வழி நெடுகிலும்
காமம்
கன்னியின்
கன்னித் தன்மை
கலைகிறது வழி
நெடுகிலும்.
பெண்ணாயப் பிறந்த குற்றத்துக்காய்,
பெற்றவளை
வஞ்சிக்கிறாள் பேதை
கொங்கைகளும்
யோனியும்
கொடுத்த
கடவுளுக்கு – அவள்
சமர்பிக்கிறாள்
குற்றப்
பத்திரிகை.
குற்றத்தின்
தலைப்பு
வழி நெடுகிலும்
காமம்
மூடிய ஆடைக்குள்
- அவள்
மறைத்தது ஒன்றும்
-அவளது
கொங்கைகளையும்
யோனியையும் - அல்ல
மானம் என்ற மயிர்
-அவள் கவரி
மான்
திரும்பிய
சக்கரத்தோடு ஒருத்தன்
திருத்தமாய்
சொன்னது – அவளைப் பார்த்து
“நான் உன்னோடு
படுக்க வேண்டும்”
நடு ரோட்டில்
மயங்கி விழுந்தாள்
விழுந்தது
ஒற்றை மயிர் - அல்ல
மானம் எனும்
மானுடம்.
கடவுளுக்கு ஒரு
குற்றப் பத்திரிகை
ஏன் நீ பெண்ணை
கொங்கைகளோடும்
யோனியோடும் படைத்தாய்
ஏன் நீ பெண்ணைப்
பாலுறுப்பற்ற
பாலினமாய் படைக்க வில்லை.
மூட வேண்டியது
ஒன்றும்
அவள் முலைகளை
அல்ல
தோண்டி எடுக்க
வேண்டியது
அவன் இரு
கண்களையும்
வெட்டி வீச
வேண்டியது – ஒன்றும்
நகங்களை அல்ல
விஷமாய்க்
கொழுந்து விட்டெரியும்
அவன் காம உணர்வை.
இறப்பது ஒன்றும்
ஆண் அல்ல
இழப்பது எல்லாம்
பெண்ணே
வழி நெடுகிலும்
காமம்
அடைத்த
பேருந்தில்
அரைப்பது ஒன்றும்
பெண்ணல்ல –அவள்
அழுங்கி, ஒதுங்கி, அசைவதால்
தொடர்ந்தும்…
முட்டியும்,
மோதியும், உராய்ந்தும்
காம உணர்வில்
திளைப்பதெல்லாம்
பெண்ணல்ல
பெண்ணை பெற்ற
அப்பன்கள்
வழி நெடுகிலும்
காமம்
உறக்கத்தில்
ஊறும் கைகள்
உறங்குவது போல்
நடிக்கும் இமைகள்
துடித்து போய்
மயங்கியும்,
மடுத்தும், சரிந்தும்,
உருண்டால் மங்கை
வழி நெடுகிலும்
காமம்.
சொன்னால்
விமர்சனங்களும்,
பெண்ணின் நடத்தை
ரீதியாக
காரசாரமான
விவாதங்கள்
பெண்ணிலைவாதி
என்ற முத்திரைகளும்
பரிந்துரைகளும்,
பெண் என்ற
பண்டத்தைப்
பிண்டமாக மாற்ற
பெண் அற்ற
உரையாடல்களும்
முடிவுகளும்
இன்றும்
ஓயவில்லை.
கடவுளுக்கு ஒரு
குற்றப்பத்திரிகை
வழி நெடுகிலும்
காமம்
ஒலங்கள் இன்று
கேட்பதெல்லாம்
பாலுறுப்பே அற்ற
பெண்ணை.
காமம் அற்ற ஒரு
காதலை
ஆணைப் போற்றும்
பெண்மையை
பெண்மையை
மதிக்கும் ஆண்மையை.