Saturday, 28 March 2020


 

திரைநிலவன் Thirai Nilawan ஏ.எஸ்.எம். நவாஸ். இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இன்றோடு ஒரு கிழமை ஆகிறது.

எழுத்தாளர், ஊடகவியலாளர், கவிஞர், செய்தி தொகுப்பாளர் என பன்முக ஆளுமை கொண்ட மனிதர். முகநூலில் அவரது  இறுதித் தகவல் கவலையை ஏற்படுத்தியது. எப்படியாவது சென்று பார்த்துவிட வேண்டும் என்று பல தடவை முயற்சி செய்தேன். இறைவனின் நாட்டம் கைகூடவில்லை.

நவாஸ் நானா தொடர்பாக நான் எழுத என்ன இருக்கிறது. 

அவரைப் பற்றி எனக்கு என்ன தெரியும். 

ஏன் நான் அவரைப்பற்றி பரிமாறிக் கொள்ள வேண்டும்.

மிகப் பெரிய மனிதர். குணத்தால் மிகவும் பணிவானவர். அவர் இருக்கிறாரா இல்லையா என்று கூட சிலவேளை எமக்கு தெரியாமல் இருக்கும். தகவல்களை பத்திரிகைகள் சுமந்து வரும் பொழுதுதான் அவர் இருந்திருக்கிறார் என்று கூட எமக்கு தெரியவரும்.

எல்லோரையும் ஒரே தளத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய, உயர்வு தாழ்வின்றி பாராட்ட கூடியவர். நல்ல கலைஞனுக்குரிய இரசனை திறன் அவருக்கு இருந்தது.

வெறுமனே 5 ஆண்டுகள் பழக்கம்தான். குறைந்தது ஒரு பத்து தடவைக்கு மேல் கூட அவரை நான் சந்தித்து இருக்க மாட்டேன். ஆனால் சந்தித்த போதெல்லாம் அவரோடு நான் கதைக்காமல் இருந்ததும் இல்லை. அவரும் என்னை சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நலம் விசாரிக்காது சென்றதும் இல்லை.

கருத்தக் கோடுகள் புத்தகத்தை கையில் தந்து,

"எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் இஸ்ரா" 
என்றார்

உம்மா அதனை வாசித்து விட்டு அவரது உணர்வை ஒரு குறிப்பில் எழுதி இருந்தார். நான் அதனைத்தான் நவாஸ் நாநாவுக்கு தபாலிட்டேன்.

மிகவும் இரக்க சுபாவம் உடையவர். பூனைகளுக்குக்கூட மீன்களை காசு கொடுத்து வாங்கி உணவளிப்பதில் மகிழ்ச்சியடைபவர்.

ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பல்வேறு மக்களும் தம்முடைய பங்களிப்பினை செய்து வருகின்றனர். குறிப்பாக  வடகிழக்கு இலக்கியம், புலம்பெயர் இலக்கியம்,  மலையக இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம், என்ற வரிசையில் சமூகத்தவர்களும் இணைத்துக் கொள்கின்றனர்.

நவாஸ் நாநா மேமன் சமூகத்தில் இருந்து தமிழ் வளர்த்த ஒருவர். அவரது தந்தையின் இறப்புச் செய்தியை தொடர்ந்து அவரோடு உரையாடிய போது மிகவும் வினயமாக என்னிடம் அவர் ஒரு விடயத்தை கேட்டுக்கொண்டார்.

"மேமன் வளர்த்த தமிழ் என்ற ஒரு கட்டுரையை எழுதுங்கள்"

என்பதே அவரது வேண்டுகோள். அதனை இன்றளவும் என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

நான் யாரென்று கூட அறியாது என்னைப் பற்றிய தகவல்களை எனக்கு அறியாது திரட்டி அவரது கலா வானம் நேயர்களுக்காக என்னை அறிமுகம் செய்தார். அதில் அவர் குறிப்பிடும் போது,

"நம் நாட்டில் ஒரு துணிச்சல்கார கவிதாயினி இருக்கிறார். தெல்தோட்டை இல் பிறந்த இக்கவிதை குஞ்சு படிப்படியாக சிறகு முளைத்து கவிதை வானில் பறக்க தொடங்கியுள்ளது" .

இப்படி சிறப்பான ஒரு அறிமுகத்தை தந்து என்னை ஊக்கப்படுத்திய மறக்க முடியாத நன்றிகுறிய இலக்கிய உலகம் எனக்கு அறிமுகப்படுத்திய சகோதரர். 

அந்த அறிமுக குறிப்பின் இறுதியில் அவர் இப்படி ஒரு கவிதையை குறிப்பிட்டுள்ளார்.

"என் பேனா முனை வெளிப்படல்
பெரும் துன்பங்களின் திடல்
இத்திடலில் ஆடியவர் போக
அடங்கிய சிலர்
அடுத்தடுத்த கட்டங்களில்
இந்த உலகம் சுருங்கிவிடும்
உயிர்கள் பெருகிவிடும்
வாழ்வதற்கு உலகம் மற்றும்
வாடும் உயிர்களை எண்ணி
இப்போது வருந்துகிறேன்".

வாழும் இவ் உலகின்
மரண ஓலம் கேட்கும்
வைரஸ் பீதி பரவியிருக்கும்
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்
தருணம் பார்த்து
ஊரைக்கூட்டி கொள்ளாமல்
எனக்காக பிரார்த்தியுங்கள்
எனக் கேட்டு
எமை விட்டுப் பிரிந்த
திறை நிலாவன்
ஏ. எஸ். எம் நவாஸ் அவர்களுக்கு
நன்றியோடு பிரார்த்திக்கிறேன்.

உயர்ந்த குணநலன்களை
இறைவன் ஏற்றுக் கொண்டு
மேலான சுவர்க்கம் கிடைக்க   பிரார்த்திக்கின்றேன்
துயரால் வாடும் குடும்பத்தினரின்
துயரில் பங்கு எடுக்கின்றேன்





No comments:

Post a Comment

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...