Friday, 7 February 2020

புதுமைகள் Wonders

எத்தனை எத்தனை புதுமைகள்
எத்தனை கண்கொண்டு அதை பார்ப்பேன்

துளிர்க்கும் இலைகள் மரத்தினிலே
நீந்தும் மீன்கள் கடலினிலே
பறக்கும் பறவைகள் வானதிலே.... எத்தனை எத்தனை புதுமைகள்
எத்தனை கண் கொண்டு அதை பார்ப்பேன்.....

கிழக்கே உதிக்கும் சூரியனும்
இரவில் ஒளிதரும் சந்திரனும்
 மின்னிடும் தாரகை கூட்டங்களும்
எத்தனை எத்தனை புதுமைகள்
எத்தனை கண் கொண்டு அதை பார்ப்பேன்......

பரந்து விரிந்த பூமியிலே
உயர்ந்து எழுந்த மலைகளுமே
பாய்ந்து விழும் ஆறுகளும்
எத்தனை எத்தனை புதுமைகள்
எத்தனை கண் கொண்டு அதை பார்ப்பேன்......

துள்ளிப் பாயும் மானினமும்
தேனை உறிஞ்சிடும் தேனீகளும்
விரைந்து... ஓடும் எறும்புகளும்
எத்தனை எத்தனை புதுமைகள்
எத்தனை கண் கொண்டு அதை பார்ப்பேன்......

கொள்ளை சிறிப்பொலி குழந்தைகளும்
வளர்ந்த இளமை தலைமைகளும்
நறையை எய்திய மூப்புகளும்
எத்தனை எத்தனை புதுமைகள்
எத்தனை கண் கொண்டு அதை பார்ப்பேன்......

7th February 2020.



Thursday, 23 January 2020

கன்னி வெடி. (Land mine in Sri Lanka)



தம்பி வெளியே போகாதே

தம்பி வெளியே போகாதே
தப்பி நீயும் வரமாட்டாய்
கன்னி வெடியில் சிக்குண்டு
கன பொழுதில் இழந்திடுவாய்

வேண்டும் வேண்டும் என்றாலும்
மீண்டும் மீண்டும் வருவதில்லை
இல்லை என்ற தொல்லையினால்
மீண்டும் இடுவர் காலொன்று

மீண்டும் கிட்டிய கால் கொண்டு
விரைவாய் நடக்க முடிவதில்லை
இறக்கும் வரைக்கும் அதனோடு
மாற்று திறனாளி ஆகிடுவாய்

பாடசாலை காலத்தில் எழுதியது.



Wednesday, 22 January 2020

அநாமிகா (Anamika- a review of poetry book)



அநாமிகா

அநாமிகா 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்துள்ள கவிதை புத்தகம்.  மருதூர் ஏ ஹசன் எனும் புனைப் பெயரிற்கு சொந்தக்காரர்  அலியார் அபுல் ஹஸன் எனும் ஆசிரியர் யாத்த கவிதைகளின்  தொகுதியை அவர்,
" இந்த உலகை விட்டு பிரிந்து போன மனித உயிர்களுக்கு" சமர்ப்பணம் செய்துள்ளார்.  மொத்தம் 69 பக்கங்களை  உள்ளடக்கிய இப்புது கவிதை நூலின் அப்போதைய விலை ரூபா 30. 

பேராசிரியர் நுஹ்மான் அணிந்துரை எழுதியுள்ள இந் நூலில் அவர் கவிதை என்றால் என்ன? என்று ஆரம்பிக்கின்றார்.  அவரது அணிந்துரை புதுக்கவிதை எழுதுபவர்களுக்கு நல்லதொரு விளக்கத்தை அளிக்கிறது.

"ஒரு முன் குறிப்பு" எனும் தலைப்பில் மருதூர் எ மஜீத் தனது வெளியீட்டு உரையை பதிவு செய்துள்ளார். மருதூர் ஏ ஹசனுக்கும் மருதூர் ஏ மஜீத்கும் இடையிலான தொடர்பை விளக்கும் பகுதி ஓர் முக்கிய ஆவணமாக,  பெளர்ணமி தோரும் கொழும்பில் இயங்கி வரும் வகவம் என சுருங்க அழைக்கப்படும் வலம்புரி கவிதா வட்டத்திற்கு காணப்படுவதனால் அப்பகுதியினை இங்கு பதிவிடுகிறேன்.

"மருதூர் ஏ ஹசனுடன் என் பரிச்சயம் குறைவாக  இருந்தாலும் பிற்காலத்தில் அவர் கொழும்பு வந்து வலம்புரி கவிதா வட்டத்தால் நாங்கள் பெளர்ணமி தோரும் ஒழுங்கு செய்யும் பல கவியரங்குகளில் கவிதை பாட வந்த பின் ஏற்பட்ட பரிச்சயமே எனக்கு மருதூர் ஏ ஹசனின் படைப்பு வளத்தை அறிமுகப்படுத்தியது" என பதிவு செய்துள்ளார். நன்றி குறிப்பிடும் பகுதியில் வகவம் மற்றும் மேமன் கவி என்போரின் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது. அத்தோடு வகவத்தில் வாசித்த கவிதை ஒன்றும் இதில் இடம் பிடித்ததுள்ளது.
 
அநாமிகா புது கவிதை தொகுதியாக இருந்த போதும் போர்கால இலக்கியமாக இதனை அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

 ஏனெனில் முதல் கவிதையே " யுத்தம் நடக்கிறது மகனே நீ வெளியே போகாதே" எனும் கவிதை தலைப்பு ஒன்றே அதை பறைசாற்றி நிற்கிறது. இதற்கு ஒத்த தலைப்பில் என் பள்ளி பருவத்தில் இப்படி ஒரு கவிதையாத்த ஞாபகம் வருகிறது. 

