நீங்கள் ஒரு பள்ளிச் சமூகப் பணியாளனைக் (School Social Worker)
கண்டுள்ளீர்களா?
கல்வி என்பது மனிதனின் அடிப்படைத்
தேவைகளில் ஒன்றாகும். கட்டாயக் கல்வி வயதெல்லைக்கு உட்பட்ட எல்லாப் பிள்ளைகளும்
பாடசாலையில் தனது நாட்களை நகர்த்தல் வேண்டும் எனபது இலங்கையின் கல்வி முறைமையாகும்;. இலவசக் கல்வியின்
விளைவாகவும் இலங்கையின் எழுத்தறிவு வீதம் வளர்ந்தவர்களிடம் 72% மாகவும் இளைஞர்களிடம் 79% மாகவும் காணப்படுகின்றது.
எவ்வாறெனினும் 2009 ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட ஆய்வில், இலங்கையில்
45000கும் அதிமான மாணவர்கள் பாடசாலைச் செல்லும் வயதில்
பாடசாலையைவிட்டு இடைவிலகியுள்ளனர். அவ்வாறே பரீட்சை ஆணையாளர் (2007) 51% மான பிள்ளைகள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை எனக்
குறிப்பிட்டுள்ளார். மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளின் அறிக்கை (2014) குறிப்பிடும் போது 14%மான பிள்ளைகள் சாதாரண தரத்திற்கு முன்னரே பாடசாலையை விட்டு
இடைவிலகுகின்றனர் எனக் குறிப்பிடுகின்றது. இலங்கை பொலீஸ் திணைக்களத்தின்
புள்ளிவிபரங்கள் 2018 ஆம் ஆண்டு முடிவில் 8-16 வயதிற்கும் இடையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 96 என சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையிலே பள்ளிச் சமூகப் பணியாளர் என்பவன்
யார்? அவரின் தேவை யாது? ஆவரின் பணிகள்
எவ்வாறு காணப்படும் என்பதை பற்றி உங்களிடம் குறிப்பிட முற்படுகின்றேன்.
பாடசாலைகளுக்குப் பள்ளிச் சமூகப்
பணியாளரின் அவசியம் தொடர்பில் தனது முனைவர் பட்ட ஆய்வினை மேற்க்கொண்ட கல்வியலாளர்
ஹெலிக்ஸ் “ஸ்கூல்
சோஷியல் வொர்க்கர்க் ஒவ்வொரு பள்ளிக்கும் அவசியம்” என
பரிந்துரைத்துள்ளார். அவர் தொடர்ந்தும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
‘‘குழந்தைகளுக்கு முழுமையான வளர்ச்சி அளிப்பதேக் கல்வி. இன்றையக் கல்வி
முறையில் இதற்கான சாத்தியங்கள் குறைவு. வளரும் சூழலும், குடும்பப்
பொருளாதாரமும் குழந்தையின் நடத்தையில் பெரும்பங்கு வகிக்கிறன. இவற்றைப் புரிந்துக்
கொண்டு குழந்தையின் மேம்பாட்டுக்காக செயல்படுவதே ஸ்கூல் சோஷியல் வொர்க்கரின் பணி.
