Monday, 23 March 2020

Who am I meet (நான் காணும் மனிதர்கள்) -2



நான் காணும் மனிதர்கள்..

சுர்ஜித் என்ற சிறுவன் கடந்த வருடம் தென்னிந்தியாவில், திருச்சி மாவட்டத்தில், மணல் கேனி என்னுமிடத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து காப்பாற்றுவதற்காக போராடிய தினங்கள் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். அவ்வாறு அமுதாவின் அம்மா இதைப்போன்று தன் பிள்ளையை இழந்து  பட்ட வேதனைகளை மிகவும் அருகில் இருந்து நான் கண்டிருக்கின்றேன். 

சர்வதேச அரங்கில் 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி  அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பிறந்த ஜெசிக்கா மெக்லுவா பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்  இன்னும்சில தினங்களில் அவர் தனது 34வது பிறந்த தினத்தைக் காணவுள்ளார். இப்பதிவில் இடப்பட்டிருக்கும் புகைப்படம் அவருடையது. அவர் பற்றிய தகவல்களை விக்கிபீடியா தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறே அதிர்ஷ்டவசமாக கிணற்றில் விழுந்து அரை மணித்தியாலங்களில் காப்பாற்றப்பட்டு, எண்பத்தைந்து மணித்தியாலங்கள் எந்த அசைவும் இன்றி, ஆறுமாதங்கள் கண் தெரியாமல் இருந்து, பிள்ளைக்கு காது கேட்கிறதா இல்லையா என்ற சந்தேகத்துடன் இரண்டு வருடங்கள் உருண்டோடி போய்விட்டன. மூன்றரை வயதுகளில் தான் பிறந்த குழந்தையின் அசைவுகளை போன்று மெதுமெதுவாக குழந்தையின் அசைவுகள் ஏற்படத் தொடங்கின. இப்படி தப்பிப் பிழைத்த தனித்துவ சிறுவன் ஒருவனை அண்மையில் சந்தித்தேன். அவனுக்கு இப்போது வயது ஆறு. அவன் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை . பிறந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாக முன் விளையாடுவதற்காக நீர் எடுக்க கிணற்று பக்கமாக சென்றவன் கிணற்றில் விழுந்து விடுகிறான்.

துருதுருவென அவன் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தான்.  அவனது தாய்  முன்பள்ளி பிள்ளைகளுக்காக கற்பிக்கும் ஆசிரியர். விடுமுறை இல்லாது மாதத்தில் ஒவ்வொரு நாளும் வேலை செய்தல் வேண்டும். சொந்த தேவைகளுக்கு கூட அவருக்கு விடுமுறை வழங்கப் படுவதும் இல்லை. தன் பிள்ளையை கவனித்துக் கொள்ள அவரால் முடியவில்லை.

ஒரு இடத்தில் சிறிது நேரம் கூட அவனால் இருக்க முடியவில்லை. இங்கும் அங்குமாக ஓடித் திரிந்து கொண்டே இருந்தான். கற்றல் செயற்பாடுகள் எதிலும் அவனுக்கு ஈடுபாடில்லை. வரைந்து கொடுக்கப்பட்ட வடிவத்திற்குள் நிறம் தீட்டக்கூட அவனால் முடியவில்லை. அவை சட்டத்துக்கு வெளியே சென்று இருந்தது. எல்லாப் பொருட்களையும் எடுத்து அதனை கையாண்டு உரிய இடத்திலன்றி வேறு   இடத்தில் விட்டு சென்று விடுவான்.

"அவன் நல்ல பிள்ளை. இரக்க குணமுடையவன். படிக்க மாட்டேங்குறாங்க........."

இது அவனது பாட்டியின் வசனங்கள்.

அவனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள அத்தாய் மிகவும் போராடிக்கொண்டிருந்தாள். என்னை போலீஸ் அதிகாரியாகவும் நான் குழப்படி செய்தால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று பயமுறுத்தினாள். அவரின் அணுகுமுறை அப்போது எனக்கு சரியா? தவறா? அல்லது நான் பொலீஸ் அதிகாரியா? என்று கூட என்னை ஒரு கணம் நின்று சிந்திக்க வைத்தது.

அப்போது எனக்குள் எழுந்த வினாவே இச் சிறுவனின் தந்தை எங்கு சென்று விட்டார்?

நான் தந்தையைப் பற்றி கேட்ட போதெல்லாம் தாய் வேறு பதில்களையே தந்து கொண்டிருந்தார். என் வினா அவருக்கு விளங்கவில்லையா என்ற சந்தேகத்தில் தெளிவாக நான் அவரிடம்,
தந்தை என்ன செய்கிறார்?                என்று கேட்டேன்.

அவர் வீட்டுக்கு வருவதில்லை. நாங்கள் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். அவர் மாளிகாவத்தை........... 

சரி ஏன் அவரை வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொன்னீர்கள். 

அவருக்கு வேறு மாதிரி பழக்கம் இருக்கிறது. போதாக்குறைக்கு அவர் என்னிடம் வந்து பணம் கேட்கிறார். ..... 

நான் அத்தோடு  நிறுத்திக் கொண்டேன். இன்னும் பல கேள்விகள் எனக்குள் எழுந்தன. அவற்றை நான் அத்தாயிடம் கேட்கவில்லை. உங்களிடம் கேட்கிறேன்  பதில் இருந்தால் பதிவிடுங்கள்.

1). உழைக்கும் வர்க்கம் எது?

2). தப்பிப் பிழைத்திருப்பது எதற்காக?

3). என் வினாக்களுக்கு வேறு பதில்களை அளித்தமைக்கான காரணம் என்ன?

நான் காணும் மனிதர்களைப் போல் நீங்களும் காண்பீர்கள். அவர்களிடம் நாம் கற்கும் பாடங்கள் பாட புத்தகத்தில் மீட்கப்படாதவை. வினாக்கள் எல்லாவற்றிற்கும் விடைகள் காணப்படுவதுமில்லை.

 



காதோடுதான்
நான் பேசுவேன்

சகோதரர் பஸ்லி ஹமீட் எழுதிய சிறுகதைப் புத்தகம் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றது. முகநூல் ஊடாக என்னுடைய முகவரியைப் பெற்றுத் தபாலிட்டிருந்தார். ஒரு மாதத்துக்கும் கூடுதலாக என்னோடு பயணப்பட்டது. கொவிட்-19 பொது விடுமுறை புத்தகத்தை வாசித்து முடிக்க ஏதுவாக அமைந்தது.

