வகுப்பறைக்கு வெளியே
இரா. தட்சனாமூர்த்தி எழுதிய வகுப்பறைக்கு வெளியே என்ற நூல் பற்றிய விமர்சனம்.
புதுவை அறிவியல் இயக்கம் book for children நான்காம் பதிப்பாய் 2018 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. நூலிற்கு அணிந்துரையினை முனைவர் பரசுராமன் வழங்கியுள்ளார். அவரது அணிந்துரையில்,
"இதுதான் ஆசிரியர்களின் கூட்டு முயற்சி சாத்தியமானால் பள்ளி மாணவர்கள் பலருடைய இடைவிலகளை தவிர்க்க முடியும். ஒருவேளை உங்களுக்கு அதிகம் சிரமம் இல்லாமலேயே அவர்களுக்கு உதவ வாய்ப்பு இருக்கக்கூடும்" என்று குறிப்பிடுகின்றார் .
இக்கதை தொகுப்பில் உள்ளடங்கியுள்ள சுமை, பாயாசம் பரமசிவம், காசு மேல காசு வந்து, வண்டிக்காரன், எனக்கு இங்கிலீஷ் வர்ல, வேலன், வகுப்பறைக்கு வெளியே ஆகிய ஏழு கதைகளுமே பல்வேறு தளங்களில் இருந்து வறுமையின் கோரப்பிடியினால் ஏற்பட்டுள்ள சுமையைப்பற்றி பேசுகின்றது.
என் உரையில் ஆசிரியர் இப்படி குறிப்பிட்டுள்ளார்
"அரசு பள்ளியில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பணியாற்றிய அனுபவத்தில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்து ஏழு தலைப்புகளில் இந்நூலில் குறிப்பிட்டுள்ளேன். சமூக சூழ்நிலையாலும் பள்ளிச் சூழலும் கல்வி முறையாலும் படிப்பை தொடர முடியாமல் போன குழந்தைகளின் உண்மைக்கதை. இந் நூலில் குறிப்பிட்டுள்ள அனைத்து நிகழ்வுகளும் உண்மையில் நடந்தவை. சிறு மாற்றம் கூட செய்யாமல் நானே ஒரு பாத்திரமாக எனது அனுபவத்தில் எழுதியுள்ளேன்". என குறிப்பிட்டுள்ளார்
இன்றைய கல்விமுறை தொடர்பான பரந்த விமர்சனத்தில் ஒன்று தான் 100 சதவீத தேர்ச்சி அல்லது பாட அடைவு.
"ஒரு மாணவனை வகுப்பில் இடையில் நிறுத்தி இருந்தால் அது எப்படி 100 சதவீத தேர்ச்சி ஆகும். முதல் வகுப்பில் சேரும் மாணவர்களில் 42 மாணவர்களே மேல்நிலைக் கல்விக்கு வருகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. மீதியுள்ள 58 பேர் என்ன ஆனார்கள்? அவர்களை பள்ளியைவிட்டு விரட்டியது யார் என் அனுபவத்தில் நான் சந்தித்த உண்மையான சம்பவங்களை இந்நூல் குறிப்பிடுகிறது". என மேலும் நூல் உருவாக்கத்திற்கான அழுத்தத்தை எடுத்துச் சொல்கிறார்.
முதலில் வருவது சுமை. எல்லா கதைக்குள்ளும் சுமைகள் நிறைய இருக்கின்றன. வகுப்பறையில் சுமைகள் உள்ள மாணவர்களை இனங் காணவும் அவர்களின் சுமைகளை கண்டறியவும் ஆசிரியர் கையாண்டுள்ள அணுகுமுறை சிறப்பாக உள்ளது.
முதல் கதையில் கட்டுரை எழுதப் பணிப்பதன் ஊடாக வகுப்பில் இறுதி பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவியின் பிரச்சினையை கண்டறிந்துள்ளார். ஆனால் அவர் குழந்தையை அணுகிய விதத்தில் எனக்கு உடன்பாடில்லை இல்லை
"என்ன செய்ற கோவேறு கழுதை"
இது ஒரு நல்லாசான் கூறிய வார்த்தைகளாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
வீட்டுக்கு வந்த கொத்தனாரை அண்ணா என்று அறிமுகப்படுத்தி பின்னர் அப்பா என்று அலைக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டிருந்தாள் அவள் அம்மா.