குழந்தையின் பிளஸ் பாயின்டுகளை கண்டறிந்து தட்டிக் கொடுப்பதும், பிரச்சினைகளைப் புரிந்துக் கொண்டு
அதிலிருந்து விடுபட்டு பட்டாம் பூச்சியாகப் பறக்க உதவுவதும் அவசியம். பள்ளி நிர்வாக
நடைமுறை, வகுப்பறைச் செயல்பாடு என பிரச்சினை எதில்
இருந்தாலும் தயக்கம் இன்றி சுட்டிக் காட்டுவதும் இதில் அடக்கம். குழந்தையின் முழு
வளர்ச்சிக்கு தடையாக நிற்பது எதுவானாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் தீர்வுக்கு
வழிகாட்ட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு சமூகப் பணியின் தேவையை
வலியுறுதினாலும் எமது நாட்டில் இன்னும் இச் சொற்பதம் பரீட்சயம் அற்றதாகவும், பிழையாகவும்
பயன்படுத்தப்பட்டு வருகின்றமை கவலையளிக்கின்றது. பொதுச்சேவை, சமூகச் சேவை, சமூகத் தொழிற்பாடு என்று பயன்படுத்தி
வந்த மக்கள் தாம் செய்யும் சேவைகளுக்கான சிறந்த சொற்பதம் ‘சமூக
பணி’ எனும் இப்பதத்தைப் பிழையாகக் கையாள்வது வருத்தத்தைத் தருகின்றது. ஆனால்
சமூகப் பணி என்பதும் கட்டமைக்கப்பட்ட தொழில் வாண்மையாகும். அது பிரதானமாக 06 அம்சங்களையும் பரந்த சேவைப் பரப்பையும் உள்ளடக்கியுள்ளது.
1. தனியாள் சமூகப் பணி (Individual Social Work)
2. குழுச் சமூகப் பணி (Group Social Work)
3. சமூகம் சார் சமூகப் பணி (Community social Work)
4. சமூகக் கொள்கைகள் (Social Policy)
5. சமூகப் பணி ஆய்வு (Social Work Research)
6. சமூகத் தொழிற்பாடுகள் (Social Action)
மேற்குறிப்பிட்ட விடயங்களை
நடைமுறைப்படுத்துவதற்கு அத்துறையில் தேர்ச்சி இறுத்தல் வேண்டும். ஏனெனில் எவ்வாறு
ஒரு வைத்தியரின் வேலையை ஆசிரியரால் பார்க்க முடியாதோ அவ்வாறே சமூகப் பணியாளனினால்
ஆற்றப்பட வேண்டிய பணியும் ஆகும். இலங்கையில் தேசிய சமூகப் அபிவிருத்தி நிறுவனமே சமூக
பணியாளர்களை உருவாக்குகின்றது.
பாடசாலைச் சமூகப் பணியாளர்கள் விசேடமானவர்கள். அவர்கள் சமூகத்திற்குக்
கிடைத்தப் பெரும் சொத்தாவாரகள். மானவர்கள், ஆசிரியர்கள்,
பெற்றோர் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான
மத்தியஸ்த்தராக செயற்படுகின்றனர். ஏனெனில் நாம் பொறுப்புத் துறப்புச் சமூகமாக
வாழ்வதற்கே பயிற்றப்பட்டுள்ளோம். பிள்ளையின் கற்பித்தலில் அதிகம்
பொறுப்புள்ளவர்கள் ஆசிரியர்கள் என்று பெற்றோரும், பெற்றோர்கள்
பிள்ளையின் கற்றலில் அக்கறைகாட்டுவதில்லை என ஆசிரியர்களும், ஆசிரியர்
கற்பிப்பதில்லை என பிள்ளைகளும் தம் நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இவ்வாறு
ஒவ்வொருவர் இடையிலும் காணப்படும் இடைவெளியைக் குறைத்து அனைவரும் தமது கடமைகளை
முறையானவும் விருப்படனும் நிறைவேற்றும் பணியையே பள்ளிச் சமூகப் பணியாளர்
ஆற்றுகின்றார். துரதிஷ்டவசமாக இலங்கையில் இன்னும் ஸ்கூல் சோஷியல் வொர்க்கரின் தேவை
உணரப்பாடாமல் இருப்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.
பள்ளிச் சமூகப் பணியாளனின்
வகிபாகம் யாதாக இருக்கும். பொது இலக்குகளை அடைந்துக்கொள்ள அவர், பலத் தொப்பிகளை தேவைக்கு ஏற்ப அணிந்துக் கொள்கின்றார். அவரது வகிபாங்கு
எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை கிறிஸ்டினா டோபன் என்பவர் பின்வருமாறு
குறிப்பிடுகின்றார். “பிள்ளை பாடசாலைக்கு வருவதற்குத்
தேவையான அடிப்படைத் தேவைகளைக் குடும்பத்தில் பெற்றுக் கொள்கின்றதா என்பதனை உறுதி
செய்து, அவர்கள் எதை செய்ய வேண்டும், அவர்களிடம்
காணப்படும் குழப்பங்கள், பாடசாலைக்கு வெளியே அவர்களுக்கு
காணப்படும் தேவைகள், என்பவற்றில் கவனம் செலுத்தி அவற்றை
அவர்களே நிவர்த்தி செய்வதற்கு உதவியளிக்கின்றார்.