காதோடுதான் நான் பேசுவேன் என்பதனை பற்றி குறிப்பிடுவதற்கு முன்னர் அதன் ஆசிரியர் சகோதரர் பஸ்லி ஹமீட் உடனான எனது அறிமுகத்தை குறிப்பிடுதல் பொருத்தம் என நினைக்கிறேன்.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி இன்றுபோல் ஒரு நாளில் உலக கவிதை தின நிகழ்வொன்று வகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்விலேயே முதல் முறையாக சகோதரர் பஸ்லி ஹமீதை நான் சந்தித்தேன். ஹைகூ கவிதைகள் தொடர்பான தனது அனுபவ பகிர்வினை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து பல பொழுதுகள் அவரை வகவத்தில் அத்தி பூத்தாற் போல சந்தித்திருக்கிறேன். மிகவும் அமைதியான, சின்ன கவிதைகளுக்கு சொந்தக்காரர். ஹைக்கூ கவிதைகளை வரம்புகளோடு, இலக்கண முறைப்படி யாப்பதில் கைத்தேர்ந்தவர். முகநூலில் வலம் வரும் அவரது கவிதைகளை உன்னிப்பாக பலமுறை வாசிப்பதில் எனக்கு அலாதி பிரியம். பல தடவை அவைகளுக்கு பின்னூட்டல் இட்டிருக்கிறேன். இப்படி ஒரு கவிஞனாகவே  பஸ்லி ஹமீதை நான் அறிந்து வைத்திருந்தேன்.

காதோடுதான் நான் பேசுவேன் கையில் கிடைத்ததும், எனக்குள் பல சிந்தனைகளும் உணர்வுகளும்  ஏற்பட்டன. அதற்குக் காரணம் புத்தகத்தின் வடிவம். மகிழ்வாக இருந்தது. சாதாரண புத்தகங்களின் வடிவத்தை விட அது வேறுபட்டிருந்தது. பாடசாலைக் காலங்களில் குறிப்பு எடுப்பதற்காக பயன்படும் குறிப்புப் புத்தகம் போன்று அது காணப்பட்டது. எனவே கவிதைகளுக்கு இவ்வாறான புத்தக வடிவங்கள் பொருத்தமானவையாக இருக்கும். அத்தோடு பிரயாண வாசகனுக்கு இவ் அமைப்பிலான புத்தகங்கள் இலகுவாக வாசிக்கக் கூடியதாக காணப்படுகின்றது. 
நூலின்  தலைப்பு சினிமா பாடல் ஒன்றின் முதல் இரண்டு வரிகளாக் கேட்ட ஞாபகம் வருகிறது. உள்ளே புத்தகம் தொடர்பான அடிப்படைத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் ISBN இலக்கம் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை. பெற்றோருக்கு சமர்ப்பணமாக இந்தப் புத்தகம் தன்னை உயர்ந்த இடத்தில் நிறுத்திக் கொள்கிறது. ஆசிரியரின் உரையுடன் புத்தகம் தொடர்பான அறிமுகம் நின்றுவிடுகிறது. இஸ்லாமிய விழுமியங்களை  அடிப்படையாகக்கொண்டு புத்தகம் அமைந்திருப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இவை எல்லாமே எனக்கு வித்தியாசமாக இருந்தது. நூலாசிரியர் தனது உரையில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.  

"சிறுகதைகளில் அஃறினணகளையே கதை சொல்ல வைத்திருக்கிறேன். சிறுகதைகளின் இயல்புகளையும், யதார்த்தத்தினையும் மீற நான் நினைக்கவில்லை.  இக்கதைகள் உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தினை தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இவை சுவாரஷ்யமான கதைகள் என்று நீங்கள் சொல்வீர்களாயின் அதுவே எனது முயற்சியின் வெற்றியாகும் இனி கதைகளைக் காது கொடுத்து கேளுங்கள்" என முடித்திருக்கிறார்.

இனி கதைகளை காது கொடுத்து கேட்போம். பொருளடக்கம் இல்லாத சிறுகதை தொகுப்பு இது. அதனால் உள்ளடக்கியுள்ள சிறுகதைகளின் தலைப்புகளை பட்டியலிடுகிறேன். அல்லி மலர், கால் உடைந்த நாற்காலி, கையடக்கத் தொலைபேசி, கடிகாரம், யன்னல்,  குண்டுசி, காதல் கடிதம், கைப்பை, நூறு ரூபா நோட்டு, குப்பைத் தொட்டி ஆகிய 10 சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது.

நூல் ஆசிரியர் குறிப்பிடுவது போன்று அஃறிணை கதை சொல்லிகளின் பாங்கு  முதல் மூன்று கதைகளிலும் சிறப்பாக உள்ளது. சின்ன வயதில் பாடப்புத்தகத்தில் பந்தின் சுயசரிதை, அகலவத்தை எனுமிடத்தில் பிறந்த பந்து தன் கதையை சொல்லும். இரவு அது உருண்டு ஓடும் போது அவன் ஏய் கல்லப்பந்தே எங்கே ஓடுகிறாய்? என விழிப்பான். அந்த உணர்வு இந்த கதைகளை வாசிக்கும் பொழுது எனக்கு ஏற்பட்டது.

அல்லிமலர் சிறுகதையில்
"என்மீது பதித்த பார்வை மீளப்பெறாதவளாய் வந்து கொண்டிருந்தாள். அவள் என்னை நோக்கித்தான் வருகிறாள் என்பது எனக்கு இப்போது மிகத் தெளிவாக விளங்கியது. முன்னைய தினங்களிலும் பலமுறை அவள் என்னை நோட்டமிட்டு இருக்கிறாள். ஆனால் நெருங்கி வந்ததில்லை. கரையில் இருந்து சற்று தூரத்தில் நான் இருந்தமையோ அல்லது சிறிதாக இருந்தமையோ அதற்கான காரணமாக இருந்திருக்கக்கூடும். அவள் என் பக்கத்தில் வந்து விட்டால் முகத்தை வெவ்வேறு கோணங்களில் வளைத்தவளாய் என்னை உற்று நோக்கிக் கொண்டிருந்த அவளின் உதடுகள் மெதுவாக விரிந்தன. புன்னகைக்கத் தொடங்கின. ஆம் அவள் என்னுடன்தான் புன்னகைக்கிறாள். வாடி இருந்த அவளது முகம் ஒருகணம் மலரத் தொடங்கியது.
என்பதனை இங்கு குறிப்பிடலாம்.

குறிப்பாக எல்லா கதைகளுக்கும் இடையில் ஒரு ஒற்றுமையைக் காணலாம். சிலவேளை தலைப்புக்கு ஏற்றாற்போல் கதை சொல்லும் பாணி வேறுபட்டிருந்தாலும் கூட கதைகளின் கருக்கள் பெரும்பாலும் ஒன்றாகவே அமைந்து இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. காரணம் எல்லாக் கதைகளும் ஏழ்மையையும் செல்வத்தையும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. அல்லிமலர் தொடக்கம் குப்பை தொட்டி வரை இந்த ஒற்றுமையை அவதானிக்கலாம். 

அல்லி மலரில் ஒரு குடும்பம் அல்லி மலரை பறித்து விற்பனை செய்து அந்த அல்லிமலர் எவ்வாறு செல்வந்தர் வீட்டில் ஒரு நாளை கழிக்கிறது என்பதுவும், கையடக்கத் தொலைபேசியில் ஒரு உணவுப் பொதி ஊடாக ஏழ்மையான ஒருவருக்கும் நடுத்தர குடும்பத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை சொல்ல முற்படுகிறது. 