#தம்பி வெளியே போகாதே
தப்பி நீயும் வரமாட்டாய்
கன்னி வெடியில் சிக்குண்டு
கன பொழுதில் இழந்திடுவாய்#

#வேண்டும் வேண்டும் என்றாலும்
மீண்டும் மீண்டும் வருவதில்லை
இல்லை என்ற தொல்லையினால்
மீண்டும் இடுவர் காலொன்று#

#மீண்டும் கிட்டிய கால் கொண்டு
விரைவாய் நடக்க முடிவதில்லை
இறக்கும் வரைக்கும் அதனோடு
மாற்று திறனாளி ஆகிடுவாய்#
 
என் இளமை கால சூழலை  அசைப்போடுவதற்கு அனாமிகா வழிசமைத்துள்ளது. போர்கால காதல் உணர்வுகளும் துள்ளியமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

"கல்லூரி வாசலில்
மல்லிகை பூக்கள்
அலாதியான
வாசத்தை பரப்ப
வீதியால்
பன்னீர் வாசகத்துடன்
ஒரு 
பிரேதம்"

தொலைபேசி இன்றிய அன்றைய இலங்கையின் காதல் புடம் போட்டு காட்டுகிறது.

"கற்பனைகள் கூட
சில வேளைகளில்
யந்திரமாகத்தான் இருக்கிறது.
யந்திரத்தில்
நீ
செய்து அனுப்புகின்ற
கடிதங்களால்"

என்கிறார். மற்றொரு கவிதையில்

"உன் 
இதயம் செய்து அனுப்பிய
காகிதங்களை
கவனமாக வைத்துள்ளேன்....
பூமியில்
தவறி விழுந்தால்
அவைகள்
காயப்பட்டு விடும் என்பதற்காக!

தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான எதிர்வு கூறல்களும். அதன் ஆக்கிரமிப்பும், முடிவுறா தொடர் கதையே போர் என்பதனையும் சுட்டிக்காட்ட தவறவில்லை.

"எங்களது 
தாய்க் குலத்துக்கு
ஒரு வேண்டுகோள்
இனி பிரசவம்
நடக்கும் போது
குழந்தைகளின் கைகளில்
ஆயுதங்கள் இருக்கும் கவனம்
தாய்மார்களுக்கு கூட
ஆபத்து வரலாம்"

மேல் குறிப்பிட்ட இக் கவிதை இன்றைய நாட்களில் எழுதப்படுமாயின் குழந்தைகளின் கைகளில் செல்போன்(தொலைபேசி)
என் எழுதப்படலாம்.

" ஆகாயம் முழுவதும்
ஆள்காட்டிப் பறவையைப் போல்
இயந்திரப் பறவை
கத்திப் பறக்கும்"
என்பவற்றோடு; ஊரடங்கு உத்தரவு, மன்னார் மக்களின் வெளியேற்றம் மற்றும் சிவந்த பள்ளி கவிதை நூலில் இடம் பிடித்த கவிதை என்பவற்றை எடுத்துக் காட்டலாம்.

ஒரு மணித்தியாலத்தில் புத்தகத்தை வாசித்தாளும் மீண்டும் மீண்டும் ஆழமான வாசிப்பு  அவசியம். ஆய்வுகள் போன்று  மீள் வாசிப்பு அவசியம். அநாமிகாவின் உடன் பிறப்புகளை தேடி வாசிக்க என்னை இந்நூல் தூண்டி நிற்கிறது.

 தாஹிர் நூருல் இஸ்ரா
#NIEDiary
#Travelreader
22/01/2020

Monday, 6 January 2020

Dedication to #khoalas - victims of #Australia #bushfire- 2020 கோலாக்களுக்கு சமர்ப்பணம்



Dedication to #khoalas - victims of #Australia #bushfire- 2020
கோலாக்களுக்கு சமர்ப்பணம்


அக்கினிச் சுவாலைகள் ஆர்ப்பரித்து அவுஸ்திரேலிய காடுகளில் தீ
கக்கிய செந்தழல்கள்
உக்கிர சூரியனின் தீப்பிழம்பாய்
சிவந்து போனது வானம்
எரிந்து போனது இதயம்

*************************
என் இதய அறைகளுக்குள்
ஆஸ்திரேலியாவின் கங்காருவையும்
அக்கினியில் சங்கமமான கோலக்கலையும்
அடக்கம் செய்கிறேன்.
ஒரு நிமிடம் போதாது
ஆண்டாண்டாய் மௌன
அஞ்சலி செலுத்துகிறேன்.

****************************
சூரியக் கதிர்களுக்குள்
குளிர் களைந்து
உரை பணியில் மூழ்கி
வியர்வையை ருசிதிராத
உயரிய உயிரினங்கள்
கருகியே மாய்வதை
காணவும் வேண்டுமோ

*************""""""""""""""""""""
எல்லை ஓரமாய் சுத்தப்பட்ட
வேலி கம்பிகளில் சிக்குண்டு
கருகிப்போன கங்காரு
வயிற்றில் சுமந்து
வந்தது தன் குட்டியை.

**************************
அடைக்கலம் கொடுத்த காடே
செந்தழலை பரப்பி விட்டு
செங்கம்பள விரிப்பிலேற்றி
வெளியேற்றிவிட்டது

************†**********
உருகிய உள்ளம் ஒன்று
ஆடையைக் கழட்டி
அள்ளி அணைத்தது
சுட்டுப்போன கோலாவை.
பிள்ளையை தூக்குவது போல்
கட்டி அணைத்து
தண்ணியூற்றிய போது
எறிவு தாங்காது
முனங்கியது கோலா
எரிந்துப் போன
என் இதயத்தில்
எண்ணியதெல்லாம்
கோலாக்களினன்  பிம்பங்களே
****************


தாஹிர் நுருல் இஸ்ரா
4/1/2020




Sunday, 29 December 2019




கையோடு கூட்டி வாங்க

கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் எழுதிய 
கையோடு கூட்டி வாங்க சென்ற பௌர்ணமி அன்று என் கையில் கிடைத்தது.

