Friday, 7 August 2020

 

குணப்படுத்தலுக்கு அப்பாலான பராமரிப்பு

10/10/2015 சர்வதேச குணப்படுத்தலுக்கு அப்பாலான பராமரிப்பு (Palliative Care) தினமாகும். இத்துறை சார்ந்த எனது அனுபவத்தில் நான் சந்தித்த மாரியப்பன் தாதா பற்றி உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

அன்று மாலை நேரம், இச்சேவையை பெற தகுதியானவர்களை கண்டறிவதற்காக கிராமத்திற்குள் நுழைந்தோம். எம். ஜி. ஆர் சிலையின் அருகில், சில வயதான தாதாக்கள் டாம் விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னும் சிலரோ தமது அனுபவங்களையும் அரசியல் விவகாரங்களையும் நாட்டுநடப்புகளையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர். மரபு மாறாத பாட்டிமார் சிலரோ நவீனத்துடன் ஒன்றிப்போய் மாலையில் பொடி நடையில் ஊரை வலம்வந்துக் கொண்டிருந்தனர். துடிப்பு அடங்காத இளங்காளைகள்  பள்ளி முடித்து கிராமத்து சொந்தங்களோடு தமது அன்றைய நாளின் சுவாரஷ்யங்களை அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். இளம் சிறுசுகளோ இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். இன்னும் சிலர் கோயில் பிள்ளையாரைக் காண்பதற்கு நடந்துக் கொண்டிருந்தனர். என்னைகண்டதும்,

டேய் அக்கா வந்துடாங்கடா

என பிஞ்சுக் கூட்டம் ஓடிவந்தது. என்னுடன் வந்த நண்;பர்களையும் சூழ்ந்துக்கொண்டு அன்றைய நாளின் எமது திட்டத்தை அறிய பல கேள்விக்கணைகளைத் தொடுத்தனர் இறுதியாக படுத்தபடுக்கையில் வீட்டில் இருப்பவர்களை; காணலாம் என பரிந்துரைக்க, வாங்க அக்கா நான் காட்டுரன் என அழைத்தான் கனேஸ்.

கனேஸ் முன்னே செல்ல எல்லோரும் அவனை பின் தொடர்ந்தோம். நீண்டு சென்ற குறுக்கு பாதையில் வலைந்தும் நெலிந்தும் சென்று ஒரு தகர கொட்டாரத்துக்கு முன்னே நின்றான். நானும் என்னுடன் வந்த நன்பர்களும் முகத்தை, முகத்தைப் பார்த்துக் கொண்டோம். ஓன்றும் புரியாது நிற்பதை கண்ட கனேஸ்,

இங்க தான் அக்கா மாறியப்பன் தாதா இருக்காங்கஎன்றான்.

சற்றே திறந்திருந்த, துருபிடித்த, இடைக்கிடையே ஓட்டைவிழுந்து காணப்பட்டது அந்தக்கதவு. ஆடு மாடுகள் மழையில் நனையாது மறைக்கப்பட்ட கொட்டாரத்தை ஒத்திருந்தது. ஆனாலும் அங்கு மழை பெய்தால் தாரளமாக தண்ணீர் வீட்டுக்குள் வரவாய்ப்பும் இருந்தது. சுற்றும் காடு. நிற்க முடியாத மனம். பாதாள கிணற்றில் இருந்து வெளியே வரதுடிக்கும் ஒரு வரின் அடைத்த முனங்கல் சத்தம். அதுவும் உற்று கேட்டாலே செவி தொடும். எங்கிருந்து வருகிறது இந்த முனங்கள் சத்தம் என ஆராய்வதற்குள் கமலாக்கா,

;அவர் அப்படி தாங்க.....  என பத்திய ஊதுபத்திவாசனையோடு வந்தார்.

 இது எங்க மாமாஎங்க ஆத்து காரர்ட அப்பா…’

  ஆறு வருசத்துக்கு முன்னுக்கு இவருக்கு கண்ணு தெரியாம போச்சி

   அன்னக்கி தொட்டு மகள்டயும் மகன்டயும் என்று அடிப்பட்டுகிட்டு கெடக்காரு

   இப்ப ரெண்டு வருசமா இங்க தான் இரு காரு…’

ஆங்கங்க பேண்டுவெச்சிருவாரு, எச்சிதுப்பிருவாரு, சாப்பாட்டுக்கும் ஆயுக்கும் கூட வித்தியாசம் தெரியாது, எப்பபார்த்தாலும் கத்திகிட்டு இருப்பாரு, ராவுல யாருக்குமே தூக்கம் இல்ல... அதனால அவர இதுகுள்ள போட்டுட்டம்....என்றார் கமலாக்கா.

