Thursday, 25 June 2015

காவல்துறை அறிக்கையில் , கண்ணீர் துளிகள் மிதக்கிறது.



காணாமல் போகிறேன்- நான்
காணாமல் போனவர்களுடன் சேர்ந்து
காணாமல் போகிறேன்.

அதிகாலை துயில் கலைந்து
அலுவலகத்தில் காணாமல் போகிறேன்.
ஆவண கோவைகளை
அடுக்கடுக்காய் புரட்டிய போது
காணாமல் போகிறேன்- நான்
காணாமல் போனவர்களுடன்.

ஆறுமுகமும் ஆதம்பாவாவும்
சோப்பு வாங்க போனவர்கள் -இன்று
சோறு போட வக்கில்லாமல் குடும்பம்
ஆ ! என வாய் திறக்கிறது
ஓரு இலட்சம் ரூபாவுக்கு

அகலங்கவும், அகஸ்டினும்
இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டனராம்
அவன் இழப்பீட்டுக்காய் - நடக்கிறது.
அடிதடிஉறவுக்குள்ளே.
காணாமல் போகிறேன் தினம் தினம்
காணாமல் போனவர்களுடன்.
இதுவல்ல சுவாராஸ்யம் - எனக்குள்ளே
ஓராயிரம் கேள்விகள்.
ஆகையால் நித்திரை இல்லாமல்
காணாமல் போகிறேன் - நான்
காணாமல் போனவர்களுடன்..

காணாமல் போய் திரும்பவில்லை என்பதற்காய்
இறந்துவிட்டான் என
இறப்புச்சான்றிதழ் வழங்குகிறது
அரசு.

இறந்தவன் திருமணம் முடிக்கிறான் - எப்படி?
இறந்த ஒருவனுக்கு வாழ்க்கைபடுகிறாள் ஒருத்தி எப்படி?
இறந்த அப்பனுக்கு புள்ளை பாக்கியம் - எப்படி?
இதுதான் இறந்தும் வாழ்தல் - என்பதோ?

அரசுக்கு எதிராய் செயற்படவில்லை
இழப்பீடு வழங்கப்படவில்லை.
ஆவண கோவை நீள்கிறது.
காவல்துறை அறிக்கையில்
கண்ணீர் துளிகள் மிதக்கிறது.

முடிவில்லா கேள்விகள் எனக்குள்ளே
கொலையும் கற்பழிப்பும் - இன்று
கலாசாரமான போது.
காணாமல் போன போதும்,
இறப்புச் சான்றிதலுடன்
கொலையும் கற்பழிப்பையும் செய்தால்,
எந்த நீதிமன்றம் தயாராக இருக்கிறது.
இறந்தவனை மீள் விசாரணை செய்ய.

இங்கே இறந்த உடல்கள் கூட
உயிர் வாழ்கின்றன.
நான் காணாமல் போகிறேன்
தினம் தினம்
காணாமல் போனவர்களுடன்.

25/06/2015.
செல்வி. தாஹிர் நூருல் இஸ்ரா,
புனர்வாழ்வு உதவியாளர்,
புனர்வாழ்வு அதிகாரசபை,
பொரள்ளை -08

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...