2015 ஆம் ஆண்டில் இருந்து கஸ்ஸாலி அஷ்ஷம்ஸின் கவிதைகளை வகவ மேடையில் தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறேன். அவரது நண்பரின் நினைவுப் பேருரையும் அவர் ஆற்றி இருக்கிறார்.

 இந்த அறிமுகத்தோடு தான் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸின் கையோடு கூட்டி வாங்க புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன்.

கலைவாதி கலீல் சார் அவர்களின் அட்டைப் படத்துடன்,  துறையொளி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக 61 கவிதைகளை உள்ளடக்கி 120 பக்கங்களில் வெளிவந்துள்ளது.
பெற்றோருக்கு சமர்ப்பணம் செய்து இதயத்தை திறந்து கவிஞர் பேசுகிறார்.
புத்தகத்தில் திக்குவல்லை கமால் அவர்கள் அணிந்துரையும். சந்தக்கவி கிண்ணியா அமீர் அலி வாழ்த்துக் கவிதையும், வெளியீட்டு உரையும் இடம் பெற்றுள்ளது. கவிஞர் என்னை கையோடு புத்தகத்துக்குள் உலாவர கூட்டிச் செல்கிறார். 

1985 ஆம் ஆண்டு கவிதை எழுதத தொடங்கிய கவிஞர் 1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணாமல் போய் மீண்டும் 2012 ஆம் ஆண்டு  எழுதத் தொடங்குகிறார்.

19 ஆம் நூற்றாண்டில் எழுதிய கவிதைகளை இருபத்தி ஓராம் நூற்றாண்டில் வெளியிட்டுள்ளார்.

நெடு நேர பயண வாசிப்பில் புத்தகத்தில் கிறுக்கிய சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நிலா என்ற பெயர்
நிலைத்தது
உலாவித் திரிவதனாலோ
.....
விளையாட்டுக்குக் கூட
நேரம் இல்லாததனால்
வெறிபிடித்த
விளையாட்டுக்களுமே வகுப்பறைகளில்
.......
மலைகள் தான் ஏறுவார்கள்
மலைமேல் மறுதலையா
மலை ஏறியது
மக்கள்மேல்
......
ஓர் எச்சரிக்கை
படைப்பாளியின்
பேனாவுக்கு மட்டுமே
பக்கங்களுடன் பேசும் உரிமை.
.......
ஓவர்டைம் செய்த
சமையல் பாத்திரங்கள்
கட்டாய லீவில்
.......
வறுமையின் கோலங்களுக்கு
எந்தன் கோலங்களே
சாட்சிகள்
.......
அமல் களுக்கான நேரத்தைக் கூட
புக் பண்ணி விட்டது
ஃபேஸ்புக்

போன்ற வரிகளே என்னை கவர்ந்ததும் சிந்திக்க வைத்ததுமான வரிகளாகும்.

பல இடங்களில் அழகாக கவிதையாத்துள்ள  போதும் முடிவு அரசியலில் முடிந்து விடுகிறது. ஆடத் தெரியாதவனுக்கு நிலமும் கோணலாம் என்பது போலஅரசியலை சாடியே பல கவிதைகள் அமையப்பெற்றுள்ளன.

ஆண் கவிஞர்களின் பெண்நிலை பார்வை தெளிவாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

அறிவியல் யுகத்தில் நாங்கள் வாழ்கிறோம், மற்றொரு கவிதையில் மூடநம்பிக்கையில் மூழ்கிப்போய் இருப்பவர்கள் பெண்கள் மட்டும்தான் என்று காட்டுவது போல் இருக்கிறது.
கரைந்து போகும் எதிர்பார்ப்புகள் எனும் கவிதையில் பெண்கள் பிள்ளை பெறும் எந்திரம் தான் என்று நிரூபிக்க முற்படுகிறார். தலைவிதி தாலாட்டு எனும் கவிதையில் நீ கண் விழித்துக்கொண்டாள் நள்ளிரவிலும் சூரியன் விழித்துக்கொள்ளும் என்ற வரிகள், உத்தரவாதம் இல்லை எனும் கவிதையில் இந்த வரிசையில் குழந்தை பண்ணை.  போன்ற  பிற்போக்குச் சிந்தனை உள்ள கவிதைகளாக எனக்குத் தோன்றுகின்றன.

கவிஞர் தனது மன குமுறல்களையும் உணர்ச்சி வெளிப்பாட்டையும் கோர்வை படுத்துவதில் சிரமப்படுகிறார்.

என்னுடைய பால்ய பருவத்தை புத்தகத்தில் கண்டுகொள்ளலாம் என்றும் நினைத்தாலும் எண்பதுகளையும் தொண்ணூறுகளையும் அது துல்லியமாக படம் பிடிக்கவில்லை என்பது எனது பார்வை.

ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இருந்துகொண்டு இருபதாம் நூற்றாண்டை அழகாக எதிர்வு கூறியுள்ளார்.

நாளும் வரும் எனும் கவிதையில்
சர்வமத குடியேற்றத் திட்டங்கள் சகல இடங்களிலும் ஸ்தாபிக்க வேண்டும் என்ற கவிதை இன்றைய பிளட் வீடுகளை எனக்கு எண்ணிப் பார்க்கச் செய்கிறது.

