Sunday, 29 December 2019




கையோடு கூட்டி வாங்க

கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் எழுதிய 
கையோடு கூட்டி வாங்க சென்ற பௌர்ணமி அன்று என் கையில் கிடைத்தது.

2015 ஆம் ஆண்டில் இருந்து கஸ்ஸாலி அஷ்ஷம்ஸின் கவிதைகளை வகவ மேடையில் தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறேன். அவரது நண்பரின் நினைவுப் பேருரையும் அவர் ஆற்றி இருக்கிறார்.

 இந்த அறிமுகத்தோடு தான் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸின் கையோடு கூட்டி வாங்க புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன்.

கலைவாதி கலீல் சார் அவர்களின் அட்டைப் படத்துடன்,  துறையொளி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக 61 கவிதைகளை உள்ளடக்கி 120 பக்கங்களில் வெளிவந்துள்ளது.
பெற்றோருக்கு சமர்ப்பணம் செய்து இதயத்தை திறந்து கவிஞர் பேசுகிறார்.
புத்தகத்தில் திக்குவல்லை கமால் அவர்கள் அணிந்துரையும். சந்தக்கவி கிண்ணியா அமீர் அலி வாழ்த்துக் கவிதையும், வெளியீட்டு உரையும் இடம் பெற்றுள்ளது. கவிஞர் என்னை கையோடு புத்தகத்துக்குள் உலாவர கூட்டிச் செல்கிறார். 

1985 ஆம் ஆண்டு கவிதை எழுதத தொடங்கிய கவிஞர் 1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணாமல் போய் மீண்டும் 2012 ஆம் ஆண்டு  எழுதத் தொடங்குகிறார்.

19 ஆம் நூற்றாண்டில் எழுதிய கவிதைகளை இருபத்தி ஓராம் நூற்றாண்டில் வெளியிட்டுள்ளார்.

நெடு நேர பயண வாசிப்பில் புத்தகத்தில் கிறுக்கிய சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நிலா என்ற பெயர்
நிலைத்தது
உலாவித் திரிவதனாலோ
.....
விளையாட்டுக்குக் கூட
நேரம் இல்லாததனால்
வெறிபிடித்த
விளையாட்டுக்களுமே வகுப்பறைகளில்
.......
மலைகள் தான் ஏறுவார்கள்
மலைமேல் மறுதலையா
மலை ஏறியது
மக்கள்மேல்
......
ஓர் எச்சரிக்கை
படைப்பாளியின்
பேனாவுக்கு மட்டுமே
பக்கங்களுடன் பேசும் உரிமை.
.......
ஓவர்டைம் செய்த
சமையல் பாத்திரங்கள்
கட்டாய லீவில்
.......
வறுமையின் கோலங்களுக்கு
எந்தன் கோலங்களே
சாட்சிகள்
.......
அமல் களுக்கான நேரத்தைக் கூட
புக் பண்ணி விட்டது
ஃபேஸ்புக்

போன்ற வரிகளே என்னை கவர்ந்ததும் சிந்திக்க வைத்ததுமான வரிகளாகும்.

பல இடங்களில் அழகாக கவிதையாத்துள்ள  போதும் முடிவு அரசியலில் முடிந்து விடுகிறது. ஆடத் தெரியாதவனுக்கு நிலமும் கோணலாம் என்பது போலஅரசியலை சாடியே பல கவிதைகள் அமையப்பெற்றுள்ளன.

ஆண் கவிஞர்களின் பெண்நிலை பார்வை தெளிவாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

அறிவியல் யுகத்தில் நாங்கள் வாழ்கிறோம், மற்றொரு கவிதையில் மூடநம்பிக்கையில் மூழ்கிப்போய் இருப்பவர்கள் பெண்கள் மட்டும்தான் என்று காட்டுவது போல் இருக்கிறது.
கரைந்து போகும் எதிர்பார்ப்புகள் எனும் கவிதையில் பெண்கள் பிள்ளை பெறும் எந்திரம் தான் என்று நிரூபிக்க முற்படுகிறார். தலைவிதி தாலாட்டு எனும் கவிதையில் நீ கண் விழித்துக்கொண்டாள் நள்ளிரவிலும் சூரியன் விழித்துக்கொள்ளும் என்ற வரிகள், உத்தரவாதம் இல்லை எனும் கவிதையில் இந்த வரிசையில் குழந்தை பண்ணை.  போன்ற  பிற்போக்குச் சிந்தனை உள்ள கவிதைகளாக எனக்குத் தோன்றுகின்றன.

கவிஞர் தனது மன குமுறல்களையும் உணர்ச்சி வெளிப்பாட்டையும் கோர்வை படுத்துவதில் சிரமப்படுகிறார்.

என்னுடைய பால்ய பருவத்தை புத்தகத்தில் கண்டுகொள்ளலாம் என்றும் நினைத்தாலும் எண்பதுகளையும் தொண்ணூறுகளையும் அது துல்லியமாக படம் பிடிக்கவில்லை என்பது எனது பார்வை.

ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இருந்துகொண்டு இருபதாம் நூற்றாண்டை அழகாக எதிர்வு கூறியுள்ளார்.

நாளும் வரும் எனும் கவிதையில்
சர்வமத குடியேற்றத் திட்டங்கள் சகல இடங்களிலும் ஸ்தாபிக்க வேண்டும் என்ற கவிதை இன்றைய பிளட் வீடுகளை எனக்கு எண்ணிப் பார்க்கச் செய்கிறது.

அதுபோல
இருபத்தோராம் நூற்றாண்டில் என்னும் கவிதையில் இன்று நாம்
பாவிக்கும்டிவி ரேடியோ யாவும்  நூதன சாலைகளில் காட்சிக்க வைக்கப்பட்டிருக்கும் போன்ற கவிதைகள் சிறப்பாக உள்ளது.

கவிஞர் மிக விரைவில்
நல்ல பல கவிதைகளை யாத்து
மீண்டும் மீண்டும் வாசிக்க
காத்திரமான ஒரு படைப்பை தரவேண்டும் என்று ஒரு நல்ல வாசகனாக வினயமாக வேண்டிக் கொள்கிறேன்.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
இஸ்ரா.