கடிகாரம் வறுமையான ஒரு தந்தை வாங்கிக் கொடுத்த கடிகாரம், தான் உயர் நிலை அடைந்த பின்னும் தந்தை வாங்கிக் கொடுத்தது என்பதற்காக வேறு ஒரு கடிகாரத்தை கட்டிக்கொள்ள மனம் விரும்பாத பெறுமதியான ஏழ்மையை சுட்டிக்காட்டுகிறது. மிகவும் உணர்ச்சிபூர்வமான கதை. இங்கு நான் ஒரு விடயத்தை குறிப்பிடுதல் வேண்டும் எனது தந்தை மரணித்து 12 வருடங்களுக்கு பின்னர் அவருடைய  மேற்சட்டை (shirt) எனக்கு கிடைத்தது. அது அவரது பெட்டியில் இருந்தே எடுக்கப்பட்டது.எலிகள்  தனக்கு வேண்டியதையெல்லாம் கடித்து எடுத்துவிட்டு எனக்கு வேண்டியதை மட்டும் விட்டு வைத்து இருந்தது. அதை பத்திரமாய் கொண்டு வந்து என் கணவனின் மேற்சட்டைகளோடு வைத்திருக்கிறேன். காலங்கள் கடந்தாலும் எதிர்பார்ப்புகள் உடனான ஞாபக சின்னங்கள் இன்னொரு நபரினால் ஈடு செய்ய முடியாதது, என்ற உயரிய தத்துவத்தை இக்கதை சுட்டிக்காட்டுகிறது. இச்சிறுகதை தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு கதையும் கடிகாரம் என்பதுதான். பெற்றோர் பிள்ளைகளுக்கு பலதடவை வாசித்துக் காட்ட வேண்டியதும்,  தாம் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டியதுமான ஒரு கதை.  ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

கடிகாரத்தை தொடர்ந்து யன்னல் என்ற சிறுகதையில் கூட வறிய வீட்டிற்கும் செல்வந்த வீட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தையே காட்ட முற்பட்டு இருக்கிறார். குண்டூசி என்ற சிறுகதையில் யதார்த்தமாக ஓரிடத்தில் கிழிசல் இருந்தால் அல்லது பொத்தான்கள் காணாமல் போனால் குண்டூசியே அவ்விடத்தை நிரப்புகின்றன. அது இன்றும் எம்மிடையே நடைமுறையில் இருக்கிறது. அவ்வாறு  குண்டூசிகள் அந்நபரின் சட்டையோடு தொடர்ந்து பிரயாணப்பட்டு  ஓர் ஏழ்மையான குடும்பத்தின் நாளாந்த வாழ்க்கையை சொல்ல முற்படுகிறது. காணாமல் போன கணவன் தொடர்பாகக் கிடைத்த செய்தி என்னையும் காணத்துடிக்கும் என் சகோதரனின் முகத்தை மனக்கண்முன் இறுதியது. 

ஒரு செருப்பு தைப்பவரின் வாழ்க்கையையும் அவருடைய வினோதத்தையும்  எடுத்துச் சொல்ல முற்பட்டுள்ள கதை கைபை.  நூறு ரூபா நோட்டு எப்படி செல்வந்த காலத்தில் ஒரு குறித்த நபருடன் இருந்த நூறு ரூபா அவர் வறுமை அடைந்த பின் அவரிடம் கடத்திய சில நாட்களை சொல்வதாக இருக்கிறது. 

இறுதியாக  புகையிரத பெட்டிகளில் இடத்தைப் பிடித்துக்கொண்ட குப்பைத்தொட்டி ஓய்வுபெற்ற இரண்டு ஆசிரியர்களின் ஓய்வு காலத்தை சொல்ல முற்பட்டு இருக்கின்ற வேளை உங்கள் பொதிகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் எனும் அறிவுறுத்தலூடாக  ஏழ்மையையும் சொல்லப்பட்டிருக்கிறது. 

காதல் கடிதத்தில் கூட இத் தொனிப்பொருள் மேலெழுந்து காணப்படுகின்றது. அதில் காதலன் செல்வந்த குடும்பத்திலும் காதலி  வறுமையான குடும்பத்திலும் பிறந்த காரணத்தினால் அவர்களின் காதல் கைகூடாமல் இருந்துவிடுகிறது. 

 இப்படி எல்லாக் கதைகளும்  ஏழ்மையையும் செல்வத்தையுமே குறிப்பிட முற்பட்டுள்ளது. எனினும் குறிப்பாக சொல்ல வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் பத்தில் மூன்று கதைகளுக்கு மட்டுமே "க" என்ற எழுத்தில் தலைப்பு கிடைக்காமல் போயிருக்கிறது. 

கதையை தொடங்கியது முதல் முடிக்கும் வரை பேசுவதற்கு சரியான அஃரிணைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. குண்டுசி கைத்தொலைபேசி, கை பை, கடிகாரம் நூறு ரூபா நோட்டு என்பன குறித்த உயர்திணைகளோடு தொடர்ந்தும் பயணிக்கின்றன. இக் கதைகளை வாசிக்கும்போது சிலநேரம் உயர்திணையே கதை சொல்கின்றன போன்ற உணர்வு இடைக்கிடையே ஏற்படுகிறது. மிகவும் உன்னிப்பாக நீண்டகாலம் எடுத்து வாசித்த ஒரு சிறுகதைத் தொகுப்பு. 

புத்தகத்தை வாசிப்பதற்கு முன்னர் என் தாய் அதனை வாசித்துவிட்டு  அதைப் பற்றி இப்படி குறிப்பிட்டார்.

"மிகவும் அருமையாக யதார்த்தமாக இருக்கிறது".

 அவர் குறிப்பிட்டது போன்று நாளாந்த வாழ்வோடு யதார்த்தமாக பின்னிப் பிணைந்த ஒரு சிறுகதைத் தொகுப்பு. சிறுவர்கள் விரும்பி வாசிக்க்கூடிய நூல். எனினும் அவர்கள் வாசிக்கும் வகையில் எழுத்துகளின் அளவினை அதிகரித்து படங்களுடன் பிரசுரிப்பது வரவேற்கத் தக்கது. தான் கைத்தேராத ஒரு இலக்கிய வடிவத்தில் புதிது புனைய முற்பட்டுள்ள ஆசிரியரின் முயற்சி வெற்றி கண்டுள்ளது. வாழ்த்துக்கள்.











Wednesday, 11 March 2020

நான் காணும் மனிதர்கள் (Who am I meet) -1





நான் காணும் மனிதர்கள்.

அன்று சனிக்கிழமை பெற்றோரியம் (Art of parenting)  பற்றி பேசுவதற்கு ஹங்வெல்ல பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தேன். 