அதுபோல
இருபத்தோராம் நூற்றாண்டில் என்னும் கவிதையில் இன்று நாம்
பாவிக்கும்டிவி ரேடியோ யாவும்  நூதன சாலைகளில் காட்சிக்க வைக்கப்பட்டிருக்கும் போன்ற கவிதைகள் சிறப்பாக உள்ளது.

கவிஞர் மிக விரைவில்
நல்ல பல கவிதைகளை யாத்து
மீண்டும் மீண்டும் வாசிக்க
காத்திரமான ஒரு படைப்பை தரவேண்டும் என்று ஒரு நல்ல வாசகனாக வினயமாக வேண்டிக் கொள்கிறேன்.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
இஸ்ரா.

30/12/2019
#NIE_Diary
#readingbooks







போயிட்டு வாங்க சார் (Good Bye Mr. Chips)





போயிட்டு வாங்க சார்

குட் பாய் மிஸ்டர் சிப்ஸ்.

எனும் நூல் திரு. ச. மாடசாமி என்பவர்  அவரின் வாசிப்பின் வெளிப்பாடாக எழுதப்பட்ட நூலாக அமைகின்றது. 63 பக்கங்களை உள்ளடக்கிய  Books for Children வெளியீடாக வந்துள்ள இப் புத்தகத்தின் ஆரம்பத்தில்

சிப்ஸ் சிப்ஸ் சிப்ஸ்
குட் பாய் மிஸ்டர் சிப்ஸ் 1933 இல் பிரிட்டிஷ் விக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை 1934 இல் நூலாக வெளிவந்தது. நூலின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹில்டன். இந் நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது. இக் கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர். அவரின் பெயர் தான் சிப்ஸ் முழுப்பெயர் சிப்பிங். முதன்முதலாக ஆசிரியர் மாணவர் உறவை உணரவைத்தது. அதன் விளைவாக வாசித்தவரை உருக வைத்தவர் சிப்ஸ் போய்ட்டு வாங்க சார் மொழிபெயர்ப்பு நூல் அல்ல. இது குட் பாய் மிஸ்டர் சிப்ஸ் வாசித்த அனுபவம் மட்டுமே இனி வாசியுங்கள்.

இப்படி நூலுக்கான அறிமுகத்தை நூலாசிரியர் கொடுத்திருக்கிறார். பின் பக்கத்தில் ஒரு கருப்பு வெள்ளை படத்துடன் சிப்சுக்கு அறிமுகம் கொடுக்கிறார் நூலாசிரியர் இப்படி.

 "பார்வைக்கு கண்டிப்பானவர் உள்ளே இளக்கமான ஆள்"....

 என ஆசிரியரைப் பற்றிய அறிமுகம் அமைகின்றது. ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும். அவருடைய பண்பு நலன்கள் எவ்வாறு பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவருடைய ஆளுமையை எவ்வாறு வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஆரம்பகால ஆசிரியப்பணி  மனப்பாங்கு, பணிக்கு இணைந்த உடன் ஓர் ஆசிரியருக்கு எழும்புகின்ற சாதாரணமான என்ன பங்குகள், இவை எல்லாம் இந்த புத்தகத்தில் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

இன்றைய மாணவர்களைப் போன்று அன்றைய மாணவர்களும் இருந்துள்ளார்கள் என்ற வகையில் மாணவர் என்ற அந்த பருவம் மாற்றம் அடையவில்லை. ஆனால் ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த மனிதர்கள் மாறியுள்ளார்கள். என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

சிப்சுக்கு மட்டுமே கிடைத்த வரமாக சில விடயங்கள் எடுத்துக் காட்டப்படுகிறது. அவர் நேசித்த பாடசாலைக்கு அண்மையிலேயே வீடு அமைந்திருப்பது. ஒவ்வொரு நாளும் புதிய மாணவர்களை சந்திப்பது. ஓய்வு பெற்றதன் பின்னரும் மீண்டும் பணி செய்ய செல்வது இவையெல்லாம் சிப்சுக்கு மாத்திரம் கிடைத்த வரப்பிரசாதங்கள் ஆகத்தான் இந்த புத்தகத்தில் நான் பார்க்கிறேன்.

 வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்தது போன்ற திருமண வாழ்க்கை.

"குட் பாய் மிஸ்டர் சிப்ஸ்"

என்ற இறுதி வசனங்களை மீட்டி மீட்டி பார்க்கின்ற பாங்கு. 365 நாட்களுக்குள் சுருங்கிப்போன திருமண வாழ்வில் சிப்ஸ் உடைய பிற்போக்கு சிந்தனை களை எவ்வாறு  முற்போக்கு சிந்தனைகளாக அல்லதுவேறு விதமாகவும் சிந்திப்பதற்கு அவரது மனைவி எடுத்த முயற்சி இன்றைய எமக்கு சில விடயங்களை எடுத்துக் காட்டுகிறது.

கற்பனையாகக் கொண்டு வரப்பட்ட ப்ரூக்ஃபீல்ட் நகரம், அதற்கு அண்மையில் பின்தங்கிய பாடசாலையில் கற்ற மாணவர்கள், இரண்டு பாடசாலைகளுக்கு இடையிலான நட்பு ரீதியான உதைபந்தாட்ட போட்டி, ஒழுக்க விழுமியங்கள் குன்றியவர்களாக பின்தங்கிய பாடசாலை மாணவர்கள் இருப்பார்கள் என்ற பொதுவான மனப்பாங்கு,
விளையாட்டு எவ்வாறு ஒழுக்க விழுமியங்கள், நெறிமுறைகளை மேம்படுத்துகின்றது என்பதும்

 விளையாட்டின் ஊடாக வேறுபாடற்ற மகிழ்ச்சியை அடைய முடியும் என்ற செய்தியும் குட் பாய் மிஸ்டர் சிப்ஸ்  ஊடாக நாங்கள் படிக்க வேண்டி இருக்கிறது.