"எங்க அம்மாவை இன்னொரு குழந்தை பெற்றுக்கொடு என்று சொல்கிறாராம் சார் அவங்க உடம்பு தாங்காது சார்"
இந்த வேதனையில் அண்ணாவுக்கு எழுதிய கடிதம்....12 வருடங்களுக்கு பிறகு அக்காவும் தம்பியும் தாயை விட்டு பிரிகின்றனர்.
"இவ்வளவு மனச் சுமையுடன் இந்த வயதில் இவள் எப்படி படிக்கப் போகிறாளோ" என்ற வினாவும் அவருக்கு எழுந்துள்ளது.
பாயாசம் பரமசிவம் என்னும் கதையில் தனது பெயரை உணவுப்பண்டம் ஒன்றின் பெயரோடு அறிமுகப்படுத்தி, பட்ட பெயர் கொண்டு வகுப்பில் அழைக்கும் மாணவனை கண்டறிகிறார்.
மதிய வேளையில் பாயாசமும் வடையும் கொண்டுவந்து பிள்ளைக்கு ஊட்டிவிடும் தாயும் திருமண வீட்டிற்கு விருந்துபசாரத்துக்கு சென்று அமர்ந்த போது இலை விரித்து பணிவிடை செய்த தாயும் ஒருவராக இருந்தார். இறுதியில் விபத்து ஒன்றுக்கு முகம் கொடுத்து தாய் படுக்கையில் விழ, பரமசிவத்தின் பாடசாலைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.
"என்ன வேலை செய்வாய்?"
"சம்மட்டியால் கம்பி வெட்டுவேன். எடுபிடி வேலைகள் எல்லாம் செய்வேன்"
"அவனுக்கு 12 வயது. அது சம்மட்டி தூக்கும் வயதும் இல்லை, உடம்பும் இல்லை. புத்தக சுமை குறைந்து போனது ஆனால் சம்மட்டி சுமை ஏறிவிட்டது. வருகைப்பதிவேட்டில் இடைநிறுத்தம் என்று சிவப்பு மையால் எழுதிவிட்டேன்" என முடிக்கிறார்.
தொடர்ந்துவரும் காசு மேல காசு வந்து எனும் கதையில் சுற்றுலாவிற்கு தயாராகும் பிள்ளைகளையும், அதன்போது செலவு செய்யும் மாணவனையும், அவனுடைய வருமானத்தின் பின்னணியையும், இறுதியில் புதிதாக வெளிவரும்
திரைப்படங்களின் டிக்கட்டுகளை திருட்டால் விற்று பணம் உழைக்கும் ஒருவனாக மாறிவிடுகிறான். அவன் அன்று அவருக்கு 4 டிக்கட்டுகளை இலவசமாக கொடுத்து விடுகிறான். படம் முழுவதும் அவருக்கு குற்ற உணர்வில் கழிகிறது.
திரைப்படங்களின் டிக்கட்டுகளை திருட்டால் விற்று பணம் உழைக்கும் ஒருவனாக மாறிவிடுகிறான். அவன் அன்று அவருக்கு 4 டிக்கட்டுகளை இலவசமாக கொடுத்து விடுகிறான். படம் முழுவதும் அவருக்கு குற்ற உணர்வில் கழிகிறது.
வண்டிக்காரன் கதையில் ஆசிரியர்களுக்கு உதவி செய்யும், எடுபுடி மாணவனாக அடையாளம் கண்டு அது தொடர்பாக ஆசிரியருடன் நடத்தும் உரையாடல், பின்னர் தாமதித்து பாடசாலைக்கு சமூகம் தருதல், காரணத்தைக் கண்டு பிடித்ததில் தந்தையுடன் ஒத்தாசையாக வேலை செய்வதனால் உரிய நேரத்தில் பாடசாலைக்கு வரமுடியவில்லை. இறுதியில் தந்தை விபத்துக்குள்ளாக, குடும்ப சுமைதாங்கியாக மாறிவிடுகின்றான். ஒருநாள் மண் அகழ்விற்கு எதிரான போராட்டத்தில் தலைமைதாங்கி குரல் எழுப்புவதனையும் அழகாக விவரித்துள்ளார்.