வழியில் செல்லும் போது எதேச்சையாக ஒரு சம்பவத்தை கண்ணுற்றேன்.தாய் ஒருவர் தன் மகனையும் மகளையும் அழைத்துக் கொண்டு கடை வீதியில் நடந்து  சென்றுக்கொண்டிருந்தார். அவரோடு இன்னொரு சகோதரியும் வந்துக் கொண்டிருந்தார்.  மகன் சிறிது நேரத்தில் அழத் தொடங்கி விட்டான். அதற்கு காரணம் தாயிடம் எதையோ எதிர்பார்த்து கேட்ட வினாவிற்கு திருப்தியாக பதில் அளிக்காமை ஆகுமென  நான் ஊகித்துக் கொண்டேன். 


அவன் தொடர்ந்தும் தன் தேவையை முன்வைக்க தவரவில்லை. கோபமடைந்த தாய் அவனது தலையில் பல முறை குட்டினார்.

இந் நிகழ்வு என்னை கவலையில் ஆழ்தியது. என்னுடைய இறந்த காலத்திற்கு அழைத்துச் சென்றது.


அது 1998 அல்லது 1999 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும். எங்கள் வீட்டுக்கு மின்சார இணைப்பு செய்யப்பட்ட முதல் இரண்டு வருடங்கள். அப்போது எனக்கு 12-13 வயதாக இருக்க வேண்டும். என் மூத்த சகோதரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. தபால் உத்தியோகத்தர் கடிதத்தினை, என்  ஆசிரியர் ஒருவரிடம் கொடுத்து எங்களிடம் ஒப்படைத்து விடுமாறு கையளித்திருந்தார்.

மற்றொரு நாள் தபால் உத்தியோகத்தர் தங்களுக்கு கடிதம் கிடைத்ததா? என்று வினவும் வரை எங்கள் கைகளுக்கு அக்கடிதம் கிடைக்கவில்லை. பலமுறை கடிதம் தொடர்பாக ஆசிரியரிடம் வினவினோம். அவர் எங்கள் கையில் சேர்க்க பல நாற்கள் ஆகின.

அன்று வெள்ளிக்கிழமை,  என் தாய் பாடசாலை விட்டதும் ஆசிரியரின் வீட்டிற்கு சென்று கடிதத்தை எடுத்து வருவதாக முடிவு செய்தார்.

நானும் உம்மாவும் அங்கு சென்றோம். மதிய வேளை உணவு முடிந்து ஆசிரியர் கடிதத்தைத் தேடத் தொடங்கினார். அவரின் பிள்ளைகள் தொலைக்காட்சியில்   குணா படத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போதெல்லாம் தொலைக்காட்சி இல்லாத எங்கள் வீட்டில்,  எங்காவது சென்றாள் தொலைக்காட்சி பார்ப்பது எனக்கு பிடித்தமான ஒரு விடயம். 

அன்று தான் முதல்தடவை குணா படத்தினை பார்க்கிறேன். மிகவும் விறுவிறுப்பான ஒரு படம். படத்தில் நாங்கள் மூழ்கியிருக்க ஆசிரியர் கடிதத்தை தேடுவதில் பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருந்தார். எனது தாயும் செய்வதறியாது அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார். 

படம்  முடிய அரை மணித்தியாளங்கள் இருக்கும் பொழுது, கடிதம் கையில் கிடைத்தது.  எனது தாய் நன்றி கூறிக்கொண்டு வெளியேறுவதற்கு தயாராகி என்னிடம் வந்தார்.

நானோ சுவாரசியமாக படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரம் எனக்காக அவரும் தாமதித்தார். படம் முடிவதாக இல்லை. என் மகிழ்வை கலைத்து அழைத்துச் செல்வதில் அவருக்கு விருப்பமில்லை. ஏனெனில் இன்னுமொரு முறை அப் படத்தைப் பார்ப்பதற்கு அவரால் ஒரு  சந்தர்ப்பத்தைத் தர முடியுமா என்ற நம்பிக்கை அவருக்கு அப்போது இருக்கவில்லை. அதற்கு முதல் காரணம் எங்கள் வீட்டில் அப்போது தொலைக் காட்சிப் பெட்டி இல்லை. ஏன் இப்போதும் இல்லை.

அவர் வேகமாக வீட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய தேவை இருந்தது. ஏனெனில் எனது தந்தை ஒரு பாரிசவாத நோயாளியாக இருந்தார். அவருக்கு பணிவிடைகளை செய்வதில் எனது தாய்க்கு நிகர் யாருமில்லை. அதில் பயத்துடன் கூடிய ஒரு கடமையுணர்வு மிஞ்சியிருந்தது. 

தாமதமாக சென்றதற்கு அவரிடம் கிடைக்கும் எதிர்வினையை நினைத்து உம்மா  என்னை இப்படி அழைத்தார்.

"நான் மெதுவாக செல்கிறேன்   
நீ விரைவாக வா"


எனக்கு அப்போது இவ்விரண்டு வசனங்களின் தாத்பரியமும் பெறுமதியும் விளங்கவில்லை. அப்போது எனக்கிருந்த உணர்வு படத்தின் முடிவு எப்படி அமையும் என்பதுவே.

பிற்காலத்தில் நான் தொகுத்து வெளியிட்ட, 

"தமிழ் திரைப்படங்களில் காணப்படும் உளவியல் அம்சங்கள்"  (collection of abnormal disorders in Tamil cinema)


என்னும் தொகுப்பில் குணா படமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. குணாவும் அபிராமியும் இறுதியல் மலையிலிருந்து குதிக்கின்றனர். 


"இது மனிதர் உணர்ந்து கொள்ள 
மனித காதல் அல்ல 
அதையும் தாண்டி புனிதமானது".

என்ற வரிகள் இன்றும் அந்த நாள் திரைப்படத்தைப் பார்த்த ஞாபகங்களை என் முன் கொண்டுவருகிறது.

ஆனால் இருபது வருடங்கள் கழித்த பின் தான் என் தாய் அன்று எனக்கு குறிப்பிட்ட அவ்விரண்டு வசனங்களின் பெறுமதி அல்லது ஒரு தாயின் அணுகுமுறை எனக்கு புலப்பட்டது.

என் விருப்பினை,  
என் சந்தோஷத்தை,
என் மகிழ்ச்சியை, 
என் ரசனை உணர்வை எல்லாம் பாதிக்காது வீட்டிற்கு வேகமாக செல்லவேண்டும் என்ற சிந்தனையையும் தந்து, அவரும் நானும் பெரிய இடைவெளியிலில்லாது வீட்டுக்குச் செல்ல வேண்டிய தேவையையும் உணர்த்தி,  சிலவேளை வாப்பாவின் தண்டனையும் கருத்திற்க் கொண்டு அதிலிருந்து என்னை காப்பாற்றி அவர் மெதுவாக வீட்டை சேரும் போது நான் வேகமாக சென்று அவரை அடைந்து விடுவேன் என்ற நம்பிக்கையில் என்னை திரைப்படத்தின் முடிவு காண அனுமதித்த அந்தத் தாயின் அவ்விரண்டு வசனங்களும் அவரின் அணுகுமுறையும் அன்மையில் நான் கண்ட தாயின் அணுகுமுறையோடு ஒப்பிட்டுப் பார்க்க வைத்தது.