பொதுவாக திருமணங்களுக்கு முன்னைய ஆசிரியத்துவம் திருமணங்களுக்கு பிந்திய ஆசிரியத்துவம் மாறுபட்டு போவதனை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
 இது இயல்பாகவே சிப்ஸ் உடைய வாழ்விலும் இடம் பெற்றுள்ளது.

 என்றாலும் திருமணத்துக்குப் பிந்திய சிப்சுடைய உள மனவெழுச்சி சார்ந்த முதிர்ச்சி உண்மையிலேயே பாராட்ட கூடியதாக உள்ளது.

 அந்த வகையில் திருமணம் என்பது உள மனவெழுச்சி சார்ந்த விடயங்களுக்கு ஆற்றுப்படுத்த கூடிய இடமாகவும் தொழில் சூழலில் உளரீதியான அழுத்தங்களுக்கு உட்படுவது குறைப்பதற்காக திருமண வாழ்க்கை அமைந்து விடுகின்றது.

இது எல்லோருக்கும் அமைந்து விடுகிறதா?

இன்று எமக்கு தொழில் சூழலில் ஏற்படும் அழுத்தங்களை விடவும் குடும்ப சூழலில் ஏற்படுகின்ற அழுத்தங்கள் கூடுதலாக இருப்பதால் தொழிலில் திறமைகளை வெளிப்படுத்துவதில் சிக்கல்கள் தோன்றுகின்றன.

ஓய்வுக்குப் பின்னர்தொ ழில் வாழ்க்கையில் ஈடுபட்ட சிப்ஸ் காலை கூட்டங்களில் முதலாம் உலகப் போரின் பின்னர் இறந்த தமது மாணவர்களை நினைவு கூறும் போது அவர் ஒரு வசனத்தை குறிப்பிடுகிறார்,

" அவர்களின் பெயர்கள் மட்டுமல்ல அவர்களின் முகங்களும் எனக்கு தெரியும்"

 இது கல்விச் சூழலில் இருக்கின்ற கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற எமக்கு முக்கியமான ஒரு செய்தியாகும்.

இதே விடயத்தையே டீச்சர் ஏன் எங்களை பெயிலாகினீங்க என்ற புத்தகத்தில் அந்த மாணவர்களும் ஒரு கேள்வியை ஆசிரியர்களிடம் தொடுகிறார்கள்.

 எங்களைப் பெய்லாகிய பின்னர் நாங்கள் என்ன ஆனோம் என்று நீங்கள் தேடி பார்த்தீர்களா?

இது முடியுமானவரை தன்னிடம் கற்ற மாணவர்களுடன் தொடர்பினை நீண்ட காலம் பேணி வருவது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் படுகின்றது.

 இவை எல்லாவற்றையும் விட குட் பாய் மிஸ்டர் சிப்ஸ்  போதிக்கின்ற பாடம் என்ன?

இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் தூக்கி எறிந்துவிட்டு நிகழ்காலத்தில் வாழுங்கள் என்பதுவே.

யுத்த களத்தில் பாடசாலையை சுற்றிலும் குண்டுகள் வீசப்பட்டு குண்டு மழை பொழியும் பொழுதும் சிப்ஸ் வரலாற்றுப் பாடம் எடுக்கிறார்.

 அந்த ஆசிரியரின் அர்ப்பணிப்பு, அந்த ஆசிரியர் தொழில் திறன், பயமற்ற உணர்வு, மாணவர்களுக்கு கொடுக்கக் கூடிய தைரியம் என்பன கவனத்தில் இருத்த வேண்டிய ஒன்றாகும்.

  நிகழ்காலத்தை சந்தோசமாக அவர்களுடன் சிரித்து பேசி, வகுப்பறை பொழுதுகளை மிக மகிழ்வாகவும், மிகவும் சந்தோசமாகவும்  ஆசிரியர் இன்னும் கொஞ்ச நேரம் இந்த வகுப்பறையில் இருக்க மாட்டாரா? என்று ஒவ்வொரு பிள்ளையும் எண்ணுமளவுக்கு எங்களது வகுப்பறை பொழுதுகள் அமையவேண்டும் என்ற மிகப்பெரிய செய்தியை குட்பாய் மிஸ்டர் சிப்ஸ் இந்த புத்தகத்தின் ஊடாக எமக்கு போதிக்கிறார்.

 இன்றைய என் பயணத்தின் நண்பனாக இணைந்துகொண்ட போயிட்டு வாங்க சார்க்கு நான் போய்ட்டு வாங்க சார் என்று விடுப்பு கொடுக்கிறேன்.

 #Goodbye_Mr_Chips
#NIE_Diary
#Readingbooks

Wednesday, 20 November 2019

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க





#என்_வழிப்போக்கன் -16/11/2019

#எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

 எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளியிட்டகத்தினறால் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 62 பக்கங்களை உள்ளடக்கிய இந் நூலே என் காலை வழிப்போக்கனாக இணைந்து கொண்டது.

உலகம் முழுவதும் ஏழைகளுக்கு எதிராக உள்ள அமைப்பு குறித்து கோபமான விமர்சனம் இத்தாலி மாணவர்கள் 8 பேர் தங்களை பெயிலாக்கிய பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வருடம் முழுதும் எழுதிய கடிதத்தின் சாராம்சம்
என்று ஆரம்பிக்கிறது புத்தகத்தின் முதல் பக்கம்.

ஒரு மணித்தியாலத்துக்கு உள்ளே புத்தகத்தை வாசித்து முடிப்பதற்கு தூண்டுகின்றது.