எனக்கு இங்கிலீஷ் வர்ல எனும் கதையில் ஆசிரியர்களுக்கிடையிலான உரையாடல் இடம்பெறுகிறது. புத்தக அறிமுகத்தில் குறிப்பிடுவதுபோல இக்கதை முழுதுமாக நூறு வீத அடைவு தொடர்பாகவே செல்கிறது. இ
இக் கதையை வாசிக்கும் பொழுது எனக்கும் பாடசாலையில் இருந்து வெளியேறும் வரை இங்கிலீஷ் வர்ல. சாதாரணதரம் உயர்தரம் ஆகிய இரண்டு நிலைகளிலும் முதல் தடவை நான் ஆங்கில பாடத்தில் சித்தி அடையவில்லை. எனது பள்ளிக்கால த்தில் ஆங்கிலம் கற்பதற்கு எடுத்த முயற்சிகளின் அனுபவங்களை இக்கதை சிறப்பாகவே மீட்டிப் பார்க்கச் செய்தது.
இக் கதைத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை வேலன் ஆகும். வறுமை, ஆட்டுக்குட்டி, சிறுவர் தொழிலாளி, பாடசாலை வாழ்க்கை, என்ற நிலைகளில் நின்று கதைச் சொல்லப்படுகின்றது. குடிகார தந்தைக்கும் தாய்க்கும் இடையே தொடர்ந்து நடக்கின்ற சண்டை, தாய் வாங்கிக்கொடுத்த ஆட்டுக்குட்டி அதன் பெயரே வேலன், அதற்கு கழுத்தில் கட்டிய மணி, அதனோடு பேசும் வார்த்தைகள், புத்தகப்பையை வைத்ததும் ஆட்டுக்குட்டி துள்ளி ஓடி வந்து அவளோடு விளையாடுவது, இதையெல்லாம் வறுமை காவுக்கொண்டு செல்வந்தர் வீட்டுப் பணிப் பெண்ணாக மாற்றிவிடுகிறது. படித்த பெற்றோர்களாகிய அவர்கள் (தொழில் வழங்குனர்) அவளை பாடசாலைக்கும் அனுப்பி மாதத்திற்கு 500 ரூபா சேமிப்பு செய்து கவனித்து வருகின்றார்கள்.
அன்று சமைப்பதற்காக ஆட்டிறைச்சி வாங்க சென்றபோது, மரகுற்றியின்மேல் வெட்டப்பட்ட தலையும், அதில் தொங்கும் மணியும், அது தனது வேலன் என்பதனையும், இரவு உணவிற்காக ஆட்டிறைச்சி கறியை பரிமாற வேண்டும் என்ற பெரும் துயரில் வகுப்பறையில் அன்று முழுதும் அழுது தீர்த்த பெண் குழந்தையின் உணர்வினை துள்ளியமாக வெளிக்கொண்டு வந்துள்ளார்.
புகை மூட்டத்தின் பின்னால் எனும் நூலில் ஆட்டுக்குட்டியுடன் சிறுபிள்ளைகள் எவ்வாறு இயல்பாக இணைந்து விடுகிறார்கள் என்பதுவும் வைக்கம் மு பசீர் எழுதியுள்ள ஒரு கதையும் இருப்பதாக நான் வாசித்திருக்கிறேன்
இவையெல்லாவற்றையும் இவ்வேலன் கதை ஊடுருவிச் சென்றுள்ளது.
