Wednesday, 5 August 2015

முதலெழுத்து  தந்தோனே.

பிறை நிலவின் புன்சிரிப்பில்
கண் சிமிட்டும் விண்மீனில்
அன்னாந்து பார்க்கையிலே
ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்
ஓயாது அடிக்கும் அலைபோல்
மூர்க்கம் கொண்டு மோதுகிறது
மனக்கிடக்கையிலே.

மனதை ரணமாக்கி
கால ஓட்டத்தில்
என்னை நானே
நடைபிணமாக்கி
சென்ற இடமெல்லாம் - நீ
விட்டுச்சென்ற தடங்கள்
பழைய நினைவுகளை படமாக்கி
காட்சிப்படுத்தையிலே - உன்
பிரிவை எண்ணிக்
கதறி அழுகிறது காரணமின்றி.

எனக்குச் சொந்தமான
உனது நினைவுகளை
என்னால் அழிக்க முடியவில்லை
அனால்
உனக்குச் சொந்தமான எனது உறவை
இறைவன் பிரித்து வலியைதந்தது,
காலத்தின் கட்டாயமோ

கடனிலும் கஷ்டத்திலும்
பசியிலும், பட்டினியிலும்,
பரிதவிக்கும் பொழுதுகளில் - உன்
வியர்வைக்கு கிடைத்த சில்லறைகள்
சிக்கனமாய் விலைபேசின.
குடும்பம் எனும் பாசச்சுமையை

இலக்கணப் பிழையோடு
அன்று
நான் எழுதியமடலை-  நீ
திருப்பித் தருகையிலே
மடிக்கப்பட்ட பக்கத்தின்
கிழிசல்கள் எனக்குத் தெரியவில்லை
உன் பாசத்தின் உச்சமே
பார்வையை நனைத்தது.

புயலாய் செல்லும்கால ஓட்டத்தில்
நீ சென்றதடங்கள்
ஏழுவருடத்தை எட்டிபிடிக்க
விதியின்மேல் பழிபோட்டு
வீம்பாய் மனதைக் கட்டிவிட்டு
மறக்க நினைத்த ஒவ்வொரு பொழுதும்,
உன் நினைவால் வந்துநிறைகிறதே.

நீ
அன்று செய்த உபகாரம்
இன்று என்னை உயர்த்திட
அத்தனையும் உண்டு என்று
ஆனந்தம் இன்றியே
நித்தமும் என்
நிம்மதியை தொலைக்கிறதே

அழகுநல் ஆடையிலே
அத்தர் மணம் வீசிடவே
பிடித்த உணவுதனை உண்டமயக்கத்தில்
தென்றல் வருடிவரும்,
ஒய்யாரப் படுக்கையிலே
எம்.ஜி.ஆர் (MGR) பாடலதை
முனு முனுத்து மூச்சு விட்ட
ஓற்றை பீடியுடன்
ஒரு நாள் கழிக்கவைக்க
என்னால் முடிந்திருந்தால்,
நிம்மதி பெரு மூச்சை
மன நிறைவாய் ஏற்றிருக்கும்,

ஆனால்,
முடியாத பொழுதுகளில்
உன் அருகாமை இருந்தும்,
அதைத்தர முடியாத பாவியாகி
பரிதவிக்கும் உன் மகளின்
சோகத்தை உணராயோ

நான் உரிக்கவில்லை வெங்காயம்
ஆனால்,
என் கண்கள் மட்டும் நனைகிறது.
ஏனெனில்
நீ சுவைத்த இறுதிச்சுவை
நான் ஊட்டிய ஓரேன்ஜ் சுவை
இந்த ஒரு திருப்தியே
இன்னும் என்னை வாழவைக்கிறது.

பிரித்துவிட்ட இறைவன்
கொடுத்துவிட்ட கண்ணீரில்
நனைகிறது மகளின் வலி
இது
தந்தை இல்லா மகளின் மனவலி.

உதயநிலா


Wednesday, 22 July 2015

வழி நெடுகிலும் காமம் ( Sex is on the Way)




வழி நெடுகிலும் காமம்

கன்னியின் கன்னித் தன்மை
கலைகிறது வழி நெடுகிலும்.
பெண்ணாயப்  பிறந்த குற்றத்துக்காய்,
பெற்றவளை வஞ்சிக்கிறாள் பேதை


கொங்கைகளும் யோனியும்
கொடுத்த கடவுளுக்கு அவள் சமர்பிக்கிறாள்
குற்றப் பத்திரிகை.
குற்றத்தின் தலைப்பு
வழி நெடுகிலும் காமம்


மூடிய ஆடைக்குள் - அவள்
மறைத்தது ஒன்றும் -அவளது
கொங்கைகளையும் யோனியையும்  - அல்ல
மானம் என்ற மயிர் -அவள் கவரி
மான்


திரும்பிய சக்கரத்தோடு ஒருத்தன்
திருத்தமாய் சொன்னது அவளைப் பார்த்து
நான் உன்னோடு படுக்க வேண்டும்
நடு ரோட்டில் மயங்கி விழுந்தாள்
விழுந்தது ஒற்றை  மயிர் - அல்ல
மானம் எனும் மானுடம்.