30/12/2019
#NIE_Diary
#readingbooks







போயிட்டு வாங்க சார் (Good Bye Mr. Chips)





போயிட்டு வாங்க சார்

குட் பாய் மிஸ்டர் சிப்ஸ்.

எனும் நூல் திரு. ச. மாடசாமி என்பவர்  அவரின் வாசிப்பின் வெளிப்பாடாக எழுதப்பட்ட நூலாக அமைகின்றது. 63 பக்கங்களை உள்ளடக்கிய  Books for Children வெளியீடாக வந்துள்ள இப் புத்தகத்தின் ஆரம்பத்தில்

சிப்ஸ் சிப்ஸ் சிப்ஸ்
குட் பாய் மிஸ்டர் சிப்ஸ் 1933 இல் பிரிட்டிஷ் விக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை 1934 இல் நூலாக வெளிவந்தது. நூலின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹில்டன். இந் நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது. இக் கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர். அவரின் பெயர் தான் சிப்ஸ் முழுப்பெயர் சிப்பிங். முதன்முதலாக ஆசிரியர் மாணவர் உறவை உணரவைத்தது. அதன் விளைவாக வாசித்தவரை உருக வைத்தவர் சிப்ஸ் போய்ட்டு வாங்க சார் மொழிபெயர்ப்பு நூல் அல்ல. இது குட் பாய் மிஸ்டர் சிப்ஸ் வாசித்த அனுபவம் மட்டுமே இனி வாசியுங்கள்.

இப்படி நூலுக்கான அறிமுகத்தை நூலாசிரியர் கொடுத்திருக்கிறார். பின் பக்கத்தில் ஒரு கருப்பு வெள்ளை படத்துடன் சிப்சுக்கு அறிமுகம் கொடுக்கிறார் நூலாசிரியர் இப்படி.

 "பார்வைக்கு கண்டிப்பானவர் உள்ளே இளக்கமான ஆள்"....

 என ஆசிரியரைப் பற்றிய அறிமுகம் அமைகின்றது. ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும். அவருடைய பண்பு நலன்கள் எவ்வாறு பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவருடைய ஆளுமையை எவ்வாறு வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஆரம்பகால ஆசிரியப்பணி  மனப்பாங்கு, பணிக்கு இணைந்த உடன் ஓர் ஆசிரியருக்கு எழும்புகின்ற சாதாரணமான என்ன பங்குகள், இவை எல்லாம் இந்த புத்தகத்தில் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

இன்றைய மாணவர்களைப் போன்று அன்றைய மாணவர்களும் இருந்துள்ளார்கள் என்ற வகையில் மாணவர் என்ற அந்த பருவம் மாற்றம் அடையவில்லை. ஆனால் ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த மனிதர்கள் மாறியுள்ளார்கள். என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

சிப்சுக்கு மட்டுமே கிடைத்த வரமாக சில விடயங்கள் எடுத்துக் காட்டப்படுகிறது. அவர் நேசித்த பாடசாலைக்கு அண்மையிலேயே வீடு அமைந்திருப்பது. ஒவ்வொரு நாளும் புதிய மாணவர்களை சந்திப்பது. ஓய்வு பெற்றதன் பின்னரும் மீண்டும் பணி செய்ய செல்வது இவையெல்லாம் சிப்சுக்கு மாத்திரம் கிடைத்த வரப்பிரசாதங்கள் ஆகத்தான் இந்த புத்தகத்தில் நான் பார்க்கிறேன்.

 வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்தது போன்ற திருமண வாழ்க்கை.

"குட் பாய் மிஸ்டர் சிப்ஸ்"

என்ற இறுதி வசனங்களை மீட்டி மீட்டி பார்க்கின்ற பாங்கு. 365 நாட்களுக்குள் சுருங்கிப்போன திருமண வாழ்வில் சிப்ஸ் உடைய பிற்போக்கு சிந்தனை களை எவ்வாறு  முற்போக்கு சிந்தனைகளாக அல்லதுவேறு விதமாகவும் சிந்திப்பதற்கு அவரது மனைவி எடுத்த முயற்சி இன்றைய எமக்கு சில விடயங்களை எடுத்துக் காட்டுகிறது.

கற்பனையாகக் கொண்டு வரப்பட்ட ப்ரூக்ஃபீல்ட் நகரம், அதற்கு அண்மையில் பின்தங்கிய பாடசாலையில் கற்ற மாணவர்கள், இரண்டு பாடசாலைகளுக்கு இடையிலான நட்பு ரீதியான உதைபந்தாட்ட போட்டி, ஒழுக்க விழுமியங்கள் குன்றியவர்களாக பின்தங்கிய பாடசாலை மாணவர்கள் இருப்பார்கள் என்ற பொதுவான மனப்பாங்கு,
விளையாட்டு எவ்வாறு ஒழுக்க விழுமியங்கள், நெறிமுறைகளை மேம்படுத்துகின்றது என்பதும்

 விளையாட்டின் ஊடாக வேறுபாடற்ற மகிழ்ச்சியை அடைய முடியும் என்ற செய்தியும் குட் பாய் மிஸ்டர் சிப்ஸ்  ஊடாக நாங்கள் படிக்க வேண்டி இருக்கிறது.

பொதுவாக திருமணங்களுக்கு முன்னைய ஆசிரியத்துவம் திருமணங்களுக்கு பிந்திய ஆசிரியத்துவம் மாறுபட்டு போவதனை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
 இது இயல்பாகவே சிப்ஸ் உடைய வாழ்விலும் இடம் பெற்றுள்ளது.

 என்றாலும் திருமணத்துக்குப் பிந்திய சிப்சுடைய உள மனவெழுச்சி சார்ந்த முதிர்ச்சி உண்மையிலேயே பாராட்ட கூடியதாக உள்ளது.