- பள்ளிச் சமூகப் பணியாளர் ஒருவரின் செயற்பாடுகள் பின்வருமாறு அமைகின்றது.
- பிள்ளை வினைத்திறனுடனும், செயற் திறனுடனும், கற்பதற்குத் தேவையான அனைத்து விடயங்களையும், குடும்பம், பாடசாலை, சமூகமட்டத்தில் உறுதிப்படுத்தல்.
- பிரச்சினையுடைய அல்லது உதவி தேவைப்படும் பிள்ளையின் விடயத்தில் தலையிட்டுப் பாடாசாலைக்குத் தொடர்ந்து வருவதற்கும் இயைந்து செயற்படவும் வழிவகுத்தல்.
- விசேடத் தேவையுடைய மற்றும் கற்றல்
இடர்பாடுடைய பிள்ளைகள் தொடர்பான கூட்டங்களில் பங்குபற்றி அவர்களின் கல்விக்கான
உரிமையை உறுதிப்படுத்தல். அவர்களுக்கான நிகழ்ச்சித் திட்டங்களைப் பாடசாலை
மற்றும் சமுதாய மட்டத்தில் நடத்துதல்.
பெற்றோரை பங்குப் பெறச்செய்தலுக்கு வழிகாட்டல்;.
- மாற்றுத் திறனாளிகளின் சமூக மற்றும், விருத்தி வரலாற்றைத்
தயாரித்தல்
- நடத்தைப் பிறழ்வுள்ளப் பிள்ளையின் விடயத்தில் தலையீடு செய்து மகிழ்வான கற்றல் வகுப்பறைக்குப் பழக்கப்படுத்தல்.
- முரண்பாட்டு மற்றும் கோப முகாமைத்துவத்தை மேற்க்கொள்ளுதல்
- குடும்ப நெருக்கீட்டில் இருந்து மீள்வதற்கு
மாணர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் இணைந்து உழைத்தல்.
- உள ஆரோக்கியத்தை மேம்படுத்தப் பிள்ளைகளிடம்
கணிப்பீடுகளை மேற்க்; கொள்ளுதல்.
- சிறுவரத்; துஸ்பிரயோகம், மற்றும் புறக்கணிப்புக்கு உள்ளாகுஞ்; சிறுவர்களை
அடையாளம் காணுதலும், அவர்களின் உளவியல் மற்றும் சமூகப்
பிரச்சினைகளில் தலையிடுதலும்;.
- நடத்தை ஒழுங்கற்ற மற்றும் உணர்ச்சிப் பிறழ்வுள்ள பிள்ளைகளில் தலையீட்டுச் செயன்முறைகைளை மேற்க்கொள்ளுதல்.
- வளங்களைப் பகிர்ந்தளித்தல்
போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றர். எனவே
ஆரோக்கியமானதும், உயர் மட்டத்தில் கல்வி அடைவை எய்துவதற்கும் சமூகப் பணியாளர்களின் தேவை
பரவலாக உணரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நீங்களும் ஒரு பள்ளிச் சமூகப் பணியாளராக
உருவாவதற்கு வாழ்த்துக்கள்.
தாஹிர் நூருல் இஸ்ரா
உதவி விரிவுரையாளர்,
தேசிய கல்வி நிறுவகம்.
மகரகம
21/10/2019
உசாத்துணை
Perera
, M. A. N. R . (2010) School Dropouts in Sri Lanka: A Sociological Analysis.
Perera Department of Sociology and Anthropology, University of Sri
Jayewardenepura.
No comments:
Post a Comment