புற்று
மண் எடுத்து
வரிச்சி
வீடு கட்டி
பிள்ளை
வளர்த்த மண்ணே
எங்கள்
மண்
சோற்று
பருக்கை இன்றி
ஆற்று நீரை அள்ளி குடித்து
உண்டி வளர்த்த மண்ணே
எங்கள்
மண்
அடை மழையில்
குடையும்
இன்றி
குடை பிடிக்க வழியுமின்றி
சாக்கு
கோணியுடன்,
கடை தெருவுக்கு போகும் மண்ணே
எங்கள்
மண்
விளையாட்டு
சாமான் இன்றி
மானா குச்செடுத்து
கணக்கு
பாடம் படிக்கும் மண்ணே
எங்கள்
மண்.
லோடா கம்புடைத்து
கிட்டி
விளையாடி
கூட்டாஞ்
சோறு சமைக்கும் மண்ணே
எங்கள்
மண்
பாக்கு
மட்டை பொறுக்கி
தோப்பு
முழுக்க இழுத்து
வம்பு கதை பேசி மகிழும்
மண்ணே
எங்கள்
மண்
தென்னை
மட்டை வெட்டி
மாடு என அழைத்து
கழுத்தில்
கயிறு கட்டி குறும்புதனமாய்
குறுபான்
கொடுக்கும் மண்ணே
எங்கள்
மண்
துளிர்த்த
மூன்றிலை
தேயிலை
நுனியில் தொங்கும்
புனித்
துளி கொண்டு
கண் துடைக்கும் மண்ணே
எங்கள்
மண்
சாரத்தை
மண்டி கட்டி
மலை மலையாய் அணிவகுத்து
தேயிலை
கொழுந்து எடுத்து
விரல் முழுக்க கசறு படிந்து
எங்கள்
உழைப்பை
உங்கள்
சுவைக்காய்
அரப்பணிக்கும்
மண்ணே
எங்கள்
மண்
படிப்படியாய்
வரம்பு கட்டி
குளத்து
நீரை அதில் வடித்து
படிமுறை
விவசாயம் செய்யும்
பட்டினியை
போக்கும்
பாட்டாளியின்
மண்ணே
எங்கள்
மண்
மலை இடுக்கில் ஒழிந்து
காலையில்
கள்ளமாய்
எங்கள்
வெண்புறாக்களை
எட்டிப்பார்க்கும்
கிழக்கு கதிரவன்
அவன் பொல்லாத கள்ளன்
அவன் மென் கதிர்பட்டு
பனித்துளி
வெட்கி
அவள் ஜாலம் காட்டும்
வானவில்
தோன்றும்
மொட்டாவை
மலையது
எங்கள்
மண்
மஞ்சள்
முழாம் பூசி
அணி அணியாய்
புல்லு
மலைக்கு
ஹஜ் பயணம் செல்லும்
வண்ணத்து
பூச்சியிடம்
எங்கள்
பிரார்த்தனைகளை
அள்ளி வைத்து
அல்லாஹ்விடம்
சொல்லி
நல்லது
நடக்க வேண்டும்
என வேண்டும் மண்ணே
எங்கள்
மண்
அந்த புல்லு மலையின்
சொந்த காரன் தான்
இன்றைய
வகவத்தின் பாடு பொருள்
பாட்டாலே
விளக்கேற்றி
பாட்டாலே
விளக்கணைத்த
அருள்வாக்கி
அப்துல் காதர்
பிறந்த
மண்ணே
எங்கள்
மண்
பெயரில்லா
பாடசாலை ஒன்று
இலங்கை
தேசத்தில் உண்டோ
பூவும்,
காயும்,
கனிதரும்
மரமும், மணம்
தரும்
வாசனை திரவியமும் பெயராகுமோ?
சிங்களப்
பெயர் தழுவிய
தமிழ் மொழி பாடசாலை ஒன்று
சாத்தியமோ
அந்த புலவர் மலையில் சாத்தியமே
அதன் நுழைவாயிலே வித்துவ தீபமே
எனசல் கொல்ல எனும் பாடசாலை
பெற்றெடுத்த
கவி குஞ்சு நான்
பிறந்த
மண் அது.
புலவனுக்கும்
எனக்கும் உள்ள
உறவு தெரியாது
எங்கள்
ஊரில் பிறக்கும்
எந்த குழந்தைக்கும்
இந்த புலவனை தெரியாது இருந்ததில்லை.
நான் இப்போதெல்லாம்……
கொங்கிரீட்
காட்டிற்குள்
காணாமல்
போன
கதிரவனை
தேடுகிறேன்
வானவில்லின்
நிறங்களை
மறந்து
விட்டேன்.
பனிதுளியில்
பட்டு தெறிக்கும்
வர்ணஜாலத்தை
சிந்திக்கிறேன்.
இறந்து
போன வண்ணத்துப்
பூச்சிகளிடம்
என் எண்ணத்தை சொல்கிறேன்.
தொலைபேசிக்குள்
தொலைந்து
என் நேரத்தை சேமிக்கிறேன்.
ஜில் என்ற காற்றை, ஏசி
ஏசி
விலை கொடுத்து வாங்குகின்றேன்
பிளாத்திக்கு
போத்தலுக்குள்
சின்ன புல்லுகளை வளர்க்கின்றேன்.
என் மண்ணையும்
அதன் மண் வாசனையையும்
குப்பை
நிறைந்த என்
அடுப்பறை
நினைவுபடுத்துகின்றது.
பிழைப்புக்காய்
கொழும்புக்கு
ஹிஜ்ரத்
வந்துள்ளேன்
என் மண்ணை
ஹஜ்ஜதுல்
விதா போன்று
சென்றடைய
ஆசை வைத்துள்ளேன்.
என் மண்ணின் மைந்தர்களிடம்
நான் மன்னிப்பு கேட்கிறேன்.
எமக்கு
ஒரு பாரிய பொறுப்புண்டு
அருள்வாக்கியை
கூகுளில் தேடினேன்
மேமனுக்கு
கிட்டிய படம்கூட
அங்கு இல்லையே எனவருந்துகிறேன்.
ஈழத்து
இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி
நாடறிந்த
புலவன் - எங்களின்
அடையாள
புருஷன் - அவனை
உலகறிய
செய்வது
எனதும்
உனதுமான கடமை
வகவத்திற்கு
நன்றி
வகவ குடும்பத்திற்கு நன்றி
அன்றொரு
நாள் விடுத்த வேண்டுகோள்
இத்தனை
விரைவில் நிறைவேறும்
என்று நினைக்கவில்லை
செவிமடுத்த
உங்கள்
அனைவருக்கும்
அருள்வாக்கியின்
மண்ணின் மைந்தனின்
வாழ்த்துக்களும்
பிரார்த்தனைகளும்.
31/01/2018, Presented on 45th Vahavam
By: Thahir Noorul Isra
No comments:
Post a Comment