 அந்த வகையில் திருமணம் என்பது உள மனவெழுச்சி சார்ந்த விடயங்களுக்கு ஆற்றுப்படுத்த கூடிய இடமாகவும் தொழில் சூழலில் உளரீதியான அழுத்தங்களுக்கு உட்படுவது குறைப்பதற்காக திருமண வாழ்க்கை அமைந்து விடுகின்றது.

இது எல்லோருக்கும் அமைந்து விடுகிறதா?

இன்று எமக்கு தொழில் சூழலில் ஏற்படும் அழுத்தங்களை விடவும் குடும்ப சூழலில் ஏற்படுகின்ற அழுத்தங்கள் கூடுதலாக இருப்பதால் தொழிலில் திறமைகளை வெளிப்படுத்துவதில் சிக்கல்கள் தோன்றுகின்றன.

ஓய்வுக்குப் பின்னர்தொ ழில் வாழ்க்கையில் ஈடுபட்ட சிப்ஸ் காலை கூட்டங்களில் முதலாம் உலகப் போரின் பின்னர் இறந்த தமது மாணவர்களை நினைவு கூறும் போது அவர் ஒரு வசனத்தை குறிப்பிடுகிறார்,

" அவர்களின் பெயர்கள் மட்டுமல்ல அவர்களின் முகங்களும் எனக்கு தெரியும்"

 இது கல்விச் சூழலில் இருக்கின்ற கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற எமக்கு முக்கியமான ஒரு செய்தியாகும்.

இதே விடயத்தையே டீச்சர் ஏன் எங்களை பெயிலாகினீங்க என்ற புத்தகத்தில் அந்த மாணவர்களும் ஒரு கேள்வியை ஆசிரியர்களிடம் தொடுகிறார்கள்.

 எங்களைப் பெய்லாகிய பின்னர் நாங்கள் என்ன ஆனோம் என்று நீங்கள் தேடி பார்த்தீர்களா?

இது முடியுமானவரை தன்னிடம் கற்ற மாணவர்களுடன் தொடர்பினை நீண்ட காலம் பேணி வருவது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் படுகின்றது.

 இவை எல்லாவற்றையும் விட குட் பாய் மிஸ்டர் சிப்ஸ்  போதிக்கின்ற பாடம் என்ன?

இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் தூக்கி எறிந்துவிட்டு நிகழ்காலத்தில் வாழுங்கள் என்பதுவே.

யுத்த களத்தில் பாடசாலையை சுற்றிலும் குண்டுகள் வீசப்பட்டு குண்டு மழை பொழியும் பொழுதும் சிப்ஸ் வரலாற்றுப் பாடம் எடுக்கிறார்.

 அந்த ஆசிரியரின் அர்ப்பணிப்பு, அந்த ஆசிரியர் தொழில் திறன், பயமற்ற உணர்வு, மாணவர்களுக்கு கொடுக்கக் கூடிய தைரியம் என்பன கவனத்தில் இருத்த வேண்டிய ஒன்றாகும்.

  நிகழ்காலத்தை சந்தோசமாக அவர்களுடன் சிரித்து பேசி, வகுப்பறை பொழுதுகளை மிக மகிழ்வாகவும், மிகவும் சந்தோசமாகவும்  ஆசிரியர் இன்னும் கொஞ்ச நேரம் இந்த வகுப்பறையில் இருக்க மாட்டாரா? என்று ஒவ்வொரு பிள்ளையும் எண்ணுமளவுக்கு எங்களது வகுப்பறை பொழுதுகள் அமையவேண்டும் என்ற மிகப்பெரிய செய்தியை குட்பாய் மிஸ்டர் சிப்ஸ் இந்த புத்தகத்தின் ஊடாக எமக்கு போதிக்கிறார்.

 இன்றைய என் பயணத்தின் நண்பனாக இணைந்துகொண்ட போயிட்டு வாங்க சார்க்கு நான் போய்ட்டு வாங்க சார் என்று விடுப்பு கொடுக்கிறேன்.

 #Goodbye_Mr_Chips
#NIE_Diary
#Readingbooks

Wednesday, 20 November 2019

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க





#என்_வழிப்போக்கன் -16/11/2019

#எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

 எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளியிட்டகத்தினறால் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 62 பக்கங்களை உள்ளடக்கிய இந் நூலே என் காலை வழிப்போக்கனாக இணைந்து கொண்டது.

உலகம் முழுவதும் ஏழைகளுக்கு எதிராக உள்ள அமைப்பு குறித்து கோபமான விமர்சனம் இத்தாலி மாணவர்கள் 8 பேர் தங்களை பெயிலாக்கிய பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வருடம் முழுதும் எழுதிய கடிதத்தின் சாராம்சம்
என்று ஆரம்பிக்கிறது புத்தகத்தின் முதல் பக்கம்.

ஒரு மணித்தியாலத்துக்கு உள்ளே புத்தகத்தை வாசித்து முடிப்பதற்கு தூண்டுகின்றது.

1967 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் திறந்த பாடசாலையில் கற்ற மாணவர்களினால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்த இப் புத்தகம் 2017 ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளதுடன் 2019ஆம் ஆண்டு இறுதியிலேயே என் கையை வந்தடைந்துள்ளதனை இட்டு நான் கவலை அடைகிறேன்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையிலான உறவு என்பது மிகவும் புனிதமானது. அவர்களே எம்மை செதுக்குகிறார்கள். பெற்றோருக்கு பின்னர் எமக்கு மிகவும் உயர்ந்த மனிதர்களாக தோன்றுபவர்கள் ஆசிரியர்களே. ஒரு சந்தர்ப்பத்தில் பெற்றோர் சொல்வது பிழை ஆசிரியர் சொல்வது மட்டுமே சரி என்ற மனோபாவத்தைக்கூட நாங்கள் உள்ளாகிறோம். 

