நான் காணும் மனிதர்கள்..
சுர்ஜித் என்ற சிறுவன் கடந்த வருடம் தென்னிந்தியாவில், திருச்சி மாவட்டத்தில், மணல் கேனி என்னுமிடத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து காப்பாற்றுவதற்காக போராடிய தினங்கள் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். அவ்வாறு அமுதாவின் அம்மா இதைப்போன்று தன் பிள்ளையை இழந்து பட்ட வேதனைகளை மிகவும் அருகில் இருந்து நான் கண்டிருக்கின்றேன்.
சர்வதேச அரங்கில் 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பிறந்த ஜெசிக்கா மெக்லுவா பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் இன்னும்சில தினங்களில் அவர் தனது 34வது பிறந்த தினத்தைக் காணவுள்ளார். இப்பதிவில் இடப்பட்டிருக்கும் புகைப்படம் அவருடையது. அவர் பற்றிய தகவல்களை விக்கிபீடியா தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறே அதிர்ஷ்டவசமாக கிணற்றில் விழுந்து அரை மணித்தியாலங்களில் காப்பாற்றப்பட்டு, எண்பத்தைந்து மணித்தியாலங்கள் எந்த அசைவும் இன்றி, ஆறுமாதங்கள் கண் தெரியாமல் இருந்து, பிள்ளைக்கு காது கேட்கிறதா இல்லையா என்ற சந்தேகத்துடன் இரண்டு வருடங்கள் உருண்டோடி போய்விட்டன. மூன்றரை வயதுகளில் தான் பிறந்த குழந்தையின் அசைவுகளை போன்று மெதுமெதுவாக குழந்தையின் அசைவுகள் ஏற்படத் தொடங்கின. இப்படி தப்பிப் பிழைத்த தனித்துவ சிறுவன் ஒருவனை அண்மையில் சந்தித்தேன். அவனுக்கு இப்போது வயது ஆறு. அவன் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை . பிறந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாக முன் விளையாடுவதற்காக நீர் எடுக்க கிணற்று பக்கமாக சென்றவன் கிணற்றில் விழுந்து விடுகிறான்.
துருதுருவென அவன் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தான். அவனது தாய் முன்பள்ளி பிள்ளைகளுக்காக கற்பிக்கும் ஆசிரியர். விடுமுறை இல்லாது மாதத்தில் ஒவ்வொரு நாளும் வேலை செய்தல் வேண்டும். சொந்த தேவைகளுக்கு கூட அவருக்கு விடுமுறை வழங்கப் படுவதும் இல்லை. தன் பிள்ளையை கவனித்துக் கொள்ள அவரால் முடியவில்லை.
ஒரு இடத்தில் சிறிது நேரம் கூட அவனால் இருக்க முடியவில்லை. இங்கும் அங்குமாக ஓடித் திரிந்து கொண்டே இருந்தான். கற்றல் செயற்பாடுகள் எதிலும் அவனுக்கு ஈடுபாடில்லை. வரைந்து கொடுக்கப்பட்ட வடிவத்திற்குள் நிறம் தீட்டக்கூட அவனால் முடியவில்லை. அவை சட்டத்துக்கு வெளியே சென்று இருந்தது. எல்லாப் பொருட்களையும் எடுத்து அதனை கையாண்டு உரிய இடத்திலன்றி வேறு இடத்தில் விட்டு சென்று விடுவான்.
"அவன் நல்ல பிள்ளை. இரக்க குணமுடையவன். படிக்க மாட்டேங்குறாங்க........."
இது அவனது பாட்டியின் வசனங்கள்.
அவனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள அத்தாய் மிகவும் போராடிக்கொண்டிருந்தாள். என்னை போலீஸ் அதிகாரியாகவும் நான் குழப்படி செய்தால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று பயமுறுத்தினாள். அவரின் அணுகுமுறை அப்போது எனக்கு சரியா? தவறா? அல்லது நான் பொலீஸ் அதிகாரியா? என்று கூட என்னை ஒரு கணம் நின்று சிந்திக்க வைத்தது.
அப்போது எனக்குள் எழுந்த வினாவே இச் சிறுவனின் தந்தை எங்கு சென்று விட்டார்?
நான் தந்தையைப் பற்றி கேட்ட போதெல்லாம் தாய் வேறு பதில்களையே தந்து கொண்டிருந்தார். என் வினா அவருக்கு விளங்கவில்லையா என்ற சந்தேகத்தில் தெளிவாக நான் அவரிடம்,
தந்தை என்ன செய்கிறார்? என்று கேட்டேன்.
அவர் வீட்டுக்கு வருவதில்லை. நாங்கள் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். அவர் மாளிகாவத்தை...........
சரி ஏன் அவரை வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொன்னீர்கள்.
அவருக்கு வேறு மாதிரி பழக்கம் இருக்கிறது. போதாக்குறைக்கு அவர் என்னிடம் வந்து பணம் கேட்கிறார். .....
நான் அத்தோடு நிறுத்திக் கொண்டேன். இன்னும் பல கேள்விகள் எனக்குள் எழுந்தன. அவற்றை நான் அத்தாயிடம் கேட்கவில்லை. உங்களிடம் கேட்கிறேன் பதில் இருந்தால் பதிவிடுங்கள்.
1). உழைக்கும் வர்க்கம் எது?
2). தப்பிப் பிழைத்திருப்பது எதற்காக?
3). என் வினாக்களுக்கு வேறு பதில்களை அளித்தமைக்கான காரணம் என்ன?
நான் காணும் மனிதர்களைப் போல் நீங்களும் காண்பீர்கள். அவர்களிடம் நாம் கற்கும் பாடங்கள் பாட புத்தகத்தில் மீட்கப்படாதவை. வினாக்கள் எல்லாவற்றிற்கும் விடைகள் காணப்படுவதுமில்லை.
No comments:
Post a Comment