பிச்சி போட்ட ரொட்டி துண்டுகள்
ஊரிய ஊறுகாயாய் தினம்
ஊமை வாழ்க்கையும்,
வட்டாரத்து வாழையாய் தினம்
வெட்டி வீசப்படுதலும்,
சமூகத்து நியதிகளாய் தினம்
சரித்திரத்து சுவடுகளும்,
நாளைய நாற்றுகளாய் தினம்
நினைக்கும் முதிர்க் கொம்புகளும்
காய்ந் தோலை விழச்சிரிக்கும்
குருத்தோலையாய் நீயும்
சறுகிப் போனாய்.
பழுத்த பழத்தை மரம்
என்றோ ஒருநாள்
விழுத்தத்தான் வேண்டும்.
காய்ந்த இலையை மரம்
என்றோ ஒருநாள்
சிலிர்க்கத்தான் வேண்டும்.
செறிந்த மலரை மரம்
என்றோ ஒருநாள்
விழுத்தத்தான் வேண்டும்.
பூமியில் பிறந்த உயிர்
என்றோ ஒருநாள்
இறக்கத்தான் வேண்டும்.
முதிர் கொம்பான நீயும்
மூச்சடைத்து
மூர்ச்சையாகி போனாய்.
உன் இதயம் துடித்துநிற்கும் -வரை
உன் உயிர் ஊரடங்கும் - வரை
உன் சுற்றம் காத்துகிடந்தது– ஏனோ?
சிந்திய வியர்வை
செந்நீராய் சங்கமமாகும் முன்
கண்ணீர் வடிக்கிறது உன்
சுற்றம்.
வாழும் போதே
வாழ்த்தாத உன் சுற்றம்
ஈமைக்கிரியைக்காக
பெட்டியில் அடைத்த பின்பு
பேசும் வீராப்பின் மகிமையை
உன் கண்கள் பார்க்கவில்லையே -என
நான் ஆதங்கப்படுகிறேன்.
உன் மூச்சு காற்று– மட்டும்
உன் தொண்டைக் குழியை– விட்டும்
ஏன் தூரமாகும் வரை –சற்றும்
ஆசையாத சுற்றம்
உன் மூச்சடங்க…..
ஓட்டைவீட்டுக்குள்
ஓடிச் சென்று,
ஆளுக்காள் ஏதேதோ
தேடியெடுத்து,
இது என் அம்மா–எனக்கு தந்தது
இது என் ஆத்தா–எனக்கு தந்தது
இது என் பாட்டி–எனக்கு தந்தது
இது என் சித்தி–எனக்கு தந்தது
எங்கிருந்து வந்தது
இத்தனைச் சுற்றம்
இப்போ….
உனக்கு மிஞ்சியது…
வானவெளியில் கிழித்துபோட்ட
இரவுப்போர்வை …
உன்னுடன் தினம்
கதைபேசிய
வெற்றிலை
செப்பும் - அதன்
உலக்கையும்…
உன் வருகைக்காய்
உன் வீட்டுகதவு
மூலையில் காத்திருக்கும்
கைப்பிடி…
அன்றொருநாள்
அன்னையர்
தினத்தில்
அன்பளித்ததகரப்
பீங்கானும்…
அளவோடு உன்
உதடுகளை உரசிப்பார்த்த
கோப்பையும்…
எப்படியோ காத்திருந்து
ஊரடைந்த உன்
மரண அத்தாட்சிபத்திரத்தை
பெற்றபின்
தேடியது
மண்ணுக்குள் நீ மர்மமாய்
மரைத்து வைத்திருந்த
மர்ம பெட்டியை
அதற்குள் நீ எழுதியிருந்த
உயிலை
அப்போதே தெரிந்தது அது
சின்னவயதில்
சிட்டுகுருவியாய்
சிறகடிக்கவில்லை என்பது.
புரியாத வயதில்
பட்டாம் பூச்சிகளை
ரசிக்கவில்லை என்பது.
முறையின்றி உன் தாய்
ஓளியறையில்
கருத்தரித்தாள் என்பது.
முகம்பார்த்து உன் தாய்
மார்பங்களில்
பாலூட்ட மறுத்தாள் என்பது.
மயானமான உன் வாழ்வின்
மர்ம ரகசியங்களை
மர்ம பெட்டிக்குள்
பிச்சி போட்ட ரொட்டி துண்டுகள்
போலிருந்த
எலி கடித்து மிஞ்சிபோன
கடதாசி துண்டுகள்
பேசியது.
ஆறியாத வயதில்
உனக்கு அடைக்களமான
அனாதை இல்லத்துக்கு– நீ
விட்டுச் செல்லுவதெல்லாம்
உன் பெயரில் உள்ள
எச்ச சொச்சங்களும்,
சேலை முடிச்சில் -நீ
முடிஞ்சி வைத்திருந்த
ஈமைக்கிரியை பணமும்……
No comments:
Post a Comment