1967 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் திறந்த பாடசாலையில் கற்ற மாணவர்களினால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்த இப் புத்தகம் 2017 ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளதுடன் 2019ஆம் ஆண்டு இறுதியிலேயே என் கையை வந்தடைந்துள்ளதனை இட்டு நான் கவலை அடைகிறேன்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையிலான உறவு என்பது மிகவும் புனிதமானது. அவர்களே எம்மை செதுக்குகிறார்கள். பெற்றோருக்கு பின்னர் எமக்கு மிகவும் உயர்ந்த மனிதர்களாக தோன்றுபவர்கள் ஆசிரியர்களே. ஒரு சந்தர்ப்பத்தில் பெற்றோர் சொல்வது பிழை ஆசிரியர் சொல்வது மட்டுமே சரி என்ற மனோபாவத்தைக்கூட நாங்கள் உள்ளாகிறோம். 

இவ்வாறு ஓராசிரியர் எம் மனதில் இடம் பிடித்து விடுகிறார். பிற்காலத்தில் நாம் எமது ஆசிரியர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் கடிதம் எழுதுகிறோம். இப் பண்பு எம்மிடம் வலுவிழந்து போய்    காணப்படுகின்றது. என்றாலும்  இத்தாலிய மாணவர்களில் 8 பேர் எழுதிய கடிதங்கள் மிகவும் பிரபலம் அடைவதற்கு காரணம் அவர்களின் பாடசாலையும் கல்வி முறைமையும் ஆகும்.

ஒரு மலையில் 20 வீடுகளையே உள்ளடக்கிய ஒரு கிராமத்தில்  கிறிஸ்தவ பாதிரியார் மிலானியினால்  ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் மாணவர்களே ஆசிரியர்கள். ஆசிரியர்களே மாணவர்களாகவும் கற்றலும் பகிர்தலும் என்ற கல்வி முறையை பின்பற்றி வருடங்களாக கற்ற இந்த மாணவர்கள், முறைசார் வகுப்பறைகளில் புறக்கணிக்கப்பட்டதனை ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக எழுதி இருக்கின்ற கடிதத்தில் ஒரு முக்கியமான விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தேவையற்ற சொற்களை அகற்றி தேவையான சொற்களை பயன்படுத்தி எளிமையாக ஒரு செய்தியை எத்தி வைப்பது என்பதனை நாங்கள் பார்பியானா பாடசாலைகளில் கற்றுக் கொண்டோம்".

இது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு விடயம் ஏனெனில் இயந்திரத்துக்குள் மூழ்கிப்போன மாணவச் சமூகம்  நீண்ட நேர வகுப்பறைகளை விரும்பவில்லை.

அவர்களுக்கு செய்தி மட்டுமே தேவை. ஏனையவற்றை தொலைபேசிகளில் மூழ்கி தேடிக் கொள்வர்.

அவர்கள் ஆசிரியரைப் பார்த்து கேட்கும் வினா என்னை ஊடறுத்துச்  சென்றது.

உங்களிடம் கற்ற மாணவன் நான் எங்கிருக்கிறேன் என்று தேடிக்கூட பார்க்காமல் எங்களை நீங்கள் அப்படியே மறந்து விட்டீர்கள்,  ஆனால் திறந்த பாடசாலைகளில் கற்ற நாங்கள் இன்னும் ஒருவரோடொருவர் தொடர்பில் இருக்கிறோம்.

ஆசிரியர்களை பொறுத்தவரை தமது தொழில் வாழ்க்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களை சந்தித்து இருப்பார்கள்.  ஆனால் ஒவ்வொரு மாணவனும் வித்தியாசமானதாகவும் வேறுபட்டதாகும் இருப்பதனை உங்களால் மறுக்க முடியாது.

 சிலநேரம் என்னுடைய எதிர்பார்ப்பு சாத்தியமற்றதாகவும் இருக்கலாம். ஆனால் ஓர் ஆசிரியனாக, ஒரு தாயாக தான்  செதுக்கிய அப் படைப்பை காண்பதில் ஆசை இருக்கும். இது ஒரு கலைஞனாக பார்த்தால் மிகவும் வியப்பானதாகம் இருக்கும்.

இது அவருக்கு மாத்திரமன்றி குறிப்பாக பழைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை எமக்கு தெளிவுப்படுத்துகின்றது.

 பார்பேரியன் திறந்த பாடசாலையில் கற்ற மாணவர்கள் இன்னும் ஒருவரோடொருவர் தொடர்பாக இருக்கிறோம். எமது பாடசாலைகளின் பழைய மாணவர்களாகிய நாங்கள்   இன்னும் தெளிவு பெற வேண்டிய தேவையை இந்த புத்தகம் எமக்கு இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைக்கிறது.

  உலகத்தைப் பற்றியோ அல்லது நவீன உலகை பற்றி போதிய அறிவின்றி அம்மாணவன் தன் வாழ்நாளை கழித்துவிட்டு செல்கின்றனர். அதனால் ஆசிரியர்களை பார்த்து மாணவர்கள் ஒரு சவால் விடுகிறார்கள். நோயாளிகளை வெளித்தள்ளி 10 ஆரோக்கியமானவர்களை சேர்த்துக் கொள்ளும் ஒரு வினோத மருத்துவமனையாக இன்றைய பாடசாலைகள் இருக்கின்றது" என்றார்.

 நீங்கள் அனைவரும்  இடைவிலகல் ஆற்ற அல்லது குறைவாக உள்ள  இயலுமானவரை இயலாதவர்களையும் ஒரே வகுப்பறையில் சமனாக நடத்துவதற்கான வகுப்பறை முறையை ஆசிரியர்களாகிய நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதே இம் மாணவர்களினதும் அதேவேளையில் கல்வியாளர்களதும்  எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

 இச் செயன்முறையின் போது ஆசிரியர்கள் விமர்சிக்கப் படுவதையும் இம் மாணவர்கள் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளதனை கண்டுக்கொள்ளாமல் விடமுடியாது.