இவ்வாறு ஓராசிரியர் எம் மனதில் இடம் பிடித்து விடுகிறார். பிற்காலத்தில் நாம் எமது ஆசிரியர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் கடிதம் எழுதுகிறோம். இப் பண்பு எம்மிடம் வலுவிழந்து போய்    காணப்படுகின்றது. என்றாலும்  இத்தாலிய மாணவர்களில் 8 பேர் எழுதிய கடிதங்கள் மிகவும் பிரபலம் அடைவதற்கு காரணம் அவர்களின் பாடசாலையும் கல்வி முறைமையும் ஆகும்.

ஒரு மலையில் 20 வீடுகளையே உள்ளடக்கிய ஒரு கிராமத்தில்  கிறிஸ்தவ பாதிரியார் மிலானியினால்  ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் மாணவர்களே ஆசிரியர்கள். ஆசிரியர்களே மாணவர்களாகவும் கற்றலும் பகிர்தலும் என்ற கல்வி முறையை பின்பற்றி வருடங்களாக கற்ற இந்த மாணவர்கள், முறைசார் வகுப்பறைகளில் புறக்கணிக்கப்பட்டதனை ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக எழுதி இருக்கின்ற கடிதத்தில் ஒரு முக்கியமான விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தேவையற்ற சொற்களை அகற்றி தேவையான சொற்களை பயன்படுத்தி எளிமையாக ஒரு செய்தியை எத்தி வைப்பது என்பதனை நாங்கள் பார்பியானா பாடசாலைகளில் கற்றுக் கொண்டோம்".

இது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு விடயம் ஏனெனில் இயந்திரத்துக்குள் மூழ்கிப்போன மாணவச் சமூகம்  நீண்ட நேர வகுப்பறைகளை விரும்பவில்லை.

அவர்களுக்கு செய்தி மட்டுமே தேவை. ஏனையவற்றை தொலைபேசிகளில் மூழ்கி தேடிக் கொள்வர்.

அவர்கள் ஆசிரியரைப் பார்த்து கேட்கும் வினா என்னை ஊடறுத்துச்  சென்றது.

உங்களிடம் கற்ற மாணவன் நான் எங்கிருக்கிறேன் என்று தேடிக்கூட பார்க்காமல் எங்களை நீங்கள் அப்படியே மறந்து விட்டீர்கள்,  ஆனால் திறந்த பாடசாலைகளில் கற்ற நாங்கள் இன்னும் ஒருவரோடொருவர் தொடர்பில் இருக்கிறோம்.

ஆசிரியர்களை பொறுத்தவரை தமது தொழில் வாழ்க்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களை சந்தித்து இருப்பார்கள்.  ஆனால் ஒவ்வொரு மாணவனும் வித்தியாசமானதாகவும் வேறுபட்டதாகும் இருப்பதனை உங்களால் மறுக்க முடியாது.

 சிலநேரம் என்னுடைய எதிர்பார்ப்பு சாத்தியமற்றதாகவும் இருக்கலாம். ஆனால் ஓர் ஆசிரியனாக, ஒரு தாயாக தான்  செதுக்கிய அப் படைப்பை காண்பதில் ஆசை இருக்கும். இது ஒரு கலைஞனாக பார்த்தால் மிகவும் வியப்பானதாகம் இருக்கும்.

இது அவருக்கு மாத்திரமன்றி குறிப்பாக பழைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை எமக்கு தெளிவுப்படுத்துகின்றது.

 பார்பேரியன் திறந்த பாடசாலையில் கற்ற மாணவர்கள் இன்னும் ஒருவரோடொருவர் தொடர்பாக இருக்கிறோம். எமது பாடசாலைகளின் பழைய மாணவர்களாகிய நாங்கள்   இன்னும் தெளிவு பெற வேண்டிய தேவையை இந்த புத்தகம் எமக்கு இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைக்கிறது.

  உலகத்தைப் பற்றியோ அல்லது நவீன உலகை பற்றி போதிய அறிவின்றி அம்மாணவன் தன் வாழ்நாளை கழித்துவிட்டு செல்கின்றனர். அதனால் ஆசிரியர்களை பார்த்து மாணவர்கள் ஒரு சவால் விடுகிறார்கள். நோயாளிகளை வெளித்தள்ளி 10 ஆரோக்கியமானவர்களை சேர்த்துக் கொள்ளும் ஒரு வினோத மருத்துவமனையாக இன்றைய பாடசாலைகள் இருக்கின்றது" என்றார்.

 நீங்கள் அனைவரும்  இடைவிலகல் ஆற்ற அல்லது குறைவாக உள்ள  இயலுமானவரை இயலாதவர்களையும் ஒரே வகுப்பறையில் சமனாக நடத்துவதற்கான வகுப்பறை முறையை ஆசிரியர்களாகிய நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதே இம் மாணவர்களினதும் அதேவேளையில் கல்வியாளர்களதும்  எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

 இச் செயன்முறையின் போது ஆசிரியர்கள் விமர்சிக்கப் படுவதையும் இம் மாணவர்கள் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளதனை கண்டுக்கொள்ளாமல் விடமுடியாது.

உங்களின் கட்டாய பள்ளிகள் ஆண்டுதோறும் பல லட்சம்  குழந்தைகளை பெயிலாகி வெளியேற்றுகின்றன.  அவர்கள் மீண்டும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் பள்ளியை இறக்கவில்லை ஆனால் அவர்கள் எல்லாம் தங்களின் வகுப்பு தோழர்களை இழந்துவிட்டனர்.

பாடசாலையின் மிக முக்கிய வகிபங்கும் நோக்கங்களில் ஒன்றும் சமவயது தோழர்களுடன் பழகுவதற்காண பண்பு ரீதியான விருத்தி ஆகும். அதனையேனும் உறுதி செய்தல் வேண்டும்.

#NIE_Diary
#Thahir_Noorul_Isra

Sunday, 17 November 2019

#ஆயிஷா ( Aisha)ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை kg.



என் வழிப்போக்கன் - 14/11/2019

ஆயிஷா
ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை.

இவள் தான் இன்று என் காலை பயணத்தில் கூட பயணித்தவள்.