பெற்றோரியம் என்பது, (art of parenting) ஒரு கலை. மிகப்பெரிய பொறுப்பு. கயிற்றின் மேல் நடக்கும் ஜிம்னாஸ்டிக் ஒரு போட்டி.

என் பெற்றோரை நான் பின்பற்றுவதாக இல்லை. ஆனால் அவர்கள் எப்போதும் தலை நிமிர்ந்து நான் அவர்களை பார்க்கும் அளவுக்கு என்னை வளர்த்து விட்டிருக்கிறார்கள். 

அந்த பெருமக்கள் இருவருக்கும் உயர்ந்த சுவர்க்கத்தை பிரார்த்திக்கிறேன்.

நான் காணும் மனிதர்கள் போல் நீங்களும் பல மனிதர்களை காண்பீர்கள். அவர்களிடம் கற்கும் பாடங்கள் பாட புத்தகங்களில் ஒரு நாளும் மீட்டப்படாதவை.  அவை பட்டை தீட்டப்பட்ட மாணிக்கக் கற்கள்.

Wednesday, 4 March 2020

குமுறல்- kumural





குமுறல்

சுபாஷினி பிரணவன்  எழுதிய குமுறல் கவிதை தொகுப்பு கவிஞர் ஈழகணேஷ் மூலமாக கையில் கிடைத்தது.

2014 ஆம் ஆண்டு தேஜஸ் வெளியீடாக வெளிவந்துள்ளது இக் கவிதைத் தொகுப்பு.


நூலைப் பற்றிய அறிமுகத்தை குறிப்பிடுவதற்கு முன்னர் நூலாசிரியர் கவிதாயினி சுபாஷினி பிரணவன் பற்றி குறிப்பிட வேண்டும்.

வகவ மேடைகளில் தாயும் பிள்ளையுமாக கவிதை பாடும் சுபாஷினி பிரணவன் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றுக்கொண்டவர். நடைமுறையோடு ஒன்றிப்போன உணர்வுகளையும் உடமைகளையும் உறவுகளையும் பற்றிய கவிதைகள் அவருடையவை. கவிதைகளை தொகுத்து புத்தகங்களாக வெளியிடுவதற்கும், கவிதைகளை மேடைகளில் முன்வைப்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இவரது கவிதை முன்மொழிவு பாணி சிறப்பாகக் காணப்படுகின்றது. இதனால் வானொலி தொலைக்காட்சி மற்றும் ஏனைய ஊடக வடிவங்களும் இவரது கவிதையை பதிவு செய்ய தவறவில்லை. கவிஞர் தொடர்பான இவ் அறிமுகத்துடனே குமுறலை வாசிக்க முற்பட்டேன்.

குமுறல் என்ற தலைப்புக்கு ஏற்றாரற் போல் அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் கிருஷ்ணபிள்ளை விஸ்வரூபன் கவிதைத் தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். 
அவரது அணிந்துரையில்
'கவிஞன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறை சுபாஷினியின் கவிதைகள் பலவற்றிலும் வெளிப்பட்டு நிற்பது விசேட கவனத்திற்குரியதாகும். கவிதைகளை படிக்கும்போது இத்துறையில் சுபாஷினி இருக்கக்கூடிய முதிர்ச்சி வெளிப்பட்டு நிற்கிறது. சுபாஷினியின் சிந்தனை ஓட்டத்திற்கு பொருத்தமான சொற்களும் மொழிநடையும் பெரிதும் கை கொடுத்துள்ளன'. என கவிஞரைப் பற்றி குறிப்பிடுகின்றார்.

குரலோசை தொடரட்டும் என               வா. செல்வராசா, மாகாணக் கல்விப் பணிப்பாளர் வாழ்த்துரை வழங்கி யுள்ளார். 

மிக வித்தியாசமாக குமருபவள்  குரல் என சுபாஷினி  பிரணவன் தனது  நூல் அறிமுகத்தை வழங்கியுள்ளார்.

தொடரும் பக்கத்தில் புத்தகத்திற்குள் பொதிந்திருக்கும் கவிதைகளின் தலைப்புகள் உள்ளே என வரிசைப் படுத்தப் பட்டுள்ளது. 53 கவிதைகளை 90 பக்கங்களுக்குள் உள்ளடக்கிய நூலே குமுறல் ஆகும்.

'அம்மா' என்ற கவிதையோடு தொடங்கி 'என்னால் முடியவில்லை அம்மா' என்ற கவிதையோடு கவிதைகள் நிறைவு பெறுகின்றன. இதுவே இக் கவிதைத் தொகுதியின் மிகச்சிறந்த விசேட அம்சமாக நான் கருதுகின்றேன். பிறக்கும் போது அம்மா என்று அழுகின்ற பிள்ளை இறக்கும் போது அம்மா என்னால் முடியவில்லை என்று அழுகின்றது போல குமுரலின் பிரசவமும் அமைந்திருக்கிறது. குமுரலில் நெடுகிலும் தாய்மை சிறப்பாக வெளிப்பட்டு நிற்கின்றது.

அவட்கிங்கு நான் பட்ட
கடன் தீரா - "இற்றி" க்கும்
எட்டா எத்திக்கும் என் அம்மா
புகழ் எங்கும் ஓங்கட்டும்.....
அவள் புகழ் எங்கும் ஓங்கட்டும்...

அடுத்து விரிகிறது தந்தைக்கு சமர்ப்பணம்

செத்துப் போனதை விடவும்
இத்துப் போய் விட்டு இரண்டு
சக்கர மிதி வண்டி
இன்னமும் இறுமாப்பாய் இருக்கிறது
அப்பாவின் நினைவாய்
அத்தனையும் இன்னும் இரு மாபாய் இருக்கிறது. அப்பாவின் நினைவாய்......

மறக்காமல், தெளிவாக தெரியாமல், இப்படி ஒருவரை குறிப்பிட்டுள்ளார்.
"எனக்கு நீ
எட்டாவது ஸ்வரம்-இனி
உலகில் சப்த ஸ்ரங்கள்
கிடையாது!!!
அட்ட திக்கும் எட்ட வேண்டும்
இந்த அட்ட ஸ்வரங்களை
ஆகாரமிடத் தெரிந்த (சு)
உபாஷினியை!!

இவரின் கவிதைகளில் யதார்த்தம் புதைந்து காணப்படுகின்றது.
ஓடிக் களைத்து.
பாடிக் களித்து
வேலை செய்து களைத்து
வீடு வந்தால்
நாயினைத்தவிர யாருமே இல்லை.
என்ற வெறுமையும் சாதாரண மனிதனின் எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது.

விலையேற்றம்  மற்றும் உற்சவப் பகிர்வுகள் எனும் கவிதைகள் தனிமனித போராட்டத்தையும் நாளாந்த வாழ்வியலையும் உழைப்பையும் ஊதியத்தையும் சமன்படா சமன்பாடுகளாக காட்ட முற்பட்டு இருக்கின்றன.