உங்களின் கட்டாய பள்ளிகள் ஆண்டுதோறும் பல லட்சம்  குழந்தைகளை பெயிலாகி வெளியேற்றுகின்றன.  அவர்கள் மீண்டும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் பள்ளியை இறக்கவில்லை ஆனால் அவர்கள் எல்லாம் தங்களின் வகுப்பு தோழர்களை இழந்துவிட்டனர்.

பாடசாலையின் மிக முக்கிய வகிபங்கும் நோக்கங்களில் ஒன்றும் சமவயது தோழர்களுடன் பழகுவதற்காண பண்பு ரீதியான விருத்தி ஆகும். அதனையேனும் உறுதி செய்தல் வேண்டும்.

#NIE_Diary
#Thahir_Noorul_Isra

Sunday, 17 November 2019

#ஆயிஷா ( Aisha)ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை kg.



என் வழிப்போக்கன் - 14/11/2019

ஆயிஷா
ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை.

இவள் தான் இன்று என் காலை பயணத்தில் கூட பயணித்தவள்.

 திரு. இரா நடராசன்  ஆயிஷா, ஒரு விஞ்ஞான நூலுக்கான அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை என்னும் குறுநாவலில் 24 பக்கங்களில் ஆயிஷாவை வாழவைத்து மடிந்து போக செய்திருக்கிறார்.

புத்தகத்தை வாசிக்கும்போது இது ஒரு குறுநாவல் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தவில்லை.

வாசித்து முடிந்தபின்னர் ஆரம்பத்தில் நூலாசிரியர் குறிப்பிடுவது போல ஏனைய 12 நூல்களையும் வாசிக்க வேண்டும் என்று ஆசை வந்தது.

ஆயிஷாவின் ஆசிரியர் எழுதிய 12 நூல்களையும் தேடி பயணித்தேன். அப்போதுதான் இது ஒரு புனைகதை என்று தெரியவந்தது.

திரு இரா நடராசன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்.  வாசிக்கும்போது முன்னுரை..... இவ்வளவு பெரிதாக இருக்குமா?  என்ற ஐயம் என்னுள் தோன்றினாலும் முடியும்வரை வாசிக்க உங்கள் புத்தகம் என்னை ஆர்வப் படுத்தியது.

யாரையும் குற்றம் சொல்லாது எம் சுற்றம் நடந்து கொள்வதை அப்பட்டமாக ஆயிஷா கதையில் பேசியுள்ளாள். அவள் வாயிலாக எழுந்த எல்லா வினாக்களும் உங்களின் இளமைக் கால வினாக்களாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இன்றைய கல்வி தொடர்பில் முன்வைக்கப்படும் எல்லா விமர்சனங்களையும் அது உள்ளடக்கியுள்ளது.

இப் புத்தகத்திற்கு ஆயிஷா என்ற பெயர் இட காரணம் என்ன?

எது எப்படியோ நான் சார்ந்த சமூகத்திற்கு ஆயிஷா நல்ல ஒரு படத்தை காட்டி இருக்கிறாள்.

கல்விக்கு வயதுக்கும் தொடர்பில்லை. அது அதுக்கு ஒரு வயது வேண்டும் என்பதனையும் அவள் சரியாக எனக்கு சொல்லி இருக்கிறாள். வேறென்ன வேண்டும் இதை விட பெரிய பாடம்.

தூங்கிக் கொண்டிருக்கும் எம் சமூகம் ஆயிஷாகளை உருவாக்க வேண்டிய தார்மீக கடமையில் இருக்கிறது.

இம் முயற்சியில் என்னுடைய பங்கு என்ன என்று நாம் ஒவ்வொருவரும் சுயவிசாரணை செய்து கொள்வோம்.

ஆயிஷாவை என் கையில் சேர்த்த #உரையாடல்_தொடர்கிறது என்ற முகநூல் நட்புக்கு நன்றி.

#Thahir_Noorul_Isra
#NIE_Diary
#Aisha_Ira_Nadarasa

Wednesday, 6 November 2019

சில நிமிடங்கள் பார்வை இழந்த என் விழிகள் (Sighted minutes of my eyes)

சில நிமிடங்கள் பார்வை இழந்த என் விழிகள்.

கற்றல் என்பது மனித கருவில்  இருந்து ஆரம்பிக்கின்றது என விஞ்ஞானம் குறிப்பிடுகின்றது. இதனாலே கற்றல் என்பது வாழ்நாள் முழுதும் இடம்பெறும் ஒரு செயற்பாடு என உளவியல் குறித்துக் காட்டுகிறது. நாம் எவ் விடயங்களை கற்க வேண்டும் என்று பட்டியலிட்டு கற்பதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. மனிதன் இடத்துக்கிடம், சூழலுக்கேற்பவும்  சந்தர்ப்பத்திற்கேற்பவும்  கற்கின்றான்.

சிறுபராயம் முதல் எமக்கு வழிகாட்டிய ஒரு விடயமே பிறருக்கு உதவுதல். இது ஒரு குணப் பண்பாக நாம் எம்மில் வளர்த்து வந்த ஒரு விடயம். ஆனால் பிறருக்கு உதவுவதற்கும் நாங்கள் படிக்க வேண்டுமா என சிந்தித்திருக்கிறோமா? 

‌மிக அண்மையிலேயே நான் பிறருக்கு உதவவும் கற்றல் வேண்டும் எனும் விடயத்தை கற்றுக்கொண்டேன். 