 திரு. இரா நடராசன்  ஆயிஷா, ஒரு விஞ்ஞான நூலுக்கான அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை என்னும் குறுநாவலில் 24 பக்கங்களில் ஆயிஷாவை வாழவைத்து மடிந்து போக செய்திருக்கிறார்.

புத்தகத்தை வாசிக்கும்போது இது ஒரு குறுநாவல் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தவில்லை.

வாசித்து முடிந்தபின்னர் ஆரம்பத்தில் நூலாசிரியர் குறிப்பிடுவது போல ஏனைய 12 நூல்களையும் வாசிக்க வேண்டும் என்று ஆசை வந்தது.

ஆயிஷாவின் ஆசிரியர் எழுதிய 12 நூல்களையும் தேடி பயணித்தேன். அப்போதுதான் இது ஒரு புனைகதை என்று தெரியவந்தது.

திரு இரா நடராசன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்.  வாசிக்கும்போது முன்னுரை..... இவ்வளவு பெரிதாக இருக்குமா?  என்ற ஐயம் என்னுள் தோன்றினாலும் முடியும்வரை வாசிக்க உங்கள் புத்தகம் என்னை ஆர்வப் படுத்தியது.

யாரையும் குற்றம் சொல்லாது எம் சுற்றம் நடந்து கொள்வதை அப்பட்டமாக ஆயிஷா கதையில் பேசியுள்ளாள். அவள் வாயிலாக எழுந்த எல்லா வினாக்களும் உங்களின் இளமைக் கால வினாக்களாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இன்றைய கல்வி தொடர்பில் முன்வைக்கப்படும் எல்லா விமர்சனங்களையும் அது உள்ளடக்கியுள்ளது.

இப் புத்தகத்திற்கு ஆயிஷா என்ற பெயர் இட காரணம் என்ன?

எது எப்படியோ நான் சார்ந்த சமூகத்திற்கு ஆயிஷா நல்ல ஒரு படத்தை காட்டி இருக்கிறாள்.

கல்விக்கு வயதுக்கும் தொடர்பில்லை. அது அதுக்கு ஒரு வயது வேண்டும் என்பதனையும் அவள் சரியாக எனக்கு சொல்லி இருக்கிறாள். வேறென்ன வேண்டும் இதை விட பெரிய பாடம்.

தூங்கிக் கொண்டிருக்கும் எம் சமூகம் ஆயிஷாகளை உருவாக்க வேண்டிய தார்மீக கடமையில் இருக்கிறது.

இம் முயற்சியில் என்னுடைய பங்கு என்ன என்று நாம் ஒவ்வொருவரும் சுயவிசாரணை செய்து கொள்வோம்.

ஆயிஷாவை என் கையில் சேர்த்த #உரையாடல்_தொடர்கிறது என்ற முகநூல் நட்புக்கு நன்றி.

#Thahir_Noorul_Isra
#NIE_Diary
#Aisha_Ira_Nadarasa

Wednesday, 6 November 2019

சில நிமிடங்கள் பார்வை இழந்த என் விழிகள் (Sighted minutes of my eyes)

சில நிமிடங்கள் பார்வை இழந்த என் விழிகள்.

கற்றல் என்பது மனித கருவில்  இருந்து ஆரம்பிக்கின்றது என விஞ்ஞானம் குறிப்பிடுகின்றது. இதனாலே கற்றல் என்பது வாழ்நாள் முழுதும் இடம்பெறும் ஒரு செயற்பாடு என உளவியல் குறித்துக் காட்டுகிறது. நாம் எவ் விடயங்களை கற்க வேண்டும் என்று பட்டியலிட்டு கற்பதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. மனிதன் இடத்துக்கிடம், சூழலுக்கேற்பவும்  சந்தர்ப்பத்திற்கேற்பவும்  கற்கின்றான்.

சிறுபராயம் முதல் எமக்கு வழிகாட்டிய ஒரு விடயமே பிறருக்கு உதவுதல். இது ஒரு குணப் பண்பாக நாம் எம்மில் வளர்த்து வந்த ஒரு விடயம். ஆனால் பிறருக்கு உதவுவதற்கும் நாங்கள் படிக்க வேண்டுமா என சிந்தித்திருக்கிறோமா? 

‌மிக அண்மையிலேயே நான் பிறருக்கு உதவவும் கற்றல் வேண்டும் எனும் விடயத்தை கற்றுக்கொண்டேன். 

ஒரு நபருக்கு நாங்கள் உதவி செய்ய முற்படுதல்  என்பது மிக அழகான  பண்பாகும். நாங்கள் உதவி செய்யும் பொழுது எங்களுக்கு தேவையான சந்தர்ப்பங்களில் உதவிகள் கிடைக்கின்றன இதனை எம் வாழ்நாளில் நாங்கள் உணர்ந்திருப்போம். எமக்குக் கிடைத்த மகிழ்ச்சியினால் நாம் தொடர்ந்தும் இன்னொருவருக்கு  உதவி செய்ய முன் வருகிறோம். இவ்வாறு உதவி செய்வதற்கு நாம் முறையாக கற்றுள்ளோமா? அல்லது கற்பிக்கப்பட்டுள்ளோமா?  என்ற வினா எழுந்ததுண்டா? இதுவே என்னை ஆச்சரியத்தில் உட்படுத்திய விடயம் ஏனெனில் எதை செய்வதென்றாலும் முறையாக செய்தல் வேண்டும். அதற்கு முறையாக கற்றல் வேண்டும்.

‌ முதல் விடையம்

உதவி செய்பவர் உதவி செய்ய விருப்போடு இருப்பது போல உதவி பெருபவர் அவரின் உதவியை பெற தேவையோடு இருக்கிறாரா? என்பதனை ஏதேனும் ஒரு வகையில் உறுதிப்படுத்தல் வேண்டும்.