கடவுளுக்கு ஒரு குற்றப் பத்திரிகை
ஏன் நீ பெண்ணை
கொங்கைகளோடும் யோனியோடும் படைத்தாய்
ஏன் நீ பெண்ணைப்
பாலுறுப்பற்ற பாலினமாய் படைக்க வில்லை.


மூட வேண்டியது ஒன்றும்
அவள் முலைகளை அல்ல
தோண்டி எடுக்க வேண்டியது
அவன் இரு கண்களையும்
வெட்டி வீச வேண்டியது ஒன்றும்
நகங்களை அல்ல
விஷமாய்க் கொழுந்து விட்டெரியும்
அவன் காம உணர்வை.
இறப்பது ஒன்றும் ஆண் அல்ல
இழப்பது எல்லாம் பெண்ணே
வழி நெடுகிலும் காமம்


அடைத்த பேருந்தில்
அரைப்பது ஒன்றும் பெண்ணல்ல அவள்
அழுங்கி, ஒதுங்கி, அசைவதால்
தொடர்ந்தும்
முட்டியும், மோதியும், உராய்ந்தும்
காம உணர்வில் திளைப்பதெல்லாம்
பெண்ணல்ல
பெண்ணை பெற்ற அப்பன்கள்
வழி நெடுகிலும் காமம்


உறக்கத்தில் ஊறும் கைகள்
உறங்குவது போல் நடிக்கும் இமைகள்
துடித்து போய்
மயங்கியும், மடுத்தும், சரிந்தும்,
உருண்டால் மங்கை
வழி நெடுகிலும் காமம்.


சொன்னால் விமர்சனங்களும்,
பெண்ணின் நடத்தை ரீதியாக
காரசாரமான விவாதங்கள்
பெண்ணிலைவாதி என்ற முத்திரைகளும்
பரிந்துரைகளும்,
பெண் என்ற பண்டத்தைப்
பிண்டமாக மாற்ற
பெண் அற்ற உரையாடல்களும்
முடிவுகளும் இன்றும்
ஓயவில்லை.


கடவுளுக்கு ஒரு குற்றப்பத்திரிகை
வழி நெடுகிலும் காமம்
ஒலங்கள் இன்று
கேட்பதெல்லாம்
பாலுறுப்பே அற்ற பெண்ணை.
காமம் அற்ற ஒரு காதலை
ஆணைப் போற்றும் பெண்மையை

பெண்மையை மதிக்கும் ஆண்மையை.

Sunday, 19 July 2015

Full stop



முற்று புள்ளி
ஒரு திங்கள் கடந்து
மறு திங்கள் பிறையன்று
பெருநாளை கொண்டாடும்,
முகம்மது நபி உம்மதே,
உங்களுக்கு ஈத் முபாரக்.

உண்டி சுருங்கி
தொண்டை தாகித்து
கொண்ட உபவாசத்திற்கு - இன்று
பரிசளிப்பு விழா அல்லாஹ்
நன்மைகளை கொண்டு
பரிசளிக்கும் விழா.

ஒரு ரமழானில் ஓடிய குதிரை
மறு ரமழான் வரை காத்திருக்க
நடத்தையில் ஏற்பட்ட மாற்றம்
தொடரட்டும், என இடுகின்றேன்.
மூன்று முற்றுப்புள்ளி



ஆங்காங்கே அவ்வப்போது
அழுது வடித்து திருந்திய உள்ளம்
இட்ட முற்றுப்புள்ளிகளை
ஒரு நிமிடம்
ஓர்மிக்க நினைக்கின்றேன்.

பிச்சை காரர்களின் மாதம் - என
கொச்சை படுத்தப்பட்ட ரமழான்
பிச்சைக்காக்கா இட்ட சதகாவாள்
கொஞ்சம் வாழ்வு பெற்றால்
கன்னி பெண் காமிலா. ஆகையால்
இடுகிறேன் முற்றுப்புள்ளி.
இனி யாசகம் இல்லா இரு ரமழானுக்கு.

வக்துக்கள் தவறாது,
சப்புக்கள் குறையாது,
மஸ்ஜித்கள் நிரம்பியது. ரமழானில்
ஆகையால்
இடுகிறேன் முற்றுப்புள்ளி.
இனியும் குறையாது நிரம்பும்,
சப்புகள் என.

தூசிகள் தட்டபட்ட
குர்ஆனின் மணம்
வீசிய மாதம் ரமழான்.
பூட்டியே வைக்கப்பட்ட
தோலைக்காட்சி பெட்டியின் -நேரம்
சேமிக்கப்பட்ட மாதம் ரமழான்.
ஆகையால்
இடுகிறேன் முற்றுப்புள்ளி - இனியும்
தேவைக்கு மட்டுமே திறக்கும்
தோலைக்காட்சி பெட்டி என.