போர், இடப்பெயர்வு, படைகளின் ஆக்கிரமிப்பு போன்றவற்றின் மன பதிவுகளையும் தெளிவாகக் காட்ட மறக்கவில்லை.

இசையும் இசைக்கருவிகளையும் இசை உடனான தனது கழிதல்களையும் சப்பித் துப்பியுள்ளார்.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும்
இருபதுகளிலும் வாழும் சுபாஷினியின் கால வெளிப்பாடுகள் அங்காங்கே கொட்டிக் கிடக்கின்றது குமுறலில்.

"ஹலோ"....
வலைவீசியபடி 
கழுத்திடுகிலும் கைப்பேசி
மீன் வருமோ இல்லையோ
'கோல்' வரும் கட்டாயம்.
காதலிப்பது ஒருத்தியை
கட்டிக் கொள்வது இன்னொருத்தியை அப்பனான பின்பும்
பார்க்கவென ஒருத்தி
படுக்கவென இன்னொருத்தி என  நீண்டு செல்ல நாங்களும் ஒன்றும் மனிதர்கள் அல்ல
கடுப்பாகின மரங்கள்
விருட்சங்கள் கூறும் கற்பு
பற்றி விபரித்தேன்.

இளஞ் சமுதாய இல்லறம் எனும் கவிதையில்
'ஈமெயில்' களிலல்லவா இவர்கள்
குடும்பம் நடத்துகிறார்கள்
இவர்களுக்கு கட்டில்கள் ஏன்?
3G (4G-2020) கைப்பேசிகள்
அல்லது 'ஸ்கைப்' போதும்

போன்ற வரிகளை உதாரணங்களாக குறிப்பிடலாம்.

தொழில் ரீதியாக இவர் ஓர் ஆசிரியர். பெண்களின் வாழ்வியலை அப்படியே பிரதி எடுத்து பதித்துள்ளார். ஓர் ஆசிரியையின் நாட் குறிப்பு எனும் கவிதை 22-30 பக்கம் வரையும் வியாபித்து இருக்கிறது. நாயினை தவிர யாருமே இல்லை, துரோணரல்ல நாங்கள், இடமாற்றங்கள்.
போன்றன கவிதாயினியின் தொழில் வாழ்க்கையை மாத்திரமன்றி எல்லா பெண்களையும் குறிப்பாக ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களையும் குறித்து நிற்கின்றது.

இயற்கையையும் மறக்காமல் கவிதைகளில் தினிதுள்ளார். கல்லுக்கொரு கவிதை, மரங்கள் பேசிய கதை, பூவின் விருப்பம், சிட்டுக் குருவியும் நானும், கழியும் இரவுகள் என்பவற்றை குறிப்பிடலாம்.

இடைக்கிடையே ஹைக்கூ கவிதைகளும் பக்கங்களை நிறைந்துள்ளன. 

மொத்தத்தில் குமுறல்
 மானுட சமுதாயத்தின் குமுறலாகவே பிரதிபலிக்கின்றது.

பின்னட்டை குறிப்பை வழங்கியுள்ள பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா இறுதியில் குறிப்பிட்டிருப்பது போல   
   
"சமூகத்தை கூர்ந்து நோக்கி படம்பிடிக்கும் பாங்கினை இவரது கவிதைகளில் காணலாம். இவரது கவிதைப் பயணம் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்"

அவ்வாறே நானும் கவிதாயினி சுபாஷினி பிரணவனின் கலை இலக்கியப் பணி தொடர வேண்டுமென வாழ்த்துகிறேன்.
4/2/2020, 
#NIE_Diary
#Bookreview


Braille -Book printing




பிரெயில் முறையிலான அச்சுப் பதிவு

1980ஆம் ஆண்டு விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்விக்காக பிரெயில் முறையிலான பாடப்புத்தகங்கள் தயாரிப்பதற்கான தேவையை கல்வியமைச்சு உணர்ந்தது.

1985 ஆம் ஆண்டு ஆறாம் மாதம் நான்காம் திகதி சீடோ நிறுவனத்தின் நிதி உதவியுடன் 7 உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய அச்சுப் பதிவு பகுதி கல்வி அமைச்சின் முறைசாரா கல்வி பிரிவின் கீழ் தேசிய கல்வியற் கல்லூரி வளாகத்தில் மஹரகம வில் நிறுவப்பட்டு 2014 ஆம் ஆண்டு வரை நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது.

 1980 ஆம் ஆண்டு தொடக்கம் 1985 ஆம் ஆண்டு வரை இப்பணியை விசேட தேவையுடைய நபர்களுக்காக சேவையாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

2014 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அச்சு பதிப்பகம் கல்வியமைச்சின் வெளியீட்டு பிரிவின் கீழ் முகாமை செய்யப்பட்டு வருகிறது.

பாடப்புத்தகம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பின்வரும் வழிமுறைகளை கையாள வேண்டும்.

பாடசாலை அதிபர் ஊடாக வளையத்திற்கும் வளையத்தின் அதிகாரி ஊடாக கல்வியமைச்சின் வெளியீட்டு கமிஷனருக்கும் கடித மூலம் அரிய படுத்துவதன் ஊடாக பார்வை குறைபாடு உடைய பிள்ளை ஒன்றுக்கான பாடப்புத்தகத்தினை  பெற்றுக்கொள்ளமுடியும்.

நடைமுறையில் மூன்று வகையான அச்சுப்பதித்தல் முறைகள் காணப்படுகின்றன
1. குவிவு  தள முறையிலான அச்சுப் பதித்தல் (பிரெயில்)
2. குழிவு தள முறையிலான அச்சுப்பதித்தல்(பொலித்தீன் அச்சு பதித்தல்)
3. சமதள அச்சுப்பதித்தல் (பொடோ கொடி)
இவற்றில் குவிவு தள முறையிலான அச்சுப்பதித்தல் முறையே பிரெயில் ஆச்சி பதிவுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

பிரெயில்  அச்சுப் பதிவு செய்வதற்கு முன்னர். ஆரம்ப வேலைகளை செய்தல் வேண்டும் ( pre work) அவை

1. புத்தகங்களை வாசித்தல் (book reading)
2. சரிபார்த்தல் (proofreading)
3. அச்சுப்பதித்தல் ( typing)
4. முதல் பிரதியை தயாரித்தல் (first copy)
என்பனவாகும்.

அவ்வாறே பிற் செயற்பாடுகளும் காணப்படுகின்றன.
1. சரிபார்த்தல்
2. புத்தகத்தை கட்டுதல் என்பன அவையாகும்.

பிரெயில் முறையில் அச்சுப் பதிப்பு மூன்று முறைகளில் இடம்பெறுகின்றது.
1. Tunnel printing system. அலுமினிய தட்டுகளை பயன்படுத்தி அச்சுப்பதித்தல் (plat)
2. Computer based printing  system (கணனி சார்ந்த முறை)
3. பிரதி செய்யும் முறை (Termophon)
என்பன காணப்படுகின்றன.