பிறருக்கு உதவுதல் என்ற பாடத்தில்  எவ்வாறு பிறருக்கு உதவுதல் வேண்டும் என்பதனை பாடப் புத்தகங்கள் நமக்கு சொல்லித் தருகின்றன. பார்வை குறைபாடுடைய நபர் வெள்ளை பிரம்புடன் பாதையை கடக்க தயாராக இருப்பார் அவரின் கையைப் பிடித்து கொண்டு மறு புறத்தில் அவரை சேர்ப்பது கூட ஒரு உதவி என்பதனை அழகாக  அது எடுத்துக் காட்டியுள்ளது.  நாங்கள் பல சந்தர்ப்பங்களில் பார்வை குறைபாடு உடைய ஒரு நபரை இவ்வாறு பாதையில் ஒரு புறத்திலிருந்து மறுப்பு இடத்திற்கு அழைத்துச் சென்று இருப்போம்.

உங்களுடைய  புறங்கையால் அவருடைய புறங்கையை தட்டுவது ஊடாக நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன். அவ்வாறே அவரின் புறங்கையால் உங்களது கையை தட்டும் போது அவர்  உதவியை ஏற்க தயாராக இருக்கிறார் என்பதனை அறிந்து கொள்கிறோம்.  

யாரும் எப்போதும்  தன்னுடைய தேவையை நிறைவு செய்து கொள்வதற்கு இன்னொருவரின் உதவியைப் பெறவும் தங்கி நிற்கவும் ஒருபோதும் விரும்புவதில்லை.

கடவுள் ஒவ்வொருவருக்கும் விசித்திரமான ஆற்றல்களையும் உள்ளுணர்வையும் கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் இயலாமை உடைய ஒரு நபராக இருந்தாலும்கூட கடவுள் எல்லோருக்கும் வித்தியாசமான திறமைகளையும், ஆளுமைகளையும், பண்புகளையும், குணங்களையும், கொடுத்திருக்கிறார். அடிப்படையில் அவற்றை பிரயோகித்து தனது வாழ்நாளில் இன்னொருவரிடம் தங்கி நிற்காமல் செல்வதற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். நாம் சுயமாக எனது உதவியை செய்ய முற்படும் செயலானது அவருடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான சந்தர்ப்பங்களை முடக்கும் செயற்பாடாகும்.

ஒருவனுடைய  கால் உரையில் தன்னுடைய காலைவிட்டு பார்க்கும் போது தான் அதனுடைய வேறுபாடுகளையும் அதனுடைய விசித்திரங்களையும் எங்களால் முறையாக உணர்ந்துகொள்ள முடியும்.  ஒரு நாள் பார்வைக் குறைபாடுடைய நபராக நாங்கள் இருந்து பார்த்தால்தான் அவர்களுடைய உணர்வுகளை எங்களால் முற்றாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். ஒரு சில மணித்தியாலங்கள் பார்வை குறைபாடு உடைய நபராக மாரிய அன்று நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம் இது.  இப்பாடம் உங்களுக்கும் உதவியாக அமையும் என்று கருதியதால் இதனை பதிவிடுகிறேன்.
நன்றி.
7/11/2019
#NIE_Diaryll

Saturday, 2 November 2019

விதி (Fate)



விதி


எல்லோரும் எழுதிய பின் - நான்
எழுத என்ன இருக்கிறது - அவன்
எழுதிய பின் அதில் - நான்
எழுத என்ன இருக்கிறது.

வாசித்து ஓய்ந்த பின்னர்
விமர்சிக்க ஏது இருக்கிறது - அவன்
வாசித்து முடித்த பின்னர் - அதில்
 விமர்சிக்க என்ன  இருக்கிறது.

காதுக் குத்தி அதன்
துளை தூர்ந்து  போகும் முன்
கறிவேப்பிலைக் குச்சிப் போடும்
எனது உம்மா.

ஆள்துளையிட்டு
துளை தூர்ந்து போகாமல் - இட
ஒரு கம்புக்  குச்சிகூட
கிடைக்காமல் போனதோ!

பானையில் இருந்தாலே
அகப்பையில் வரும்
தலைக்குல் இருப்பதெல்லாம்
மூலையே இல்லாமல்
மூளையில்லை

பிந்தி வந்த
என் கவிதை
ஏந்தி வந்த செய்தி கேட்டீர்
முந்தி வந்தவனுக்கு
பிந்தி வந்தவன்
சொன்ன செய்தி
குழி வெட்டினால்
வெட்டிய குழியில்
வீழ்ந்தே சாவாய்.

Tuesday, 22 October 2019

நீங்கள் ஒரு பள்ளிச் சமூகப் பணியாளனைக் (School Social Worker) கண்டுள்ளீர்களா?




நீங்கள் ஒரு பள்ளிச் சமூகப் பணியாளனைக் (School Social Worker) கண்டுள்ளீர்களா?
கல்வி என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். கட்டாயக் கல்வி வயதெல்லைக்கு உட்பட்ட எல்லாப் பிள்ளைகளும் பாடசாலையில் தனது நாட்களை நகர்த்தல் வேண்டும் எனபது இலங்கையின் கல்வி முறைமையாகும்;. இலவசக் கல்வியின் விளைவாகவும் இலங்கையின் எழுத்தறிவு வீதம் வளர்ந்தவர்களிடம் 72% மாகவும் இளைஞர்களிடம் 79% மாகவும் காணப்படுகின்றது. எவ்வாறெனினும் 2009 ஆம் ஆண்டு மேற்  கொள்ளப்பட்ட ஆய்வில், இலங்கையில் 45000கும் அதிமான மாணவர்கள் பாடசாலைச் செல்லும் வயதில் பாடசாலையைவிட்டு இடைவிலகியுள்ளனர். அவ்வாறே பரீட்சை ஆணையாளர் (2007) 51% மான பிள்ளைகள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளின் அறிக்கை (2014) குறிப்பிடும் போது 14%மான பிள்ளைகள்  சாதாரண தரத்திற்கு முன்னரே பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர் எனக் குறிப்பிடுகின்றது. இலங்கை பொலீஸ் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் 2018 ஆம் ஆண்டு முடிவில் 8-16 வயதிற்கும் இடையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 96 என சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையிலே பள்ளிச் சமூகப் பணியாளர் என்பவன் யார்? அவரின் தேவை யாது? ஆவரின் பணிகள் எவ்வாறு காணப்படும் என்பதை பற்றி உங்களிடம் குறிப்பிட முற்படுகின்றேன்.

