Wednesday, 4 March 2020

குமுறல்- kumural





குமுறல்

சுபாஷினி பிரணவன்  எழுதிய குமுறல் கவிதை தொகுப்பு கவிஞர் ஈழகணேஷ் மூலமாக கையில் கிடைத்தது.

2014 ஆம் ஆண்டு தேஜஸ் வெளியீடாக வெளிவந்துள்ளது இக் கவிதைத் தொகுப்பு.


நூலைப் பற்றிய அறிமுகத்தை குறிப்பிடுவதற்கு முன்னர் நூலாசிரியர் கவிதாயினி சுபாஷினி பிரணவன் பற்றி குறிப்பிட வேண்டும்.

வகவ மேடைகளில் தாயும் பிள்ளையுமாக கவிதை பாடும் சுபாஷினி பிரணவன் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றுக்கொண்டவர். நடைமுறையோடு ஒன்றிப்போன உணர்வுகளையும் உடமைகளையும் உறவுகளையும் பற்றிய கவிதைகள் அவருடையவை. கவிதைகளை தொகுத்து புத்தகங்களாக வெளியிடுவதற்கும், கவிதைகளை மேடைகளில் முன்வைப்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இவரது கவிதை முன்மொழிவு பாணி சிறப்பாகக் காணப்படுகின்றது. இதனால் வானொலி தொலைக்காட்சி மற்றும் ஏனைய ஊடக வடிவங்களும் இவரது கவிதையை பதிவு செய்ய தவறவில்லை. கவிஞர் தொடர்பான இவ் அறிமுகத்துடனே குமுறலை வாசிக்க முற்பட்டேன்.

குமுறல் என்ற தலைப்புக்கு ஏற்றாரற் போல் அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் கிருஷ்ணபிள்ளை விஸ்வரூபன் கவிதைத் தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். 
அவரது அணிந்துரையில்
'கவிஞன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறை சுபாஷினியின் கவிதைகள் பலவற்றிலும் வெளிப்பட்டு நிற்பது விசேட கவனத்திற்குரியதாகும். கவிதைகளை படிக்கும்போது இத்துறையில் சுபாஷினி இருக்கக்கூடிய முதிர்ச்சி வெளிப்பட்டு நிற்கிறது. சுபாஷினியின் சிந்தனை ஓட்டத்திற்கு பொருத்தமான சொற்களும் மொழிநடையும் பெரிதும் கை கொடுத்துள்ளன'. என கவிஞரைப் பற்றி குறிப்பிடுகின்றார்.

குரலோசை தொடரட்டும் என               வா. செல்வராசா, மாகாணக் கல்விப் பணிப்பாளர் வாழ்த்துரை வழங்கி யுள்ளார். 

மிக வித்தியாசமாக குமருபவள்  குரல் என சுபாஷினி  பிரணவன் தனது  நூல் அறிமுகத்தை வழங்கியுள்ளார்.

தொடரும் பக்கத்தில் புத்தகத்திற்குள் பொதிந்திருக்கும் கவிதைகளின் தலைப்புகள் உள்ளே என வரிசைப் படுத்தப் பட்டுள்ளது. 53 கவிதைகளை 90 பக்கங்களுக்குள் உள்ளடக்கிய நூலே குமுறல் ஆகும்.

'அம்மா' என்ற கவிதையோடு தொடங்கி 'என்னால் முடியவில்லை அம்மா' என்ற கவிதையோடு கவிதைகள் நிறைவு பெறுகின்றன. இதுவே இக் கவிதைத் தொகுதியின் மிகச்சிறந்த விசேட அம்சமாக நான் கருதுகின்றேன். பிறக்கும் போது அம்மா என்று அழுகின்ற பிள்ளை இறக்கும் போது அம்மா என்னால் முடியவில்லை என்று அழுகின்றது போல குமுரலின் பிரசவமும் அமைந்திருக்கிறது. குமுரலில் நெடுகிலும் தாய்மை சிறப்பாக வெளிப்பட்டு நிற்கின்றது.

அவட்கிங்கு நான் பட்ட
கடன் தீரா - "இற்றி" க்கும்
எட்டா எத்திக்கும் என் அம்மா
புகழ் எங்கும் ஓங்கட்டும்.....
அவள் புகழ் எங்கும் ஓங்கட்டும்...

அடுத்து விரிகிறது தந்தைக்கு சமர்ப்பணம்

செத்துப் போனதை விடவும்
இத்துப் போய் விட்டு இரண்டு
சக்கர மிதி வண்டி
இன்னமும் இறுமாப்பாய் இருக்கிறது
அப்பாவின் நினைவாய்
அத்தனையும் இன்னும் இரு மாபாய் இருக்கிறது. அப்பாவின் நினைவாய்......

மறக்காமல், தெளிவாக தெரியாமல், இப்படி ஒருவரை குறிப்பிட்டுள்ளார்.
"எனக்கு நீ
எட்டாவது ஸ்வரம்-இனி
உலகில் சப்த ஸ்ரங்கள்
கிடையாது!!!
அட்ட திக்கும் எட்ட வேண்டும்
இந்த அட்ட ஸ்வரங்களை
ஆகாரமிடத் தெரிந்த (சு)
உபாஷினியை!!

