Monday, 23 March 2020

 



காதோடுதான்
நான் பேசுவேன்

சகோதரர் பஸ்லி ஹமீட் எழுதிய சிறுகதைப் புத்தகம் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றது. முகநூல் ஊடாக என்னுடைய முகவரியைப் பெற்றுத் தபாலிட்டிருந்தார். ஒரு மாதத்துக்கும் கூடுதலாக என்னோடு பயணப்பட்டது. கொவிட்-19 பொது விடுமுறை புத்தகத்தை வாசித்து முடிக்க ஏதுவாக அமைந்தது.

காதோடுதான் நான் பேசுவேன் என்பதனை பற்றி குறிப்பிடுவதற்கு முன்னர் அதன் ஆசிரியர் சகோதரர் பஸ்லி ஹமீட் உடனான எனது அறிமுகத்தை குறிப்பிடுதல் பொருத்தம் என நினைக்கிறேன்.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி இன்றுபோல் ஒரு நாளில் உலக கவிதை தின நிகழ்வொன்று வகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்விலேயே முதல் முறையாக சகோதரர் பஸ்லி ஹமீதை நான் சந்தித்தேன். ஹைகூ கவிதைகள் தொடர்பான தனது அனுபவ பகிர்வினை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து பல பொழுதுகள் அவரை வகவத்தில் அத்தி பூத்தாற் போல சந்தித்திருக்கிறேன். மிகவும் அமைதியான, சின்ன கவிதைகளுக்கு சொந்தக்காரர். ஹைக்கூ கவிதைகளை வரம்புகளோடு, இலக்கண முறைப்படி யாப்பதில் கைத்தேர்ந்தவர். முகநூலில் வலம் வரும் அவரது கவிதைகளை உன்னிப்பாக பலமுறை வாசிப்பதில் எனக்கு அலாதி பிரியம். பல தடவை அவைகளுக்கு பின்னூட்டல் இட்டிருக்கிறேன். இப்படி ஒரு கவிஞனாகவே  பஸ்லி ஹமீதை நான் அறிந்து வைத்திருந்தேன்.

காதோடுதான் நான் பேசுவேன் கையில் கிடைத்ததும், எனக்குள் பல சிந்தனைகளும் உணர்வுகளும்  ஏற்பட்டன. அதற்குக் காரணம் புத்தகத்தின் வடிவம். மகிழ்வாக இருந்தது. சாதாரண புத்தகங்களின் வடிவத்தை விட அது வேறுபட்டிருந்தது. பாடசாலைக் காலங்களில் குறிப்பு எடுப்பதற்காக பயன்படும் குறிப்புப் புத்தகம் போன்று அது காணப்பட்டது. எனவே கவிதைகளுக்கு இவ்வாறான புத்தக வடிவங்கள் பொருத்தமானவையாக இருக்கும். அத்தோடு பிரயாண வாசகனுக்கு இவ் அமைப்பிலான புத்தகங்கள் இலகுவாக வாசிக்கக் கூடியதாக காணப்படுகின்றது. 
நூலின்  தலைப்பு சினிமா பாடல் ஒன்றின் முதல் இரண்டு வரிகளாக் கேட்ட ஞாபகம் வருகிறது. உள்ளே புத்தகம் தொடர்பான அடிப்படைத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் ISBN இலக்கம் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை. பெற்றோருக்கு சமர்ப்பணமாக இந்தப் புத்தகம் தன்னை உயர்ந்த இடத்தில் நிறுத்திக் கொள்கிறது. ஆசிரியரின் உரையுடன் புத்தகம் தொடர்பான அறிமுகம் நின்றுவிடுகிறது. இஸ்லாமிய விழுமியங்களை  அடிப்படையாகக்கொண்டு புத்தகம் அமைந்திருப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இவை எல்லாமே எனக்கு வித்தியாசமாக இருந்தது. நூலாசிரியர் தனது உரையில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.  

"சிறுகதைகளில் அஃறினணகளையே கதை சொல்ல வைத்திருக்கிறேன். சிறுகதைகளின் இயல்புகளையும், யதார்த்தத்தினையும் மீற நான் நினைக்கவில்லை.  இக்கதைகள் உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தினை தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இவை சுவாரஷ்யமான கதைகள் என்று நீங்கள் சொல்வீர்களாயின் அதுவே எனது முயற்சியின் வெற்றியாகும் இனி கதைகளைக் காது கொடுத்து கேளுங்கள்" என முடித்திருக்கிறார்.

இனி கதைகளை காது கொடுத்து கேட்போம். பொருளடக்கம் இல்லாத சிறுகதை தொகுப்பு இது. அதனால் உள்ளடக்கியுள்ள சிறுகதைகளின் தலைப்புகளை பட்டியலிடுகிறேன். அல்லி மலர், கால் உடைந்த நாற்காலி, கையடக்கத் தொலைபேசி, கடிகாரம், யன்னல்,  குண்டுசி, காதல் கடிதம், கைப்பை, நூறு ரூபா நோட்டு, குப்பைத் தொட்டி ஆகிய 10 சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது.