பாடசாலைகளுக்குப் பள்ளிச் சமூகப் பணியாளரின் அவசியம் தொடர்பில் தனது முனைவர் பட்ட ஆய்வினை மேற்க்கொண்ட கல்வியலாளர் ஹெலிக்ஸ் ஸ்கூல் சோஷியல் வொர்க்கர்க் ஒவ்வொரு பள்ளிக்கும் அவசியம்என பரிந்துரைத்துள்ளார். அவர் தொடர்ந்தும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

 ‘‘குழந்தைகளுக்கு முழுமையான வளர்ச்சி அளிப்பதேக் கல்வி. இன்றையக் கல்வி முறையில் இதற்கான சாத்தியங்கள் குறைவு. வளரும் சூழலும், குடும்பப் பொருளாதாரமும் குழந்தையின் நடத்தையில் பெரும்பங்கு வகிக்கிறன. இவற்றைப் புரிந்துக் கொண்டு குழந்தையின் மேம்பாட்டுக்காக செயல்படுவதே ஸ்கூல் சோஷியல் வொர்க்கரின் பணி. குழந்தையின் பிளஸ் பாயின்டுகளை கண்டறிந்து தட்டிக் கொடுப்பதும், பிரச்சினைகளைப்  புரிந்துக் கொண்டு அதிலிருந்து விடுபட்டு பட்டாம் பூச்சியாகப் பறக்க உதவுவதும் அவசியம். பள்ளி நிர்வாக நடைமுறை, வகுப்பறைச் செயல்பாடு என பிரச்சினை எதில் இருந்தாலும் தயக்கம் இன்றி சுட்டிக் காட்டுவதும் இதில் அடக்கம். குழந்தையின் முழு வளர்ச்சிக்கு தடையாக நிற்பது எதுவானாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் தீர்வுக்கு வழிகாட்ட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சமூகப் பணியின் தேவையை வலியுறுதினாலும் எமது நாட்டில் இன்னும் இச் சொற்பதம் பரீட்சயம் அற்றதாகவும், பிழையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை கவலையளிக்கின்றது. பொதுச்சேவை, சமூகச் சேவை, சமூகத் தொழிற்பாடு என்று பயன்படுத்தி வந்த மக்கள் தாம் செய்யும் சேவைகளுக்கான சிறந்த சொற்பதம் சமூக பணிஎனும் இப்பதத்தைப் பிழையாகக்  கையாள்வது வருத்தத்தைத் தருகின்றது. ஆனால் சமூகப் பணி என்பதும் கட்டமைக்கப்பட்ட தொழில் வாண்மையாகும். அது பிரதானமாக 06 அம்சங்களையும் பரந்த சேவைப் பரப்பையும் உள்ளடக்கியுள்ளது.

1.     தனியாள் சமூகப் பணி          (Individual Social Work)
2.     குழுச் சமூகப் பணி             (Group Social Work)
3.     சமூகம் சார் சமூகப் பணி       (Community social Work)
4.     சமூகக் கொள்கைகள்           (Social Policy)
5.     சமூகப் பணி ஆய்வு            (Social Work Research)
6.     சமூகத் தொழிற்பாடுகள்         (Social Action)

மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அத்துறையில் தேர்ச்சி இறுத்தல் வேண்டும். ஏனெனில் எவ்வாறு ஒரு வைத்தியரின் வேலையை ஆசிரியரால் பார்க்க முடியாதோ அவ்வாறே சமூகப் பணியாளனினால் ஆற்றப்பட வேண்டிய பணியும் ஆகும். இலங்கையில் தேசிய சமூகப் அபிவிருத்தி நிறுவனமே சமூக பணியாளர்களை உருவாக்குகின்றது.

      பாடசாலைச் சமூகப் பணியாளர்கள் விசேடமானவர்கள். அவர்கள் சமூகத்திற்குக் கிடைத்தப் பெரும் சொத்தாவாரகள். மானவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான மத்தியஸ்த்தராக செயற்படுகின்றனர். ஏனெனில் நாம் பொறுப்புத் துறப்புச் சமூகமாக வாழ்வதற்கே பயிற்றப்பட்டுள்ளோம். பிள்ளையின் கற்பித்தலில் அதிகம் பொறுப்புள்ளவர்கள் ஆசிரியர்கள் என்று பெற்றோரும், பெற்றோர்கள் பிள்ளையின் கற்றலில் அக்கறைகாட்டுவதில்லை என ஆசிரியர்களும், ஆசிரியர் கற்பிப்பதில்லை என பிள்ளைகளும் தம் நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொருவர் இடையிலும் காணப்படும் இடைவெளியைக் குறைத்து அனைவரும் தமது கடமைகளை முறையானவும் விருப்படனும் நிறைவேற்றும் பணியையே பள்ளிச் சமூகப் பணியாளர் ஆற்றுகின்றார். துரதிஷ்டவசமாக இலங்கையில் இன்னும் ஸ்கூல் சோஷியல் வொர்க்கரின் தேவை உணரப்பாடாமல் இருப்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

       பள்ளிச் சமூகப் பணியாளனின் வகிபாகம் யாதாக இருக்கும். பொது இலக்குகளை அடைந்துக்கொள்ள அவர், பலத் தொப்பிகளை தேவைக்கு ஏற்ப அணிந்துக் கொள்கின்றார். அவரது வகிபாங்கு எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை கிறிஸ்டினா டோபன் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். பிள்ளை பாடசாலைக்கு வருவதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைக் குடும்பத்தில் பெற்றுக் கொள்கின்றதா என்பதனை உறுதி செய்து, அவர்கள் எதை செய்ய வேண்டும், அவர்களிடம் காணப்படும் குழப்பங்கள், பாடசாலைக்கு வெளியே அவர்களுக்கு காணப்படும் தேவைகள், என்பவற்றில் கவனம் செலுத்தி அவற்றை அவர்களே நிவர்த்தி செய்வதற்கு உதவியளிக்கின்றார்.