இவரின் கவிதைகளில் யதார்த்தம் புதைந்து காணப்படுகின்றது.
ஓடிக் களைத்து.
பாடிக் களித்து
வேலை செய்து களைத்து
வீடு வந்தால்
நாயினைத்தவிர யாருமே இல்லை.
என்ற வெறுமையும் சாதாரண மனிதனின் எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது.

விலையேற்றம்  மற்றும் உற்சவப் பகிர்வுகள் எனும் கவிதைகள் தனிமனித போராட்டத்தையும் நாளாந்த வாழ்வியலையும் உழைப்பையும் ஊதியத்தையும் சமன்படா சமன்பாடுகளாக காட்ட முற்பட்டு இருக்கின்றன.

போர், இடப்பெயர்வு, படைகளின் ஆக்கிரமிப்பு போன்றவற்றின் மன பதிவுகளையும் தெளிவாகக் காட்ட மறக்கவில்லை.

இசையும் இசைக்கருவிகளையும் இசை உடனான தனது கழிதல்களையும் சப்பித் துப்பியுள்ளார்.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும்
இருபதுகளிலும் வாழும் சுபாஷினியின் கால வெளிப்பாடுகள் அங்காங்கே கொட்டிக் கிடக்கின்றது குமுறலில்.

"ஹலோ"....
வலைவீசியபடி 
கழுத்திடுகிலும் கைப்பேசி
மீன் வருமோ இல்லையோ
'கோல்' வரும் கட்டாயம்.
காதலிப்பது ஒருத்தியை
கட்டிக் கொள்வது இன்னொருத்தியை அப்பனான பின்பும்
பார்க்கவென ஒருத்தி
படுக்கவென இன்னொருத்தி என  நீண்டு செல்ல நாங்களும் ஒன்றும் மனிதர்கள் அல்ல
கடுப்பாகின மரங்கள்
விருட்சங்கள் கூறும் கற்பு
பற்றி விபரித்தேன்.

இளஞ் சமுதாய இல்லறம் எனும் கவிதையில்
'ஈமெயில்' களிலல்லவா இவர்கள்
குடும்பம் நடத்துகிறார்கள்
இவர்களுக்கு கட்டில்கள் ஏன்?
3G (4G-2020) கைப்பேசிகள்
அல்லது 'ஸ்கைப்' போதும்

போன்ற வரிகளை உதாரணங்களாக குறிப்பிடலாம்.

தொழில் ரீதியாக இவர் ஓர் ஆசிரியர். பெண்களின் வாழ்வியலை அப்படியே பிரதி எடுத்து பதித்துள்ளார். ஓர் ஆசிரியையின் நாட் குறிப்பு எனும் கவிதை 22-30 பக்கம் வரையும் வியாபித்து இருக்கிறது. நாயினை தவிர யாருமே இல்லை, துரோணரல்ல நாங்கள், இடமாற்றங்கள்.
போன்றன கவிதாயினியின் தொழில் வாழ்க்கையை மாத்திரமன்றி எல்லா பெண்களையும் குறிப்பாக ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களையும் குறித்து நிற்கின்றது.

இயற்கையையும் மறக்காமல் கவிதைகளில் தினிதுள்ளார். கல்லுக்கொரு கவிதை, மரங்கள் பேசிய கதை, பூவின் விருப்பம், சிட்டுக் குருவியும் நானும், கழியும் இரவுகள் என்பவற்றை குறிப்பிடலாம்.

இடைக்கிடையே ஹைக்கூ கவிதைகளும் பக்கங்களை நிறைந்துள்ளன. 

மொத்தத்தில் குமுறல்
 மானுட சமுதாயத்தின் குமுறலாகவே பிரதிபலிக்கின்றது.

பின்னட்டை குறிப்பை வழங்கியுள்ள பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா இறுதியில் குறிப்பிட்டிருப்பது போல   
   
"சமூகத்தை கூர்ந்து நோக்கி படம்பிடிக்கும் பாங்கினை இவரது கவிதைகளில் காணலாம். இவரது கவிதைப் பயணம் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்"

அவ்வாறே நானும் கவிதாயினி சுபாஷினி பிரணவனின் கலை இலக்கியப் பணி தொடர வேண்டுமென வாழ்த்துகிறேன்.
4/2/2020, 
#NIE_Diary
#Bookreview


2 comments:

  1. அன்புடைய சகோதரி
    எந்தனது பனுவலைப் புடம் போட்டொரு விமர்சனம் ஈந்தெனை இன்பத்தில் ஆழ்த்தினோய்.
    ஒரு பெண்ணை பெண்ணால் மட்டுமே உணர முடியும் என்று நிரூபித்தனை.
    வாழ்த்தி நினை நன்றியால்
    வந்தனம் செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல படைப்புகள் வாசகனை சென்றடைய மீள் வாசிப்புகள் அவசியம். நன்றி.

      Delete

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...