ஆடம்பரத்துக்கும், ஆர்பாட்டத்துக்கும்
மூட்டை கட்டப்பட்ட மாதம் ரமழான்
பட்ஜெட்டுகள் அதிகரித்து
மிச்ச சொச்சத்துக்கு கடனும் எடுக்க
வழிகாட்டா மாதம் ரமழான்.
ஆகையால்
இடுகிறேன் முற்றுப்புள்ளி - இனி ஒரு
துண்டு விளா ஈதுல் பித்ருக்கு.

மீண்டும் குதிரை காணட்டும் ரமழானை
பூண்ட உறுதி நிலைக்கட்டும் வாழ்வில்
நீண்ட கைககள் நிரம்பட்டும் உதவட்டும்
முற்றுப்புள்ளிகள் தொடராது
முற்றுப்பெறட்டும்.

வசந்தத்தின் வாசலில் தெரிகிறது
பிறை நிலா
தென்றல் காற்றோடு சொல்கிறது
கவி நிலா
மணிகொரு கவிதை வந்துங்கள்
உள நிலா தொட
பதிவிட்ட நண்பனுக்கும் 
பரிந்துரைத்த தோழனுக்கும்
நன்றியோடு வாழ்த்துரைக்கும் இவள்
தெல்தோட்டை --- (இஸ்ரா)

18/07/2015

வசந்தம் எப்.எம். வானொலி நோன்புப் பெருநாள் தினமான 18-07-2015 அன்று  1.30 pm க்கு எனது குரலில் ஒலிபரப்பிய கவிதை

Thursday, 25 June 2015

காவல்துறை அறிக்கையில் , கண்ணீர் துளிகள் மிதக்கிறது.



காணாமல் போகிறேன்- நான்
காணாமல் போனவர்களுடன் சேர்ந்து
காணாமல் போகிறேன்.

அதிகாலை துயில் கலைந்து
அலுவலகத்தில் காணாமல் போகிறேன்.
ஆவண கோவைகளை
அடுக்கடுக்காய் புரட்டிய போது
காணாமல் போகிறேன்- நான்
காணாமல் போனவர்களுடன்.

ஆறுமுகமும் ஆதம்பாவாவும்
சோப்பு வாங்க போனவர்கள் -இன்று
சோறு போட வக்கில்லாமல் குடும்பம்
ஆ ! என வாய் திறக்கிறது
ஓரு இலட்சம் ரூபாவுக்கு

அகலங்கவும், அகஸ்டினும்
இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டனராம்
அவன் இழப்பீட்டுக்காய் - நடக்கிறது.
அடிதடிஉறவுக்குள்ளே.
காணாமல் போகிறேன் தினம் தினம்
காணாமல் போனவர்களுடன்.
இதுவல்ல சுவாராஸ்யம் - எனக்குள்ளே
ஓராயிரம் கேள்விகள்.
ஆகையால் நித்திரை இல்லாமல்
காணாமல் போகிறேன் - நான்
காணாமல் போனவர்களுடன்..

காணாமல் போய் திரும்பவில்லை என்பதற்காய்
இறந்துவிட்டான் என
இறப்புச்சான்றிதழ் வழங்குகிறது
அரசு.

இறந்தவன் திருமணம் முடிக்கிறான் - எப்படி?
இறந்த ஒருவனுக்கு வாழ்க்கைபடுகிறாள் ஒருத்தி எப்படி?
இறந்த அப்பனுக்கு புள்ளை பாக்கியம் - எப்படி?
இதுதான் இறந்தும் வாழ்தல் - என்பதோ?

அரசுக்கு எதிராய் செயற்படவில்லை
இழப்பீடு வழங்கப்படவில்லை.
ஆவண கோவை நீள்கிறது.
காவல்துறை அறிக்கையில்
கண்ணீர் துளிகள் மிதக்கிறது.

முடிவில்லா கேள்விகள் எனக்குள்ளே
கொலையும் கற்பழிப்பும் - இன்று
கலாசாரமான போது.
காணாமல் போன போதும்,
இறப்புச் சான்றிதலுடன்
கொலையும் கற்பழிப்பையும் செய்தால்,
எந்த நீதிமன்றம் தயாராக இருக்கிறது.
இறந்தவனை மீள் விசாரணை செய்ய.

இங்கே இறந்த உடல்கள் கூட
உயிர் வாழ்கின்றன.
நான் காணாமல் போகிறேன்
தினம் தினம்
காணாமல் போனவர்களுடன்.

25/06/2015.
செல்வி. தாஹிர் நூருல் இஸ்ரா,
புனர்வாழ்வு உதவியாளர்,
புனர்வாழ்வு அதிகாரசபை,
பொரள்ளை -08

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...