொலைக்காட்சியில் குணா படத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போதெல்லாம் தொலைக்காட்சி இல்லாத எங்கள் வீட்டில், எங்காவது சென்றாள் தொலைக்காட்சி பார்ப்பது எனக்கு பிடித்தமான ஒரு விடயம்.
அன்று தான் முதல்தடவை குணா படத்தினை பார்க்கிறேன். மிகவும் விறுவிறுப்பான ஒரு படம். படத்தில் நாங்கள் மூழ்கியிருக்க ஆசிரியர் கடிதத்தை தேடுவதில் பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருந்தார். எனது தாயும் செய்வதறியாது அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
படம் முடிய அரை மணித்தியாளங்கள் இருக்கும் பொழுது, கடிதம் கையில் கிடைத்தது. எனது தாய் நன்றி கூறிக்கொண்டு வெளியேறுவதற்கு தயாராகி என்னிடம் வந்தார்.
நானோ சுவாரசியமாக படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரம் எனக்காக அவரும் தாமதித்தார். படம் முடிவதாக இல்லை. என் மகிழ்வை கலைத்து அழைத்துச் செல்வதில் அவருக்கு விருப்பமில்லை. ஏனெனில் இன்னுமொரு முறை அப் படத்தைப் பார்ப்பதற்கு அவரால் ஒரு சந்தர்ப்பத்தைத் தர முடியுமா என்ற நம்பிக்கை அவருக்கு அப்போது இருக்கவில்லை. அதற்கு முதல் காரணம் எங்கள் வீட்டில் அப்போது தொலைக் காட்சிப் பெட்டி இல்லை. ஏன் இப்போதும் இல்லை.
அவர் வேகமாக வீட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய தேவை இருந்தது. ஏனெனில் எனது தந்தை ஒரு பாரிசவாத நோயாளியாக இருந்தார். அவருக்கு பணிவிடைகளை செய்வதில் எனது தாய்க்கு நிகர் யாருமில்லை. அதில் பயத்துடன் கூடிய ஒரு கடமையுணர்வு மிஞ்சியிருந்தது.
தாமதமாக சென்றதற்கு அவரிடம் கிடைக்கும் எதிர்வினையை நினைத்து உம்மா என்னை இப்படி அழைத்தார்.
"நான் மெதுவாக செல்கிறேன்
நீ விரைவாக வா"
எனக்கு அப்போது இவ்விரண்டு வசனங்களின் தாத்பரியமும் பெறுமதியும் விளங்கவில்லை. அப்போது எனக்கிருந்த உணர்வு படத்தின் முடிவு எப்படி அமையும் என்பதுவே.
பிற்காலத்தில் நான் தொகுத்து வெளியிட்ட,
"தமிழ் திரைப்படங்களில் காணப்படும் உளவியல் அம்சங்கள்" (collection of abnormal disorders in Tamil cinema)
என்னும் தொகுப்பில் குணா படமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. குணாவும் அபிராமியும் இறுதியல் மலையிலிருந்து குதிக்கின்றனர்.
"இது மனிதர் உணர்ந்து கொள்ள
மனித காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது".
என்ற வரிகள் இன்றும் அந்த நாள் திரைப்படத்தைப் பார்த்த ஞாபகங்களை என் முன் கொண்டுவருகிறது.
ஆனால் இருபது வருடங்கள் கழித்த பின் தான் என் தாய் அன்று எனக்கு குறிப்பிட்ட அவ்விரண்டு வசனங்களின் பெறுமதி அல்லது ஒரு தாயின் அணுகுமுறை எனக்கு புலப்பட்டது.
என் விருப்பினை,
என் சந்தோஷத்தை,
என் மகிழ்ச்சியை,
என் ரசனை உணர்வை எல்லாம் பாதிக்காது வீட்டிற்கு வேகமாக செல்லவேண்டும் என்ற சிந்தனையையும் தந்து, அவரும் நானும் பெரிய இடைவெளியிலில்லாது வீட்டுக்குச் செல்ல வேண்டிய தேவையையும் உணர்த்தி, சிலவேளை வாப்பாவின் தண்டனையும் கருத்திற்க் கொண்டு அதிலிருந்து என்னை காப்பாற்றி அவர் மெதுவாக வீட்டை சேரும் போது நான் வேகமாக சென்று அவரை அடைந்து விடுவேன் என்ற நம்பிக்கையில் என்னை திரைப்படத்தின் முடிவு காண அனுமதித்த அந்தத் தாயின் அவ்விரண்டு வசனங்களும் அவரின் அணுகுமுறையும் அன்மையில் நான் கண்ட தாயின் அணுகுமுறையோடு ஒப்பிட்டுப் பார்க்க வைத்தது.
பெற்றோரியம் என்பது, (art of parenting) ஒரு கலை. மிகப்பெரிய பொறுப்பு. கயிற்றின் மேல் நடக்கும் ஜிம்னாஸ்டிக் ஒரு போட்டி.
என் பெற்றோரை நான் பின்பற்றுவதாக இல்லை. ஆனால் அவர்கள் எப்போதும் தலை நிமிர்ந்து நான் அவர்களை பார்க்கும் அளவுக்கு என்னை வளர்த்து விட்டிருக்கிறார்கள்.
அந்த பெருமக்கள் இருவருக்கும் உயர்ந்த சுவர்க்கத்தை பிரார்த்திக்கிறேன்.
நான் காணும் மனிதர்கள் போல் நீங்களும் பல மனிதர்களை காண்பீர்கள். அவர்களிடம் கற்கும் பாடங்கள் பாட புத்தகங்களில் ஒரு நாளும் மீட்டப்படாதவை. அவை பட்டை தீட்டப்பட்ட மாணிக்கக் கற்கள்.
No comments:
Post a Comment