நூல் ஆசிரியர் குறிப்பிடுவது போன்று அஃறிணை கதை சொல்லிகளின் பாங்கு  முதல் மூன்று கதைகளிலும் சிறப்பாக உள்ளது. சின்ன வயதில் பாடப்புத்தகத்தில் பந்தின் சுயசரிதை, அகலவத்தை எனுமிடத்தில் பிறந்த பந்து தன் கதையை சொல்லும். இரவு அது உருண்டு ஓடும் போது அவன் ஏய் கல்லப்பந்தே எங்கே ஓடுகிறாய்? என விழிப்பான். அந்த உணர்வு இந்த கதைகளை வாசிக்கும் பொழுது எனக்கு ஏற்பட்டது.

அல்லிமலர் சிறுகதையில்
"என்மீது பதித்த பார்வை மீளப்பெறாதவளாய் வந்து கொண்டிருந்தாள். அவள் என்னை நோக்கித்தான் வருகிறாள் என்பது எனக்கு இப்போது மிகத் தெளிவாக விளங்கியது. முன்னைய தினங்களிலும் பலமுறை அவள் என்னை நோட்டமிட்டு இருக்கிறாள். ஆனால் நெருங்கி வந்ததில்லை. கரையில் இருந்து சற்று தூரத்தில் நான் இருந்தமையோ அல்லது சிறிதாக இருந்தமையோ அதற்கான காரணமாக இருந்திருக்கக்கூடும். அவள் என் பக்கத்தில் வந்து விட்டால் முகத்தை வெவ்வேறு கோணங்களில் வளைத்தவளாய் என்னை உற்று நோக்கிக் கொண்டிருந்த அவளின் உதடுகள் மெதுவாக விரிந்தன. புன்னகைக்கத் தொடங்கின. ஆம் அவள் என்னுடன்தான் புன்னகைக்கிறாள். வாடி இருந்த அவளது முகம் ஒருகணம் மலரத் தொடங்கியது.
என்பதனை இங்கு குறிப்பிடலாம்.

குறிப்பாக எல்லா கதைகளுக்கும் இடையில் ஒரு ஒற்றுமையைக் காணலாம். சிலவேளை தலைப்புக்கு ஏற்றாற்போல் கதை சொல்லும் பாணி வேறுபட்டிருந்தாலும் கூட கதைகளின் கருக்கள் பெரும்பாலும் ஒன்றாகவே அமைந்து இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. காரணம் எல்லாக் கதைகளும் ஏழ்மையையும் செல்வத்தையும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. அல்லிமலர் தொடக்கம் குப்பை தொட்டி வரை இந்த ஒற்றுமையை அவதானிக்கலாம். 

அல்லி மலரில் ஒரு குடும்பம் அல்லி மலரை பறித்து விற்பனை செய்து அந்த அல்லிமலர் எவ்வாறு செல்வந்தர் வீட்டில் ஒரு நாளை கழிக்கிறது என்பதுவும், கையடக்கத் தொலைபேசியில் ஒரு உணவுப் பொதி ஊடாக ஏழ்மையான ஒருவருக்கும் நடுத்தர குடும்பத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை சொல்ல முற்படுகிறது. 

கடிகாரம் வறுமையான ஒரு தந்தை வாங்கிக் கொடுத்த கடிகாரம், தான் உயர் நிலை அடைந்த பின்னும் தந்தை வாங்கிக் கொடுத்தது என்பதற்காக வேறு ஒரு கடிகாரத்தை கட்டிக்கொள்ள மனம் விரும்பாத பெறுமதியான ஏழ்மையை சுட்டிக்காட்டுகிறது. மிகவும் உணர்ச்சிபூர்வமான கதை. இங்கு நான் ஒரு விடயத்தை குறிப்பிடுதல் வேண்டும் எனது தந்தை மரணித்து 12 வருடங்களுக்கு பின்னர் அவருடைய  மேற்சட்டை (shirt) எனக்கு கிடைத்தது. அது அவரது பெட்டியில் இருந்தே எடுக்கப்பட்டது.எலிகள்  தனக்கு வேண்டியதையெல்லாம் கடித்து எடுத்துவிட்டு எனக்கு வேண்டியதை மட்டும் விட்டு வைத்து இருந்தது. அதை பத்திரமாய் கொண்டு வந்து என் கணவனின் மேற்சட்டைகளோடு வைத்திருக்கிறேன். காலங்கள் கடந்தாலும் எதிர்பார்ப்புகள் உடனான ஞாபக சின்னங்கள் இன்னொரு நபரினால் ஈடு செய்ய முடியாதது, என்ற உயரிய தத்துவத்தை இக்கதை சுட்டிக்காட்டுகிறது. இச்சிறுகதை தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு கதையும் கடிகாரம் என்பதுதான். பெற்றோர் பிள்ளைகளுக்கு பலதடவை வாசித்துக் காட்ட வேண்டியதும்,  தாம் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டியதுமான ஒரு கதை.  ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