மெதுவாக கதவு திறந்தேன். கும்மிருட்டில் அறுபது வயது மதிக்கத்தக்க மாரியப்பன் தாதா கதவுதிறக்கும் சத்தம் கேட்டு சற்று உரக்க புலம்பத் தொடங்கினார். சுவரோரம் படுத்து கிடந்த அவரின், பிஞ்சி போன பாயின் ஓர் ஒரத்தை எலி கடித்துக் கொண்டிருந்தது. தெரு வோரத்தில் அலைந்து திரியும் பைத்தியகாரரின் நீண்ட சடை, கலி பிடித்து சகதியில் பிரண்டிருந்தது, அவரது தலை. வளர்ந்து விரிந்திருந்த தாடி எனக்கு தாடி அறுந்த வேடனை ஞாபகப்படுத்தியது. ஒரு பக்கம் எச்சில் படிக்கம், சாப்பாட்டு பீங்கான், குறுகிய அந்த அறையில் ஒரு மூலையில் கழிவறையும் அது நிரம்பிய மனமும் என்னை வெகு நேரம் அங்கு இருக்கவிடவில்லை. என்றாலும் அவர் கையை பிடித்த நான்,

தாதா எப்படி இருக்கிங்கஎன கேட்டபோது அவரின் கண்கள் கசிந்தன.

யாருமா நீஎன கேட்ட தாதாவுக்கு என்னிடம் இருந்த ஒரே பதில்

நான் உங்கள் பேத்தி தாதாஅப்படியே என் கைகளை பற்றி முத்தமிட்டார் தாதா.

ஏன்மா ஏன் கூட பேசமாட்டேங்குர

எங்கம்மா இருந்த இத்தன நாள’;

என்ற கேள்வி என்னுள் இனம் தெரியாத உணர்வுகளை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு அவர் ஒரு மனித உறவோடு உறவாடும் மகிழ்ச்சி அவர் வடித்த கண்ணீர்; பறை சாற்றிற்று. இறுகிப் பற்றியிருந்த அவர் கையை மெதுவாக விடுவித்துக் கொண்டு நகரத் தொடங்கினோம். உள்ளே இருந்த இருள் வெளியேயும் சூழ்ந்துக் கொண்டது.

குணப்படுத்தலுக்கு அப்பாலான பாராமரிப்பின் அருமையும் அதன் தேவையையும் புரியவைத்த மாரியப்பன் தாதாவின் வாழ்க்கை. அவரின் வாழ்க்கைதரத்தை உயர்த்துவது தொடர்பில் சிந்திக்க தொடங்கினோம். பணத்தைவிட மனித மனங்கள் வலுவானவை என்பதில் உறுதியான நம்பிக்கையுடன் நானும் என் சகநண்பர்களும் இணைந்;து திட்டமிடத் தொடங்கினோம்.

அன்று ஞாயிற்றுகிழமை, எல்லோரும் மாரியப்பன் தாதாவின் வீட்டின் முன் ஒன்று சேர்ந்தோம். தாதாவுக்கு அன்று குதுகலம்அவரை சுத்தப்படுத்தி புது ஆடை உடுத்தி, நகம் மற்றும் தலை முடியை கலைந்து அவரின் தேவைகளை ஒரு சிலர் நோக்கிக்கொள்ள, மற்றய நண்பர்களோ தாதாவின் இருண்ட கொட்டாரத்தை சுத்தப்படுத்தத் தொடங்கினர். பின்னர் பயிற்சி பெற்ற (Palliative Care) மருத்துவர் மற்றும் தாதியையும் மாரியப்பன் தாதாவின் வீட்டுக்கு வரவழைத்தோம். அடிப்படை மருத்துவ உதவிகள் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டன. எங்களுடைய இந்தசெயலைக் கண்ட கிராமத்து இளைஞர்களும் கைகோர்த்தனர். கனேஸின் அம்மா அவர் வீட்டில் ஒதுக்கி வைத்திருந்த கட்டிலை மாரியப்பன் தாதாவுக்கு அன்பளிப்பு செய்தார். எங்கள் முயற்சியினால் நெகிழ்வடைந்த கமலாக்கா எமக்கு சிற்றூண்டி தயாரித்து உபசரித்தார். வெளிச்சம் அற்றிருந்த அவரின் அறைக்கு ஒரு மின் குமிழும் மாட்டப்பட்டது. மாரியப்பன் தாதாவின் அறையும் வாழ்வும் ஒளி பெற்றது .வெளியே வந்தபோது முழு உலகமும் குணப்படுத்தலுக்கு அப்பாலான பராமரிப்பு குறித்து விழிப்படைந்த ஒளி தெரிந்தது.

குணப்படுத்தலுக்கு அப்பாலான பாராமரிப்பை ஐக்கிய நாடுகள் தாபனம் மனித உரிமையென பிரகடனப் படுத்தியுள்ளது. அவ் உரிமையை வென்றெடுப்பதும் அதனை அனுபவிப்பதும் மானுடபிறவியான எமது கடமையாகும்.

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...