இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

ஈதுல் பித்ர் பெருநாள் கவிதை

அங்கொன்றும் இங்கொன்றும்
மெல்லன பெய்த
மழைத்துளி போல் 
மெதுவாக வந்தது

நாட் செல்ல 
மின்னலும் இடியும் 
என் காதுகளுக்குள் 
நம்பமுடியாது 
நுழைந்து கொண்டது

வா என்று 
வரவேற்கவும் முடியவில்லை 
போ என்று 
விரட்டவும் முடியவில்லை வேண்டுமென்றால் 
தனித்திரு என்றது

ஜாலியமும் இல்லை 
ஜாலியத்தும் இல்லை 
வாழ்க்கை வரையறுக்கப்பட்ட பின் வாழும் முறையை கற்றுத் தந்தது

அடங்க மறுத்த உறுப்புகள் 
அடங்கி கொண்டது 
வரவில்லாமல் செலவு 
சுருங்கிக் கொண்டது 
விரிந்த கை விரல்களின் 
இடையில் சிக்கிக்கொண்டது 
சில்லரைகள்

ஹிராவில் தனித்திருந்த  நாயகம் தீயில் எறியப்பட்ட இப்ராஹிம் நபி மீனின் வயிற்றில் மீண்ட யூனுஸ் நபி பாழ் கினற்றில் மட்டுமல்ல
சிறையிலும் தள்ளப்பட்ட யூசுப் நபி

எத்தனை தனிமைப்படுத்தல்கள்  விலகி இருப்பது தான் 
அருகில் இருப்பதன் 
அருமையை சொல்லும் 
தள்ளி இருந்து பார் 
இழந்தவைகளினதும் 
இழக்கப் போவதினதும்  
வலியும்  வலிமையும் தெரியும்

எத்தனை பாடங்கள் 
நாளுக்கு ஒரு வழிகாட்டல் 
மெல்ல கண்ட பனிபோல் 
புடைத்து வெளியே வருகிறது

மூடிய கதவுகள் 
தட்டாமலே மெல்ல திறக்கிறது  
மூண்ட கோபம் 
வெடிக்காமல் அமர்ந்துக்கொள்கிறது

யார் யார் என்பதனை 
நீ நீ என கற்றுத் தருகிறது 
எல்லாம் முடிந்தது என்று 
கத்திக் கத்தி ஊடகங்கள் சொன்னாலும்

சூரியன் தன் பாதையில் விலகவில்லையே 
பௌர்ணமி வானில் 
விழவுமில்லையே 
விண்மீன்களின் ஒளி
மழுங்குவுமில்லையே 
வானவில் வந்து போகிறது 
காகம் கூட நலம் விசாரிக்கிறது

எல்லாம் சரிதான் 
நிகழ்நிலை கல்வியின்றி 
வாழும் ஏழை குடி

கேட்க முடியாமல் 
புலரும் ஸஹர் 
பொழுதுகள்

திறக்காத குர்ஆனும்  
மூடாத எங்கள் 
முகநூலும்

அடங்காத சிந்தனை 
கூடிக் கூடி வாழும் நட்பு 
ஊரடங்கை மீறும் 
எம் இளைஞர்கள்

பித்ராவுக்காய் 
காத்திருக்கும் 
ஈதுல் பித்ர்

புத்தாடையுமின்றி 
நல்ல ஆடையுமின்றி 
காணப்போகும் 
ஈதுல் பித்ர்

அல்லாஹு அக்பர் 
அல்லாஹு அக்பர் 
அல்லாஹ்வின் ஆலயத்தில் 
ஒலி நிறையாத 
ஈதுல் பித்ர்

முஸாபஹா இன்றி 
முஹாஸபா மட்டும் 
எஞ்சிய 
ஈதுல் பித்ர்

மண்ணறை வாசிகளை 
கண்டு பிரார்த்திக்காத 
ஈதுல் பித்ர்

உற்றாரும் இன்றி 
அயலவரும் இன்றி 
உன் வீட்டாரோடு 
கொண்டாடும் 
ஈதுல் பித்ர்

ஓடர் சாப்பாடும் 
வட்டிலாப்ப கப்பும் 
வரவு கொள்ளாத 
ஈதுல் பித்ர்

அமர்க்களம் இன்றி 
அண்ணல் வழியில் 
சுன்னத்துக்கள் நிறைந்து உம்மத்துக்கள் கொண்டாடும்  
ஈதுல் பித்ர்

ஈத் முபாரக்.
தாஹிர் நூருல் இஸ்ரா.
24/05/2020

(இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான விசேட பெருநாள் கவியரங்கில் ஒலிபரப்பப்பட்ட கவிதை)






No comments:

Post a Comment

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...