முதலெழுத்து தந்தோனே.
பிறை நிலவின்
புன்சிரிப்பில்
கண் சிமிட்டும்
விண்மீனில்
அன்னாந்து
பார்க்கையிலே
ஆயிரம் ஆயிரம்
எண்ணங்கள்
ஓயாது அடிக்கும்
அலைபோல்
மூர்க்கம் கொண்டு
மோதுகிறது
மனக்கிடக்கையிலே.
மனதை ரணமாக்கி
கால ஓட்டத்தில்
என்னை நானே
நடைபிணமாக்கி
சென்ற இடமெல்லாம்
- நீ
விட்டுச்சென்ற
தடங்கள்
பழைய நினைவுகளை
படமாக்கி
காட்சிப்படுத்தையிலே
- உன்
பிரிவை எண்ணிக்
கதறி அழுகிறது
காரணமின்றி.
எனக்குச்
சொந்தமான
உனது நினைவுகளை
என்னால் அழிக்க
முடியவில்லை
அனால்
உனக்குச்
சொந்தமான எனது உறவை
இறைவன் பிரித்து
வலியைதந்தது,
காலத்தின்
கட்டாயமோ
கடனிலும்
கஷ்டத்திலும்
பசியிலும்,
பட்டினியிலும்,
பரிதவிக்கும்
பொழுதுகளில் - உன்
வியர்வைக்கு
கிடைத்த சில்லறைகள்
சிக்கனமாய்
விலைபேசின.
குடும்பம் எனும்
பாசச்சுமையை
இலக்கணப்
பிழையோடு
அன்று
நான்
எழுதியமடலை- நீ
திருப்பித்
தருகையிலே
மடிக்கப்பட்ட
பக்கத்தின்
கிழிசல்கள்
எனக்குத் தெரியவில்லை
உன் பாசத்தின்
உச்சமே
பார்வையை
நனைத்தது.
புயலாய்
செல்லும்கால ஓட்டத்தில்
நீ சென்றதடங்கள்
ஏழுவருடத்தை
எட்டிபிடிக்க
விதியின்மேல்
பழிபோட்டு
வீம்பாய் மனதைக்
கட்டிவிட்டு
மறக்க நினைத்த
ஒவ்வொரு பொழுதும்,
உன் நினைவால்
வந்துநிறைகிறதே.
நீ
அன்று செய்த
உபகாரம்
இன்று என்னை
உயர்த்திட
அத்தனையும் உண்டு
என்று
ஆனந்தம் இன்றியே
நித்தமும் என்
நிம்மதியை
தொலைக்கிறதே
அழகுநல் ஆடையிலே
அத்தர் மணம்
வீசிடவே
பிடித்த உணவுதனை
உண்டமயக்கத்தில்
தென்றல்
வருடிவரும்,
ஒய்யாரப்
படுக்கையிலே
எம்.ஜி.ஆர் (MGR) பாடலதை
முனு முனுத்து
மூச்சு விட்ட
ஓற்றை பீடியுடன்
ஒரு நாள்
கழிக்கவைக்க
என்னால்
முடிந்திருந்தால்,
நிம்மதி பெரு
மூச்சை
மன நிறைவாய்
ஏற்றிருக்கும்,
ஆனால்,
முடியாத
பொழுதுகளில்
உன் அருகாமை
இருந்தும்,
அதைத்தர முடியாத
பாவியாகி
பரிதவிக்கும் உன்
மகளின்
சோகத்தை உணராயோ
நான்
உரிக்கவில்லை வெங்காயம்,
ஆனால்,
என் கண்கள்
மட்டும் நனைகிறது.
ஏனெனில்
நீ சுவைத்த
இறுதிச்சுவை
நான் ஊட்டிய
ஓரேன்ஜ் சுவை
இந்த ஒரு
திருப்தியே
இன்னும் என்னை
வாழவைக்கிறது.
பிரித்துவிட்ட
இறைவன்
கொடுத்துவிட்ட
கண்ணீரில்
நனைகிறது மகளின்
வலி
இது
தந்தை இல்லா மகளின்
மனவலி.
உதயநிலா
No comments:
Post a Comment