ஒரு நபருக்கு நாங்கள் உதவி செய்ய முற்படுதல்  என்பது மிக அழகான  பண்பாகும். நாங்கள் உதவி செய்யும் பொழுது எங்களுக்கு தேவையான சந்தர்ப்பங்களில் உதவிகள் கிடைக்கின்றன இதனை எம் வாழ்நாளில் நாங்கள் உணர்ந்திருப்போம். எமக்குக் கிடைத்த மகிழ்ச்சியினால் நாம் தொடர்ந்தும் இன்னொருவருக்கு  உதவி செய்ய முன் வருகிறோம். இவ்வாறு உதவி செய்வதற்கு நாம் முறையாக கற்றுள்ளோமா? அல்லது கற்பிக்கப்பட்டுள்ளோமா?  என்ற வினா எழுந்ததுண்டா? இதுவே என்னை ஆச்சரியத்தில் உட்படுத்திய விடயம் ஏனெனில் எதை செய்வதென்றாலும் முறையாக செய்தல் வேண்டும். அதற்கு முறையாக கற்றல் வேண்டும்.

‌ முதல் விடையம்

உதவி செய்பவர் உதவி செய்ய விருப்போடு இருப்பது போல உதவி பெருபவர் அவரின் உதவியை பெற தேவையோடு இருக்கிறாரா? என்பதனை ஏதேனும் ஒரு வகையில் உறுதிப்படுத்தல் வேண்டும்.

பிறருக்கு உதவுதல் என்ற பாடத்தில்  எவ்வாறு பிறருக்கு உதவுதல் வேண்டும் என்பதனை பாடப் புத்தகங்கள் நமக்கு சொல்லித் தருகின்றன. பார்வை குறைபாடுடைய நபர் வெள்ளை பிரம்புடன் பாதையை கடக்க தயாராக இருப்பார் அவரின் கையைப் பிடித்து கொண்டு மறு புறத்தில் அவரை சேர்ப்பது கூட ஒரு உதவி என்பதனை அழகாக  அது எடுத்துக் காட்டியுள்ளது.  நாங்கள் பல சந்தர்ப்பங்களில் பார்வை குறைபாடு உடைய ஒரு நபரை இவ்வாறு பாதையில் ஒரு புறத்திலிருந்து மறுப்பு இடத்திற்கு அழைத்துச் சென்று இருப்போம்.

உங்களுடைய  புறங்கையால் அவருடைய புறங்கையை தட்டுவது ஊடாக நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன். அவ்வாறே அவரின் புறங்கையால் உங்களது கையை தட்டும் போது அவர்  உதவியை ஏற்க தயாராக இருக்கிறார் என்பதனை அறிந்து கொள்கிறோம்.  

யாரும் எப்போதும்  தன்னுடைய தேவையை நிறைவு செய்து கொள்வதற்கு இன்னொருவரின் உதவியைப் பெறவும் தங்கி நிற்கவும் ஒருபோதும் விரும்புவதில்லை.

கடவுள் ஒவ்வொருவருக்கும் விசித்திரமான ஆற்றல்களையும் உள்ளுணர்வையும் கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் இயலாமை உடைய ஒரு நபராக இருந்தாலும்கூட கடவுள் எல்லோருக்கும் வித்தியாசமான திறமைகளையும், ஆளுமைகளையும், பண்புகளையும், குணங்களையும், கொடுத்திருக்கிறார். அடிப்படையில் அவற்றை பிரயோகித்து தனது வாழ்நாளில் இன்னொருவரிடம் தங்கி நிற்காமல் செல்வதற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். நாம் சுயமாக எனது உதவியை செய்ய முற்படும் செயலானது அவருடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான சந்தர்ப்பங்களை முடக்கும் செயற்பாடாகும்.

ஒருவனுடைய  கால் உரையில் தன்னுடைய காலைவிட்டு பார்க்கும் போது தான் அதனுடைய வேறுபாடுகளையும் அதனுடைய விசித்திரங்களையும் எங்களால் முறையாக உணர்ந்துகொள்ள முடியும்.  ஒரு நாள் பார்வைக் குறைபாடுடைய நபராக நாங்கள் இருந்து பார்த்தால்தான் அவர்களுடைய உணர்வுகளை எங்களால் முற்றாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். ஒரு சில மணித்தியாலங்கள் பார்வை குறைபாடு உடைய நபராக மாரிய அன்று நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம் இது.  இப்பாடம் உங்களுக்கும் உதவியாக அமையும் என்று கருதியதால் இதனை பதிவிடுகிறேன்.
நன்றி.
7/11/2019
#NIE_Diaryll

Saturday, 2 November 2019

விதி (Fate)



விதி


எல்லோரும் எழுதிய பின் - நான்
எழுத என்ன இருக்கிறது - அவன்
எழுதிய பின் அதில் - நான்
எழுத என்ன இருக்கிறது.

வாசித்து ஓய்ந்த பின்னர்
விமர்சிக்க ஏது இருக்கிறது - அவன்
வாசித்து முடித்த பின்னர் - அதில்
 விமர்சிக்க என்ன  இருக்கிறது.

காதுக் குத்தி அதன்
துளை தூர்ந்து  போகும் முன்
கறிவேப்பிலைக் குச்சிப் போடும்
எனது உம்மா.

ஆள்துளையிட்டு
துளை தூர்ந்து போகாமல் - இட
ஒரு கம்புக்  குச்சிகூட
கிடைக்காமல் போனதோ!

பானையில் இருந்தாலே
அகப்பையில் வரும்
தலைக்குல் இருப்பதெல்லாம்
மூலையே இல்லாமல்
மூளையில்லை

பிந்தி வந்த
என் கவிதை
ஏந்தி வந்த செய்தி கேட்டீர்
முந்தி வந்தவனுக்கு
பிந்தி வந்தவன்
சொன்ன செய்தி
குழி வெட்டினால்
வெட்டிய குழியில்
வீழ்ந்தே சாவாய்.

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...