இங்கு ஒரு விடயத்தை குறிப்பிடல் வேண்டும். எல்லா கதைகளுமே தென்னிந்திய மண்ணில் பல்வேறு இடங்களில் இடம் பெற்றதாக அமைகின்றது. புதுவை பகுதியை மையமாகக்கொண்டு அமைந்திருக்கிறது. இது ஒன்றும் எனக்கு புதிதல்ல.புற்றுநோய் சிறுவர்களைத் தேடி எல்லா பகுதிகளுக்கும் நான் ஐந்து வருடங்களாக பயணித்திருக்கிறேன்.அதன் அடிப்படையில் கதை சொல்லும் இடங்கள் தொடர்பான மனக்காட்சி எனக்கு தெளிவாகவே தெரிகிறது.
இறுதியாக புத்தகத்தின் தலைப்பை தாங்கி வந்திருக்கும் வகுப்பறைக்கு வெளியே என்ற கதை இடம் பெற்றுள்ளது.
திவ்யா என்ற பாத்திரத்துடன் அறிமுகமாகும் இக்கதையில், தாய்க்கும் தந்தைக்கும் இடையிலான விரிசல், டீசி வாங்க வரும் தந்தை, அக்கா ஒரு இடத்திலும் தம்பி இன்னொரு இடத்திலும் வாழும் நிலை, இறுதியில் ஆசிரியரைத் தேடி வரும் அத்தையும் மகளும், அவர் இடமாற்றம் பெற்றுச் சென்றதனால் கல்வி இடை நிறுத்தப்பட, தற்போது அத்தையுடன் பூக்கடையில் இருக்கிறாள் திவ்யா.
இறுதியாக பூக்கடை யில் ஆசிரியரை இனங்கண்டு கொண்ட திவ்யா ஆசிரியரின் மனைவியுடன்
"சார் எங்க சார்"
என்று குறிப்பிடுவதும்
"வந்து பார்க்கிறேன் திவ்யா". என்று ஆசிரியர் விடைபெறுவதும் இடம்பெற்றுள்ளது.
"சார் எங்க சார்"
என்று குறிப்பிடுவதும்
"வந்து பார்க்கிறேன் திவ்யா". என்று ஆசிரியர் விடைபெறுவதும் இடம்பெற்றுள்ளது.
கோவிட் 19 விடுமுறை வாசிப்பாக இணைந்துகொண்ட இப்புத்தகம். இரு தினங்களாக காய்ச்சலில் இருந்த என் மகளுடன் கூடவே பயணப்பட்ட கதைகள்.
பெற்றோரும் கல்விச் சமூகமும் வாசிக்கவேண்டிய நல்லதொரு புத்தகம்.
உண்மை கதைகளின் தொகுப்பாக அனுபவப் பகிர்வாக இது அமைந்துள்ளது.
மிகக்குறுகிய காலத்திற்குள் வாசித்து முடிக்க கூடிய சுவாரசியமான புத்தகம்.
புத்தகத்தின் பல கதைகளின் இறுதியில் பல்வேறு விடயங்களை வாசகர்களின் விவாதத்திற்கு விட்டு வைத்துள்ளார்.
உண்மையில் சுய ஊக்கப்படுத்தல் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும் வளரவேண்டிய, விருத்தி செய்யப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.
அதன்போது இலக்கை நோக்கி போராடக்கூடிய சத்தியும் உரிய காலப்பகுதியில் உரிய அடைவுகளை எய்தக்கூடிய வழியும், வாய்ப்பும் கிடைக்கின்றது.
ஆசிரியர் குறிப்பிடுவது போல நாம் ஒவ்வொருவரும் எமது நிலையில் நின்று வாசித்து சிந்திக்க வேண்டிய ஒரு கருவூலமாக இப்புத்தகத்தை நான் அடையாளப்படுத்த முடியும். இதற்குக் காரணம் புத்தகத்தின் ஆசிரியர் ஓர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஆவார்.
முனைவர் தா பரசுராமன் குறிப்பிடுவதுபோல,
"மாணவர்கள் படிக்காமல் போனதற்கு குடும்பமே காரணம். குடும்பத்துக்கு பின்னால் சமூகமும், பள்ளிக்கு பின்னால் அரசும் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்".
மொத்தத்தில் யார் காரணம் என்பதனைவிட நானே காரணம் என்று ஏற்றுக்கொண்டு முன்னோக்கி செல்வது காலத்தின் தேவை.
#Covid-19
#Covid-19diary