கடிகாரத்தை தொடர்ந்து யன்னல் என்ற சிறுகதையில் கூட வறிய வீட்டிற்கும் செல்வந்த வீட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தையே காட்ட முற்பட்டு இருக்கிறார். குண்டூசி என்ற சிறுகதையில் யதார்த்தமாக ஓரிடத்தில் கிழிசல் இருந்தால் அல்லது பொத்தான்கள் காணாமல் போனால் குண்டூசியே அவ்விடத்தை நிரப்புகின்றன. அது இன்றும் எம்மிடையே நடைமுறையில் இருக்கிறது. அவ்வாறு  குண்டூசிகள் அந்நபரின் சட்டையோடு தொடர்ந்து பிரயாணப்பட்டு  ஓர் ஏழ்மையான குடும்பத்தின் நாளாந்த வாழ்க்கையை சொல்ல முற்படுகிறது. காணாமல் போன கணவன் தொடர்பாகக் கிடைத்த செய்தி என்னையும் காணத்துடிக்கும் என் சகோதரனின் முகத்தை மனக்கண்முன் இறுதியது. 

ஒரு செருப்பு தைப்பவரின் வாழ்க்கையையும் அவருடைய வினோதத்தையும்  எடுத்துச் சொல்ல முற்பட்டுள்ள கதை கைபை.  நூறு ரூபா நோட்டு எப்படி செல்வந்த காலத்தில் ஒரு குறித்த நபருடன் இருந்த நூறு ரூபா அவர் வறுமை அடைந்த பின் அவரிடம் கடத்திய சில நாட்களை சொல்வதாக இருக்கிறது. 

இறுதியாக  புகையிரத பெட்டிகளில் இடத்தைப் பிடித்துக்கொண்ட குப்பைத்தொட்டி ஓய்வுபெற்ற இரண்டு ஆசிரியர்களின் ஓய்வு காலத்தை சொல்ல முற்பட்டு இருக்கின்ற வேளை உங்கள் பொதிகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் எனும் அறிவுறுத்தலூடாக  ஏழ்மையையும் சொல்லப்பட்டிருக்கிறது. 

காதல் கடிதத்தில் கூட இத் தொனிப்பொருள் மேலெழுந்து காணப்படுகின்றது. அதில் காதலன் செல்வந்த குடும்பத்திலும் காதலி  வறுமையான குடும்பத்திலும் பிறந்த காரணத்தினால் அவர்களின் காதல் கைகூடாமல் இருந்துவிடுகிறது. 

 இப்படி எல்லாக் கதைகளும்  ஏழ்மையையும் செல்வத்தையுமே குறிப்பிட முற்பட்டுள்ளது. எனினும் குறிப்பாக சொல்ல வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் பத்தில் மூன்று கதைகளுக்கு மட்டுமே "க" என்ற எழுத்தில் தலைப்பு கிடைக்காமல் போயிருக்கிறது. 

கதையை தொடங்கியது முதல் முடிக்கும் வரை பேசுவதற்கு சரியான அஃரிணைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. குண்டுசி கைத்தொலைபேசி, கை பை, கடிகாரம் நூறு ரூபா நோட்டு என்பன குறித்த உயர்திணைகளோடு தொடர்ந்தும் பயணிக்கின்றன. இக் கதைகளை வாசிக்கும்போது சிலநேரம் உயர்திணையே கதை சொல்கின்றன போன்ற உணர்வு இடைக்கிடையே ஏற்படுகிறது. மிகவும் உன்னிப்பாக நீண்டகாலம் எடுத்து வாசித்த ஒரு சிறுகதைத் தொகுப்பு. 

புத்தகத்தை வாசிப்பதற்கு முன்னர் என் தாய் அதனை வாசித்துவிட்டு  அதைப் பற்றி இப்படி குறிப்பிட்டார்.

"மிகவும் அருமையாக யதார்த்தமாக இருக்கிறது".

 அவர் குறிப்பிட்டது போன்று நாளாந்த வாழ்வோடு யதார்த்தமாக பின்னிப் பிணைந்த ஒரு சிறுகதைத் தொகுப்பு. சிறுவர்கள் விரும்பி வாசிக்க்கூடிய நூல். எனினும் அவர்கள் வாசிக்கும் வகையில் எழுத்துகளின் அளவினை அதிகரித்து படங்களுடன் பிரசுரிப்பது வரவேற்கத் தக்கது. தான் கைத்தேராத ஒரு இலக்கிய வடிவத்தில் புதிது புனைய முற்பட்டுள்ள ஆசிரியரின் முயற்சி வெற்றி கண்டுள்ளது. வாழ்த்துக்கள்.











No comments:

Post a Comment

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...