அன்மையில் ஒரு தாயை சந்தித்தேன்.பல்வேறு விடயங்களை பேசினார். இடையில் அவர் சொல்ல தொடங்கினார்.
என் மகனுக்கு ஒரு காதல் தொடர்பு இருந்தது. அது எதிர்பாராத விதமாக முறிவடைந்துவிட்டது. அதனால் 3 மாதங்களாக எனது மகன் வீட்டுக்கு வரவே இல்லை. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை இருப்பதும் ஒரே ஒரு பிள்ளை.
எனக்கு அவன் ஒத்தை பிள்ளையாக இருப்பது ஒரு பிரச்சினையாக தோன்றியது. உடன் பிறப்புகள் இருந்திருந்தால் அவர்களுடன் தன் வேதனையை பகிர்ந்து கொண்டிருப்பான். என்ன செய்வதென்று தெரியவில்லை.
நாங்கள் மிக அன்பாகவும் நண்பர்களாக பழகினோம். ஒரு பெண் பிள்ளையை வீதியில் கண்டால் தனக்கு ஏற்படும் உணர்வை தன் தந்தையுடன் அவன் பகிர்ந்து கொண்டான்.
ஆனால் இப்போதெல்லாம் தந்தை இருக்கும் இடத்திலே இருக்கமால் வேறு திசையில் சென்றுவிடுவான். தந்தை ஒரு பக்கமும் தனையன் இன்னொரு பக்கம் இருக்கிறார்கள்.
என்னிடம் எப்போதும் அவனுடைய இளமை காலத்தை நான் இல்லாது செய்துவிட்டேன் என்று குறை கூறுவான்.
அவனுடைய இளமைக்காலத்தில் நாங்கள் மிகவும் வறுமையில் இருந்தோம். எங்களுக்கென்று ஒரு சொந்தவீடு இருக்கவில்லை நாங்கள் வாடகை வீட்டில் இருந்தோம். மகனை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. அவனை நான் பணி செய்யும் இடத்திலேயே வளர்ந்தேன்.
அவனுடைய உணர்வுகள் ஏதோ எனக்கு இறப்பர் போன்று இருக்கிறது. இலகுவாக எந்த உணர்வுக்கும் தன்னை இசைவாகப் படுத்திக் கொள்கிறான் இல்லை. எங்கு தொடங்குவது எங்கு முடிப்பது என்று தெரியவில்லை.
அவனுடைய முறிவடைந்த காதல் தொடர்பாக நாங்கள் எதையும் அவனுடன் கதைப்பதில்லை. இவ் வருடத்தின் ஆரம்பத்தில் மாத்திரம் நான் அதிக விடுமுறைகளை எடுத்து விட்டேன். இப்போதெல்லாம் நாம் அமைதியற்று இருக்கிறோம். சில நாட்களில் புகைத்தல் மனம் எமக்கு வருகிறது.
பிள்ளைகள் என்போர் பெற்றோருக்கு மிகவும் விருப்பமானவர்கள். அதேவேளை பொறுப்பு மிக்கவர்கள். அவர்களிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு கழிக்கிறோம். அவர்களது எதிர்கால வாழ்வு தொடர்பாக நாங்களும் இணைந்து திட்டமிடுகிறோம். அவர்களின் இன்ப துன்பங்களில் சரிபங்கு எடுக்கிறோம்.
ஆனால் சில வேளை அவர்கள் எடுக்கின்ற முடிவுகள் பிழையாக அமையும் பொழுது பெற்றோர்களிடம் தம் மனவெழுச்சியை காட்ட முற்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது இரண்டுக்கும் கெட்ட நிலையாக இருக்கிறது.
அழுகையும் ஆதங்கமுமாக தன் கதையை சொல்லி முடித்தார். இதில் ஒத்துணர்வு சொல்ல எனக்கு என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை.
மிக நீண்ட நேரம் அவரது உரையாடலை உன்னிப்பாகச் செவிமடுத்தேன். அவரது வார்த்தைகளை சொல்லிப் பார்த்தேன். பிறகு தான் ஒரு விடயத்தை புரிந்து கொண்டேன்.
அங்கு தந்தைக்கும் பிள்ளைக்கும் இருக்கும் ஆரோக்கியமான உறவு போன்று தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் இல்லை.
ஒரு பெண்ணோடு தன் எதிர்கால குடும்ப வாழ்வை வாழ்வதற்கு தேர்ந்தெடுத்த நம்பிக்கைக்குரியவள். எல்லாமும் ஆன அந்தப்பெண் மோசடி செய்யும் பொழுது ஒரு ஆண் பிள்ளையின் உணர்வுகளை ஒரு பெண்ணிடம் சொல்வதற்கு எத்தனிக்கும் அந்த முயற்சியில் தன் தாய் மீது ஏற்கனவே உள்ள வெறுப்பு அவனை பெற்றோர்களிடம் இருந்து தூரப்படுத்துகிறது.
தன்னுடைய வேதனையில் இன்னும் தன் பெற்றோர் வேதனை படக்கூடாது என்று பிள்ளைகள் பிழையான முடிவுகளுக்கும் தவறான பழக்கங்களுக்கு சென்று விடுகிறார்கள்.
இந்த முடிவுகளை பெற்றோரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.
சமவயது நண்பர்கள் தொடர்பாக அவரிடம் கேட்டபொழுது யாருமே அந்த அளவு நட்பாக அவனுடன் பழகவில்லை என்று குறிப்பிட்டார்.
அன்புக்குரிய பெற்றோர்களே வாசகர்களே நான் காணும் மனிதர்களிடம் நிறைய பாடங்களை நான் கற்றுக்கொள்கிறேன்.
இந்த மனிதரிடமும் நிறைய பாடங்களை நீங்கள் கற்று இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
நான் காணும் மனிதர்கள் போன்று நீங்களும் பல மனிதர்களை காண்பீர்கள். அவர்களிடம் முடியுமானவரை வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொள்வோம்.
பாடப்புத்தகங்கள் சுமந்து வராத வாழ்க்கை பாடங்களை சுமந்து வருபவர்கள் தான் தினம்தோறும் நாம் காணும் மனிதர்கள்.
மீண்டும் ஒரு உண்மை கதையோடு உங்களை சந்திக்கிறேன்.
நன்றி
நன்றி
No comments:
Post a Comment