  • பள்ளிச் சமூகப் பணியாளர் ஒருவரின் செயற்பாடுகள் பின்வருமாறு அமைகின்றது.
  • பிள்ளை வினைத்திறனுடனும், செயற் திறனுடனும், கற்பதற்குத் தேவையான அனைத்து விடயங்களையும், குடும்பம், பாடசாலை, சமூகமட்டத்தில் உறுதிப்படுத்தல்.
  • பிரச்சினையுடைய அல்லது உதவி தேவைப்படும் பிள்ளையின் விடயத்தில் தலையிட்டுப் பாடாசாலைக்குத் தொடர்ந்து வருவதற்கும் இயைந்து செயற்படவும் வழிவகுத்தல்.
  • விசேடத் தேவையுடைய மற்றும் கற்றல் இடர்பாடுடைய பிள்ளைகள் தொடர்பான கூட்டங்களில் பங்குபற்றி அவர்களின் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்தல். அவர்களுக்கான நிகழ்ச்சித் திட்டங்களைப் பாடசாலை மற்றும்  சமுதாய மட்டத்தில் நடத்துதல். பெற்றோரை பங்குப் பெறச்செய்தலுக்கு வழிகாட்டல்;.
  • மாற்றுத் திறனாளிகளின் சமூக மற்றும், விருத்தி வரலாற்றைத் தயாரித்தல்
  • நடத்தைப் பிறழ்வுள்ளப் பிள்ளையின் விடயத்தில் தலையீடு செய்து மகிழ்வான கற்றல் வகுப்பறைக்குப் பழக்கப்படுத்தல்.
  • முரண்பாட்டு மற்றும் கோப முகாமைத்துவத்தை மேற்க்கொள்ளுதல்
  • குடும்ப நெருக்கீட்டில் இருந்து மீள்வதற்கு மாணர்கள், ஆசிரியர்கள்  மற்றும் பெற்றோருடன் இணைந்து உழைத்தல்.
  • உள ஆரோக்கியத்தை மேம்படுத்தப் பிள்ளைகளிடம் கணிப்பீடுகளை மேற்க்; கொள்ளுதல்.
  • சிறுவரத்; துஸ்பிரயோகம், மற்றும் புறக்கணிப்புக்கு உள்ளாகுஞ்; சிறுவர்களை அடையாளம் காணுதலும், அவர்களின் உளவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் தலையிடுதலும்;.
  • நடத்தை ஒழுங்கற்ற மற்றும் உணர்ச்சிப் பிறழ்வுள்ள பிள்ளைகளில் தலையீட்டுச் செயன்முறைகைளை மேற்க்கொள்ளுதல்.
  • வளங்களைப் பகிர்ந்தளித்தல்

   போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றர். எனவே  ஆரோக்கியமானதும், உயர் மட்டத்தில் கல்வி அடைவை எய்துவதற்கும் சமூகப் பணியாளர்களின் தேவை பரவலாக உணரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நீங்களும் ஒரு பள்ளிச் சமூகப் பணியாளராக உருவாவதற்கு வாழ்த்துக்கள்.

தாஹிர் நூருல் இஸ்ரா
உதவி விரிவுரையாளர்,
தேசிய கல்வி நிறுவகம்.
மகரகம
21/10/2019

உசாத்துணை
Perera , M. A. N. R . (2010) School Dropouts in Sri Lanka: A Sociological Analysis. Perera Department of Sociology and Anthropology, University of Sri Jayewardenepura.

Friday, 29 March 2019

Why they are calling her as Women - ஏன் அவளை மகளீர் என்கிறார்கள்


ஏன் அவளை  அவர்கள்மகளீர் என்கிறார்கள்?

அவள் விரலும் மனமும்
அவனுக்கு மென்மை என்பதாலா
அவர்கள் அவளை மகளீர் என்கின்றனர்.

விரல் இடுக்கில்
சரிந்து விழும்
சாரல் போல் கோலமிடும்
குழல் பிடித்து
நெருப்பு மூட்டும்
குலப் பெண் என்பதாலா
அவர்கள் அவளை மகளீர் என்கின்றனர்.

அவன் மகவுக்கு தாயாகி
தாய்பாலை வீரமாக்கி
அவனை வளர்பதனாலா
அவர்கள் அவளை மகளீர் என்கின்றனர்.

கரு அறை எனும்
சுவர்கத்தை சமந்து திரிபவள்
கருனை மொழியால்
அவனுக்கு எல்லாமாகி
உருகும் மெழுகு திரியவள்
புரியவில்லை
அவர்கள் ஏன் அவளை மகளீர் என்கின்றனர்?

08/03/2019 women's day poem for Suriyan FM,

Needs your time -வேண்டுவதெல்லாம் உன் நேரம்

வேண்டுவதெல்லாம் உன் நேரம்

ஓய்வு
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

சூரியன் பகலிலும்
சந்திரன் இரவிலும்
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

அலை கரையுடனும்
கரை அலையுடனும்
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

ஒளிரும் நட்சத்திரங்களும்
ஓடும் இதயமும்
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

விரிந்த தரையும்
உயர்ந்த மரங்களும்
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

ஓடும் ஆறும்
பாயும் நீர்வீழ்ச்சியும்
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

பாலாய் போன
பல்தேசிய கம்பனிகளால்,
இரவெல்லாம் விழித்து
பகலெல்லாம் உறங்கும்
மனிதர்கள்

முழு உருவமும்
முன்னே இருந்தாலும்
பேசத்துடிக்கும் உதடுகளும்
கனத்த இதயங்களும்
எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லாத
இல்லாலாய் வாழும்
அத்தனை உறவுகளுக்கும்
ஓய்வு தேவை

வேண்டாம் உன் பணம்
வேண்டுவதெல்லாம் உன் நேரம்.

20th March 2019 - Vahavam








#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...