கணனி முறையிலான அச்சுப் பதிவு
கணனி முறையிலான அச்சுப் பதிவின்போது இருவகையான தொகுதிகள் (package) தரவேற்றம் செய்யப்படுகின்றன.

1. பேச்சுத் தொகுதி (speech package)
பேச்சு தொகுதிக்காக ஜேவ்ஸ் (  Jaws) மற்றும் ஹோல் ( Hal)முறைமை தற்காலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

2. எழுத்து தொகுதி (writing package) இதற்காக வின் பார் win bar ) முறை ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. தற்போது டக்ஸ் பெரி (Duxbry)  முறைமை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பிரெயில் அச்சுப் பதிவுக்காக பல்வேறு பகுதிகளில் உள்ள காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
1). 120-140 GSM காகிதங்கள் அன்றாட தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றன.
2. 140-160 GSM காகிதங்கள் புத்தகங்களை அச்சு பதிக்க பயன்படுத்தப்படுகின்றன.
3. 160> GSM காகிதங்கள் அட்டைப் படத்துக்காக பயன்படுத்தப்படுகின்றன.

கணனியில் FDS JKL என்று எழுத்துக்கள் பிரெயில் புள்ளிகளை குறிப்பிடுகின்றன.

தாஹிர் நூருல் இஸ்ரா
உதவி விரிவுரையாளர்
உட்படுத்தல் கல்வித்துறை
தேசிய கல்வி நிறுவகம்
1/2/2020

Monday, 10 February 2020



12 programmes for students to mould their life.


1. What you can and I can't. ( Never give up and complete the started task)
உன்னால் முடிந்தும் என்னால் முடியாததும்

2. 🐍 and ladder ( time, game and life lessons)

3. SWOT

4. Set your goals. (Short term and long term) drow a road map to reached it deadline.

5. Think differently do productively with less resource ( utilizing available resources)

6. Confident development

7. Participate similar events

8. Motivate your self and share with others in a different angle.

9 Drow a 🌲


10. Inverst your Time and   earn  Money. (Develop you as a multi resource bank)

11. Listen to others and plan your end

12. Not to be king to forests try to be a eagle.


Conceptual framework by
Thahir Noorul Isra (MSW)
Rehabilitation Counselor.
11/02/2020

Friday, 7 February 2020

புதுமைகள் Wonders

எத்தனை எத்தனை புதுமைகள்
எத்தனை கண்கொண்டு அதை பார்ப்பேன்

துளிர்க்கும் இலைகள் மரத்தினிலே
நீந்தும் மீன்கள் கடலினிலே
பறக்கும் பறவைகள் வானதிலே.... எத்தனை எத்தனை புதுமைகள்
எத்தனை கண் கொண்டு அதை பார்ப்பேன்.....

கிழக்கே உதிக்கும் சூரியனும்
இரவில் ஒளிதரும் சந்திரனும்
 மின்னிடும் தாரகை கூட்டங்களும்
எத்தனை எத்தனை புதுமைகள்
எத்தனை கண் கொண்டு அதை பார்ப்பேன்......

பரந்து விரிந்த பூமியிலே
உயர்ந்து எழுந்த மலைகளுமே
பாய்ந்து விழும் ஆறுகளும்
எத்தனை எத்தனை புதுமைகள்
எத்தனை கண் கொண்டு அதை பார்ப்பேன்......

துள்ளிப் பாயும் மானினமும்
தேனை உறிஞ்சிடும் தேனீகளும்
விரைந்து... ஓடும் எறும்புகளும்
எத்தனை எத்தனை புதுமைகள்
எத்தனை கண் கொண்டு அதை பார்ப்பேன்......

கொள்ளை சிறிப்பொலி குழந்தைகளும்
வளர்ந்த இளமை தலைமைகளும்
நறையை எய்திய மூப்புகளும்
எத்தனை எத்தனை புதுமைகள்
எத்தனை கண் கொண்டு அதை பார்ப்பேன்......

7th February 2020.



Thursday, 23 January 2020

கன்னி வெடி. (Land mine in Sri Lanka)



தம்பி வெளியே போகாதே

தம்பி வெளியே போகாதே
தப்பி நீயும் வரமாட்டாய்
கன்னி வெடியில் சிக்குண்டு
கன பொழுதில் இழந்திடுவாய்

வேண்டும் வேண்டும் என்றாலும்
மீண்டும் மீண்டும் வருவதில்லை
இல்லை என்ற தொல்லையினால்
மீண்டும் இடுவர் காலொன்று

மீண்டும் கிட்டிய கால் கொண்டு
விரைவாய் நடக்க முடிவதில்லை
இறக்கும் வரைக்கும் அதனோடு
மாற்று திறனாளி ஆகிடுவாய்

பாடசாலை காலத்தில் எழுதியது.



Wednesday, 22 January 2020

அநாமிகா (Anamika- a review of poetry book)



அநாமிகா

அநாமிகா 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்துள்ள கவிதை புத்தகம்.  மருதூர் ஏ ஹசன் எனும் புனைப் பெயரிற்கு சொந்தக்காரர்  அலியார் அபுல் ஹஸன் எனும் ஆசிரியர் யாத்த கவிதைகளின்  தொகுதியை அவர்,
" இந்த உலகை விட்டு பிரிந்து போன மனித உயிர்களுக்கு" சமர்ப்பணம் செய்துள்ளார்.  மொத்தம் 69 பக்கங்களை  உள்ளடக்கிய இப்புது கவிதை நூலின் அப்போதைய விலை ரூபா 30. 

பேராசிரியர் நுஹ்மான் அணிந்துரை எழுதியுள்ள இந் நூலில் அவர் கவிதை என்றால் என்ன? என்று ஆரம்பிக்கின்றார்.  அவரது அணிந்துரை புதுக்கவிதை எழுதுபவர்களுக்கு நல்லதொரு விளக்கத்தை அளிக்கிறது.

"ஒரு முன் குறிப்பு" எனும் தலைப்பில் மருதூர் எ மஜீத் தனது வெளியீட்டு உரையை பதிவு செய்துள்ளார். மருதூர் ஏ ஹசனுக்கும் மருதூர் ஏ மஜீத்கும் இடையிலான தொடர்பை விளக்கும் பகுதி ஓர் முக்கிய ஆவணமாக,  பெளர்ணமி தோரும் கொழும்பில் இயங்கி வரும் வகவம் என சுருங்க அழைக்கப்படும் வலம்புரி கவிதா வட்டத்திற்கு காணப்படுவதனால் அப்பகுதியினை இங்கு பதிவிடுகிறேன்.

"மருதூர் ஏ ஹசனுடன் என் பரிச்சயம் குறைவாக  இருந்தாலும் பிற்காலத்தில் அவர் கொழும்பு வந்து வலம்புரி கவிதா வட்டத்தால் நாங்கள் பெளர்ணமி தோரும் ஒழுங்கு செய்யும் பல கவியரங்குகளில் கவிதை பாட வந்த பின் ஏற்பட்ட பரிச்சயமே எனக்கு மருதூர் ஏ ஹசனின் படைப்பு வளத்தை அறிமுகப்படுத்தியது" என பதிவு செய்துள்ளார். நன்றி குறிப்பிடும் பகுதியில் வகவம் மற்றும் மேமன் கவி என்போரின் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது. அத்தோடு வகவத்தில் வாசித்த கவிதை ஒன்றும் இதில் இடம் பிடித்ததுள்ளது.
 
அநாமிகா புது கவிதை தொகுதியாக இருந்த போதும் போர்கால இலக்கியமாக இதனை அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

 ஏனெனில் முதல் கவிதையே " யுத்தம் நடக்கிறது மகனே நீ வெளியே போகாதே" எனும் கவிதை தலைப்பு ஒன்றே அதை பறைசாற்றி நிற்கிறது. இதற்கு ஒத்த தலைப்பில் என் பள்ளி பருவத்தில் இப்படி ஒரு கவிதையாத்த ஞாபகம் வருகிறது. 

#தம்பி வெளியே போகாதே
தப்பி நீயும் வரமாட்டாய்
கன்னி வெடியில் சிக்குண்டு
கன பொழுதில் இழந்திடுவாய்#

#வேண்டும் வேண்டும் என்றாலும்
மீண்டும் மீண்டும் வருவதில்லை
இல்லை என்ற தொல்லையினால்
மீண்டும் இடுவர் காலொன்று#

#மீண்டும் கிட்டிய கால் கொண்டு
விரைவாய் நடக்க முடிவதில்லை
இறக்கும் வரைக்கும் அதனோடு
மாற்று திறனாளி ஆகிடுவாய்#
 
என் இளமை கால சூழலை  அசைப்போடுவதற்கு அனாமிகா வழிசமைத்துள்ளது. போர்கால காதல் உணர்வுகளும் துள்ளியமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

"கல்லூரி வாசலில்
மல்லிகை பூக்கள்
அலாதியான
வாசத்தை பரப்ப
வீதியால்
பன்னீர் வாசகத்துடன்
ஒரு 
பிரேதம்"

தொலைபேசி இன்றிய அன்றைய இலங்கையின் காதல் புடம் போட்டு காட்டுகிறது.

"கற்பனைகள் கூட
சில வேளைகளில்
யந்திரமாகத்தான் இருக்கிறது.
யந்திரத்தில்
நீ
செய்து அனுப்புகின்ற
கடிதங்களால்"

என்கிறார். மற்றொரு கவிதையில்

"உன் 
இதயம் செய்து அனுப்பிய
காகிதங்களை
கவனமாக வைத்துள்ளேன்....
பூமியில்
தவறி விழுந்தால்
அவைகள்
காயப்பட்டு விடும் என்பதற்காக!

தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான எதிர்வு கூறல்களும். அதன் ஆக்கிரமிப்பும், முடிவுறா தொடர் கதையே போர் என்பதனையும் சுட்டிக்காட்ட தவறவில்லை.

"எங்களது 
தாய்க் குலத்துக்கு
ஒரு வேண்டுகோள்
இனி பிரசவம்
நடக்கும் போது
குழந்தைகளின் கைகளில்
ஆயுதங்கள் இருக்கும் கவனம்
தாய்மார்களுக்கு கூட
ஆபத்து வரலாம்"

மேல் குறிப்பிட்ட இக் கவிதை இன்றைய நாட்களில் எழுதப்படுமாயின் குழந்தைகளின் கைகளில் செல்போன்(தொலைபேசி)
என் எழுதப்படலாம்.

" ஆகாயம் முழுவதும்
ஆள்காட்டிப் பறவையைப் போல்
இயந்திரப் பறவை
கத்திப் பறக்கும்"
என்பவற்றோடு; ஊரடங்கு உத்தரவு, மன்னார் மக்களின் வெளியேற்றம் மற்றும் சிவந்த பள்ளி கவிதை நூலில் இடம் பிடித்த கவிதை என்பவற்றை எடுத்துக் காட்டலாம்.

ஒரு மணித்தியாலத்தில் புத்தகத்தை வாசித்தாளும் மீண்டும் மீண்டும் ஆழமான வாசிப்பு  அவசியம். ஆய்வுகள் போன்று  மீள் வாசிப்பு அவசியம். அநாமிகாவின் உடன் பிறப்புகளை தேடி வாசிக்க என்னை இந்நூல் தூண்டி நிற்கிறது.

 தாஹிர் நூருல் இஸ்ரா
#NIEDiary
#Travelreader
22/01/2020

Monday, 6 January 2020

Dedication to #khoalas - victims of #Australia #bushfire- 2020 கோலாக்களுக்கு சமர்ப்பணம்



Dedication to #khoalas - victims of #Australia #bushfire- 2020
கோலாக்களுக்கு சமர்ப்பணம்


அக்கினிச் சுவாலைகள் ஆர்ப்பரித்து அவுஸ்திரேலிய காடுகளில் தீ
கக்கிய செந்தழல்கள்
உக்கிர சூரியனின் தீப்பிழம்பாய்
சிவந்து போனது வானம்
எரிந்து போனது இதயம்

*************************
என் இதய அறைகளுக்குள்
ஆஸ்திரேலியாவின் கங்காருவையும்
அக்கினியில் சங்கமமான கோலக்கலையும்
அடக்கம் செய்கிறேன்.
ஒரு நிமிடம் போதாது
ஆண்டாண்டாய் மௌன
அஞ்சலி செலுத்துகிறேன்.

****************************
சூரியக் கதிர்களுக்குள்
குளிர் களைந்து
உரை பணியில் மூழ்கி
வியர்வையை ருசிதிராத
உயரிய உயிரினங்கள்
கருகியே மாய்வதை
காணவும் வேண்டுமோ

*************""""""""""""""""""""
எல்லை ஓரமாய் சுத்தப்பட்ட
வேலி கம்பிகளில் சிக்குண்டு
கருகிப்போன கங்காரு
வயிற்றில் சுமந்து
வந்தது தன் குட்டியை.

**************************
அடைக்கலம் கொடுத்த காடே
செந்தழலை பரப்பி விட்டு
செங்கம்பள விரிப்பிலேற்றி
வெளியேற்றிவிட்டது

************†**********
உருகிய உள்ளம் ஒன்று
ஆடையைக் கழட்டி
அள்ளி அணைத்தது
சுட்டுப்போன கோலாவை.
பிள்ளையை தூக்குவது போல்
கட்டி அணைத்து
தண்ணியூற்றிய போது
எறிவு தாங்காது
முனங்கியது கோலா
எரிந்துப் போன
என் இதயத்தில்
எண்ணியதெல்லாம்
கோலாக்களினன்  பிம்பங்களே
****************


தாஹிர் நுருல் இஸ்ரா
4/1/2020




#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...